×

கெட்டியம்மாள்புரம் ஸ்டைபன் உடைக்கப்பட்டு சடையனேரி கால்வாயில் சீராக தண்ணீர் செல்ல நடவடிக்கை

சாத்தான்குளம், ஜூன் 15: சாத்தான்குளம் பகுதியில் உள்ள புத்தன்தருவை, வைரவம்தருவை, சுப்பராயபுரம், முதலூர் பகுதிக்கு சடையனேரி கால்வாய் மூலம் தாமிரபரணி ஆற்றில் செல்லும் உபரி நீர் திருப்பி விடப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் வைகுண்டம் அருகே உள்ள மருதூர் மேலக்காலில் இருந்து உபரிநீராக சடையனேரிக்கு வரும் நீர்வழிப் பாதையில் 500 கனஅடி தண்ணீர் வருவதற்கு கெட்டியம்மாள்புரம் ஸ்டைபன் பகுதி பிரச்னையாக இருந்து வந்தது. இந்த ஸ்டைபன் பகுதியால் போதிய நீர் வராமல் தடைபட்டு வந்தது. இதனால் கெட்டியம்மாள்புரம் ஸ்டைபன் பகுதியை இடித்து சடையனேரிக்கு வரும் நீர்வழிப் பாதையை சம தளமாக்கி, அங்குள்ள ஊர் வாரி தண்ணீர் செல்ல அதற்கு கீழ் சுரங்க குழாய் அமைத்து தரும்படி சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்கமும், படுக்கப்பத்து விவசாய நலச்சங்கமும், சாத்தான்குளம் பகுதி விவசாயிகளும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த ஸ்டைபனில் தண்ணீர் சரியாக வராமல் பின் வாங்குவதால் கால்வாயில் உடைப்பு ஏற்படுகிறது. அதனால் சடையனேரிக்கு வரும் உபரிநீரை நிறுத்தும் சூழல் ஏற்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் விவசாயிகளின் நீண்டநாளைய கோரிக்கையை ஏற்று கெட்டியம்மாள்புரம் ஸ்டைபனை இடித்துவிட்டு சடையனேரிக்கு வரும் நீர்வழிப் பாதையை சமதளமாகவும் கெட்டியம்மாள்புரத்தில் இருந்து வரும் ஊர் வாரி தண்ணீரை அதற்கு அடியில் சுரங்க குழாய் வழியாகவும் கொண்டு செல்லும் வகையில் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சடையனேரி பாசன கால்வாய் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணி நடக்கும் பகுதிகளை சாஸ்தாவின்நல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் லூர்து மணி தலைமையில் விவசாயிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நவீன், விவசாயிகளுக்கு பணி குறித்த விளக்கம் அளித்தார்.

இதில் வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்ற செயலாளர் மகாபால்துரை. படுக்கப்பத்து விவசாய நலச்சங்க தலைவர் சரவணன், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் சந்தன திரவியம் உள்ளிட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கோரிக்கையை ஏற்று பணி தொடக்கப்பட்டு உள்ளதை வரவேற்றுள்ள சாஸ்தாவிநல்லூர், சாத்தான்குளம், வைரவம்தருவை, புத்தன்தருவை பகுதி விவசாயிகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

The post கெட்டியம்மாள்புரம் ஸ்டைபன் உடைக்கப்பட்டு சடையனேரி கால்வாயில் சீராக தண்ணீர் செல்ல நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kettiammalpuram ,Satyaneri canal ,Chatankulam ,Thamirapharani ,Buddantharuvai ,Vairavamtaru ,Subparayapuram ,Mudalur ,
× RELATED சாத்தான்குளம் ஏட்டு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு