×

ஆனி மாதத்தின் தெய்வீக சக்திகளும் ராசி பலன்களும்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

சூரிய பகவானின் சஞ்சாரத்தை அடிப்படையாகக்கொண்டே ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகின்றது – ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி! பித்ருகாரகர், சரீரகாரகர், என மிகப் புராதன ஜோதிட நூல்களிலும், வேதங்கள், உபநிஷத்துக்கள், காவிய ரத்தினங்களாகிய ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் மகாபாரதம் ஆகியவற்றிலும், போற்றப்படும் சூரியனே நமது இதயப் பகுதியையும், ரத்த ஓட்டத்தையும், சருமத்தையும் பாதுகாக்கும் கிரகம் என “அஷ்டாங்க ஹ்ருதயம்”, “சரகர் ஸம்ஹிதை”, “சுஸ்ருத ஸம்ஹிதை” ஆகிய பண்டைய ஜோதிட, மருத்துவ நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமை படைத்த சூரியன், இதுவரை அவரது பகை வீடான ரிஷப ராசியில் சஞ்சரித்து வந்துள்ளார்.

அவர் இப்போது அந்த ரிஷப ராசியை விட்டு, மற்றோர் பகை வீடான, மிதுனத்திற்கு மாறி, சஞ்சரிக்கும் காலத்தைத்தான், ஆனி மாதம் எனப் போற்றுகிறோம். மிதுனம், வித்யாகாரகர் எனப் புகழ்வாய்ந்த புதன் கிரகத்தின் ஆட்சி வீடாகும். கல்விக்கும், பண்பாட்டிற்கும், அறிவுச் செல்வத்திற்கும் நாயகனாவார், புதன்! இந்த ஆனிமாதம் மகான்களுக்கும், துறவிகளுக்கும், ஆச்சார்ய மகா புருஷர்களுக்கும், உகந்த மாதமாகும். சந்நியாசிகள் சதா யாத்திரைகளிலேயே இருக்க வேண்டும் எனவும், தினமும் ஓர் ஊர் என சஞ்சாரம் செய்து, தர்ம நெறிமுறையை மக்களிடையே உபதேசம் செய்துவர வேண்டும் என்பது நியதியாகும்!! அப்போதுதான், மக்களுக்கு, தர்மம், நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றில் மனம் நிலைத்து நிற்கும்.

மக்கள் சதா அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்தி, நேர்மையிலிருந்து தவறாமல் இருப்பதற்காகவே, சந்நியாசிகள் அடிக்கடி அவர்களைச் சந்திக்க வேண்டும் – அவர்களிடையே தர்ம நெறிமுறையை நினைவுபடுத்த வேண்டும் என்ற தெய்வீக விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இவ்விதம் சதா ஸர்வமும் சஞ்சாரத்திலேயே இருக்க வேண்டிய துறவிகளுக்கும், ஓய்வு வேண்டுமல்லவா? அவர்கள் உடல் நலத்துடன் இருந்தால்தான், மக்களை நல்வழிப்படுத்த முடியும். இதனைக் கருத்தில்கொண்டு, வேதகாலத்திலிருந்தே, நான்கு மாதங்களுக்கு (சாதுர் மாசம்) மகான்கள் ஒரே ஊரில் தங்கி, தங்கள் தெய்வீகப் பணிகளைச் செய்து வர வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், சாதுர் மாத விரதத்தைக் கடைப்பிடிப்பதில் பல வேறுபாடுகள் உள்ளன.

இருப்பினும், சாதுர்மாத விரதத்தின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான்! அத்தகைய தெய்வீகச் சாதுர்மாதக் காலம், இந்த ஆனி மாதம் 15ம் தேதி (ஜூன் 30, 2023) ஆரம்பமாகின்றது. ஆனி 18ம் தேதி (ஜூலை3, 2023) வேத வியாசரையும், நமக்குக் கல்விச் செல்வத்தை அளித்தருளும் ஆச்சார்யர்கள், குரு ஆகியோரையும் பூஜித்து, அவர்களது ஆசியைப் பெறுகின்றோம். இந்நன்னாளையே வியாச பூஜா தினம், மற்றும் குருபூர்ணிமா என்றும் கொண்டாடுகிறோம்.

