×

ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணமோசடி என்எஸ்ஜி அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் பறிமுதல்

புதுடெல்லி: ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணமோசடி செய்த என்எஸ்ஜி அதிகாரி பிரவீன் யாதவின் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த பிரவீன் யாதவ், அரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் கண்காணிப்பு அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் பல ஆண்டுகளாக தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கட்டிட ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நூற்றுக்கணக்கானோரிடம் இருந்து ரூ.125 கோடி அளவுக்கு பணம் பெற்று ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரவீன் யாதவ், அவரது மனைவி மம்தா யாதவ், மற்றும் அவரது சகோதரி ரிதுராஜ் ஆகியோரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குருகிராம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ஏற்கனவே ரூ.14 கோடி ரொக்கப்பணம், தங்க நகைகள், 7 விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், பிரவீன் யாதவின் குடும்ப உறுப்பினர்களின் ரூ.45.20 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பணமோசடி என்எஸ்ஜி அதிகாரியின் ரூ.45 கோடி சொத்துகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NSG ,New Delhi ,Praveen Yadav ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...