×

52 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி

நாமக்கல், ஜூன் 16: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 52 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள், கடந்த 12ம் தேதி துவங்கியது. இதனிடையே, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலர்ணமை குழு மூலம் நியமித்து கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களை, பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமித்து கொள்ளும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள 19 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அந்த பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.

இதுபோல தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள 5 உயர்நிலைப்பள்ளிகளில், மூத்த பட்டதாரி ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக இருந்து வருகிறார்கள். மாவட்டத்தில் ஒரு முதுகலை ஆசிரியர், 4 பட்டதாரி ஆசிரியர்கள், 5 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளிலும், அந்த பாட ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்துக்கொள்ள பள்ளி கல்வி இயக்குனர் அனுமதி அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியைகளில் பிரசவ கால விடுப்பில் உள்ள பணியிடங்களுக்கும், பொறுப்பு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 52 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணி பாதிக்காமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்கள், கடந்த ஆண்டே நியமிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு பல்வேறு பள்ளிகளில் 32 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலர், இந்தாண்டு வேறு பணிகளுக்கு சென்றுள்ளனர். எனவே, ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ள அனைத்து இடங்களிலும், தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமக்கப்படுகிறார்கள். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹18 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹15 ஆயிரமும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ₹12 ஆயிரமும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

தற்காலிக ஆசிரியர்களை விரைவாக நியமிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.இந்த வார இறுதிக்குள், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் முடிந்து விடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post 52 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வசதி