“செல்வத்துள் ெசல்வம் கல்விச் செல்வம்….” என்பது ஆன்றோர் வாக்கு. அழியாத – அழிக்க முடியாத, செல்வமல்லவா கல்விச் செல்வம்! அத்தகைய மாபெரும் ஐஸ்வர்யத்தை நமக்கு அளித்தருளும் குருவை இன்று நாம் பூஜிக்கின்றோம். இம்மாதத்தின் தனிச்சிறப்பே இதுதான். நான்கு வேதங்களையும் நமக்கு அளித்தருளிய வியாசபகவானையும், இன்றுதான் நாம் வணங்கி, அவரது ஆசியையும் பெறுகிறோம்.

இத்தகைய தெய்வீகப் பெருமையும், சக்தியும் கொண்டு திகழும் இந்த ஆனி மாதத்தில், ஒவ்வொரு ராசியினருக்கும், ஏற்படவிருக்கும், நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணித்து, “தினகரன்” வாசக அன்பர்களுக்கு சமர்ப்பிப்பதில் மனநிறைவைப் பெறுகின்றோம். வாழ்க வளமுடனும், உடல் நலனுடனும்…! இம்மாதத்தின் சிறப்புகளும், புண்ணிய நன்னாட்களும்…!

ஆனி 1 (16.6.2023): மாத சிவராத்திரி – இன்று விரதமிருந்து, இரவில் கண்விழித்து ஓம் நமசிவாய எனும் திவ்ய நாமத்தை ஜபித்தால், ஏழேழு பிறவிப் பாவங்களும் அகலும்.

ஆனி 7 (22.6.2023) சதுர்த்தி விரதம்: ஆண்டிற்கு 12 மாதங்களிலும் நிகழும் அனைத்து சதுர்த்தியன்றும், உபவாசம் இருந்து, பக்தி, சிரத்தையுடன் விநாயகப் பெருமானை அருகம்புல்லினால் பூஜைசெய்வித்து, 18 கொழுக்கட்டைகள் நைவேத்தியத்துடன், வெற்றிலை, பாக்கு, பழவகைகள் உபசாரங்களுடன் பூஜித்து, வணங்கி, பிரம்மச்சாரிக்கு அன்னதானமும், வசதிக்கு ஏற்றாற்போல் தட்சிணையும் கொடுத்து உபசரித்தால், நினைத்த காரியங்கள் அனைத்தையும் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ளலாம். இன்றைய தினம் சந்திர தரிசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

ஆனி 8 (23.6.2023): கௌரி விரதம் – பெற்றதாய் – சேய்நலம் காக்க, உடலளவிலும், மனத்தளவிலும் அனைத்துவித அபிலாஷைகளும் நிறைவேறிடவும், பெண்மணிகள் அனுஷ்டிக்கும் விரதம். மாணிக்கவாசகப் பெருமானின் திருஅவதார நட்சத்திரம்.

ஆனி 9 (24.6.2023): சுக்லபட்ச சஷ்டிவிரதம். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நோய்நொடியில்லாது, ஆரோக்கியத்துடன்கூடிய நீண்ட ஆயுள், புத்திக் கூர்மை, சகலவிதமான ஐஸ்வர்யத்தையும் பெற்று வாழ்க்கையில் மிக உன்னத நிலையை அடைவர்.

ஆனி 10 (25.6.2023): நடராஜப் பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம். அபிஷேகத்திற்கு, தேன், பால், பழம், இளநீர், அரைத்த சந்தனம், வில்வ இலைகளைக் கொடுத்தாலும், அபிஷேகத்தைக் கண்டு தரிசித்தாலும், மகத்தான புண்ணிய பலனும், முக்கியமாக தொழில் அபிவிருத்தியும் ஏற்படும்.

ஆனி 13 (28.6.2023): மகா சுதர்ஸன ஜெயந்தி. இன்றைய தினம் சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் செய்வித்தாலும், உங்கள் வீட்டில் சுதர்ஸன ஹோமம் செய்வித்தாலும், ஊழ்வினை, செய்வினை, பில்லி சூனியம் அணுகா வண்ணம், சுதர்ஸன சக்கரம் கவசமென நம்மைப் பாதுகாக்கும்.

ஆனி 14 (29.6.2023): அளந்திட்ட தூணை அவன்தட்ட, ஆங்கே வளர்ந்திட்ட வாளுகிற்சிங்க உருவாய் தோன்றிய லட்சுமி நரசிம்மர் அவதரித்த ஸ்வாதி திருநட்சத்திரம். இன்று, துளசிதளத்தினால் அர்ச்சித்து, பானகம் நைவேத்தியம் செய்து வழிபடுவது, ஏவல், பில்லிசூனியம், செய்வினை, தொழிலில் தேக்கம் நீங்கி, எதிரிகளற்று, சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தந்திடும். பெரியாழ்வார் திருநட்சத்திரம். இன்று ஆஷாட ஏகாதசி உபவாசமிருப்பது மகத்தான புண்ணிய பலன்களை அள்ளித் தரக்கூடியது.

