×

பள்ளி கட்டணம் திருப்பி தராததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே அழகுசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால். லாரி டிரைவர். இவருக்கு மனைவி வசந்தகுமாரி (25), ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் 4 வயது மூத்த மகளை திருக்கழுக்குன்றம் அருகே சோகண்டி கிராமத்தில் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2 நாட்களுக்கு முன் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு தாய் வசந்தகுமாரி அழைத்து வந்துள்ளார். அப்போது அப்பள்ளி நிர்வாகத் தரப்பில், வசந்தகுமாரியின் மகளை எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து முதல் தவணையாக ரூ.13 ஆயிரத்தை வசந்தகுமாரி கட்டி, தனது மகளை எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வசந்தகுமாரியை செல்போன் குறுந்தகவல் மூலம் பள்ளி நிர்வாகம் அழைத்தது. பள்ளிக்கு வந்த அவரிடம் எல்கேஜி வகுப்புக்கான மொத்த கட்டணம் ரூ.30 ஆயிரத்தை உடனடியாக கட்ட வேண்டும். முழுப் பணத்தை கட்டினால் மட்டுமே அவரது குழந்தையை வகுப்பறையில் சேர்ப்போம் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியது. இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான வசந்தகுமாரி, தனது கணவரிடம் பள்ளி நிர்வாகம் கூறிய தகவலை தெரிவித்தார். முன்னதாக, தனது மகளை அரசு பள்ளியில் சேர்க்கலாம் என கணவர் கூறியுள்ளார். இதை மறுத்து வசந்தகுமாரி தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பியதால் ஏற்பட்ட தொல்லை குறித்து வசந்தகுமாரியிடம் கணவர் எடுத்து கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அந்த தனியார் பள்ளியில் கட்டிய முதல் தவணையான ரூ.13 ஆயிரத்தை வாங்கி வரும்படி கணவர் வேணுகோபால் கூறியுள்ளார். இதனால் அப்பள்ளி நிர்வாகத்திடம் தான் கட்டிய ரூ.13 ஆயிரத்தை வசந்தகுமாரி திருப்பி கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் வசந்தகுமாரி செலுத்திய ரூ.13 ஆயிரத்தில் ரூ.5 ஆயிரத்தை பிடித்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். இதற்கு வசந்தகுமாரி எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், பள்ளி நிர்வாகம் அடாவடியாக பேசியதுடன், வசந்தகுமாரியை மிரட்டி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த வசந்தகுமாரி நேற்றிரவு வீட்டுக்குள் தனது உடலில் மண்ணெண்ணெய் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரியவே அலறி சத்தம் போட்டிருக்கிறார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, வசந்தகுமாரியின் உடலில் பரவிய தீயை அணைத்து மீட்டனர். பின்னர் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இப்புகாரின்பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பள்ளி நிர்வாகத்திடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post பள்ளி கட்டணம் திருப்பி தராததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Venugopal ,Akkusamuthram ,Thirukkalukunram ,Lorry ,Vasantakumari ,
× RELATED திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்...