ஆனி 17 (2.7.2023) : ஜேஷ்டாபிஷேகம் இன்றைய தினம் அனைத்துத் திருக்கோயில்களிலும், நடைபெறும் சிறப்பு திருமஞ்சனத்தில் பங்குபெற்றாலும், தரிசித்தாலும், நம் பாவங்கள் அனைத்தும் தீயினிற் தூசாவது திண்ணம். இன்று உபவாசம் இருந்து, லட்சுமி நரசிம்மரை பூஜித்தால் மகத்தான பண்ணிய பலன் கிட்டும். சதுர்த்தி திதி. மேலும் இன்று பௌர்ணமி.

ஆனி 18 (3.7.2023) : கோகிலா விரதம் – இன்றைய தினம் சிவபெருமானுக்கு சுத்தமான தேன்கொண்டு அபிஷேகமும், வில்வதளம் கொண்டு அர்ச்சித்தால், இசைப் பாடகர்கள் தேனின் இனிய, மதுர குரல் வளம் அடைந்து, அதன் மூலம், புகழின் உச்சத்தைத் தொடச் செய்திடும் புண்ணிய விரதம். மேலும், இன்று குரு பூர்ணிமாவும்கூட! கல்விச் செல்வம் அளித்த குருநாதருக்கு, பாதபூஜை செய்வித்தாலும் அல்லது வஸ்திரங்களைக் கொடுத்து வணங்கினாலும், குருதேவரின் பரிபூரண கடாட்சத்திற்குப் பாத்திரர்களாவீர்கள். காரணம், குருவே பிரம்மாவாகவும், குருவே விஷ்ணுவாகவும், குருவே மகேஸ்வரராகவும், குருவே சாட்சாத் பரப்ரம்மத்தின் மறுவுருவமாகவும், வேதங்களும், இதிகாச புராணங்களும் போற்றிப் புகழ்வதால்!

ஆனி 23 (8.7.2023): கிருஷ்ண பட்ச சஷ்டிவிரதம். முருகப்பெருமான் தேவர்களுடைய சேனாதிபத்யத்தையும், சகலவிதமான சக்திகளையும் பெற்ற தினம்.இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் சகலவித க்ஷமங்களும் வந்தடைவது திண்ணம்.

ஆனி 25 (10.7.2023): நீலகண்டாஷ்டமி – உங்கள் குழந்தைகளின் கல்வி கேள்விகளில் சுணக்கமான நிலை மாறி, படிப்பறிவில் மேம்பட்டு, அதன்மூலம் பெற்றோராகிய உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவர்.

ஆனி 26 (11.7.2023): பௌமாஸ்வினி நாள் – செவ்வாயின் ஆட்சிவீடாகிய மேஷ ராசிக்கு, சந்திரனும், அசுவினி நட்சத்திரமும் கூடிடும் சுபதினம் – பூமி காரகரான செவ்வாய் தோஷத்தைப் போக்கி, புதியநிலம், வீடு பேறினைப் பெற்றுத் தந்திடும், மேலும் மருத்துவர்களால் தீர்த்து வைக்கமுடியாத கொடிய ரத்த சம்பந்தமான நோய்களைப் போக்கி, இன்னருள் புரிந்திடும் லட்சுமி நரசிம்மருக்கு உகந்த புண்ணிய தினம்.

ஆனி 28 (13.7.2023) : கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு, அழகும், அறிவும் நிறைந்த குழந்தைகளையும், சகலவிதமான ஐஸ்வர்களனைத்தையும் பெற்று மகிழ்வர். இன்று யோகினி ஏகாதசி. இன்றைய தினம் நிர்ஜலமாய் (தண்ணீர்கூட அருந்தாமல்) உபவாசமிருந்தால், அனைத்து பாபங்களிலிருந்தும் நாம் விடுபட்டு, இன்புற்று வாழ்வோம்.

The post ஆனி மாதத்தின் தெய்வீக சக்திகளும் ராசி பலன்களும்! appeared first on Dinakaran.

Tags : Bhagwat Kaingarya ,Jyotita Sagara ,Chakravarthy AMrajagopalan ,Lord ,
× RELATED தை பிறந்தால் வழி பிறக்கும்! கன்னியர் கழுத்தில் தாலி ஏறும்!!