×

புதுக்கடையில் மரம் முறிந்து விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

புதுக்கடை: குமரி மாவட்டத்தில் மே மாதம் துவங்க வேண்டிய பருவமழை காலதாமதம் ஆனதால் குமரியை கடந்த இரு மாதங்கள் வெயில் புரட்டி போட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சாதாரணமாக துவங்கிய மழை பின்னர் ஓரளவு கனமழையாக மாறியது. அதிகாலை சுமார் 2 மணியளவில் துவங்கிய மழை காலை 7 மணி வரை நீடித்தது.

இந்த நிலையில் புதுக்கடை – தேங்காப்பட்டணம் சாலையில் கைசூண்டி பகுதியில் சாலையோரம் நின்ற ஒரு மரம் காலை 5 மணியளவில் திடீரென முறிந்து ேராட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. மேலும் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.

இதையடுத்து பொதுப்பணித்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலையில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பல்வேறு பணிகளுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகள் பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணியளவில் போக்குவரத்து முழுமையாக சீரானது.

புதுக்கடை – தேங்காப்பட்டணம் சாலையில் பைங்குளம் பகுதியில் உள்ளாட்சி நிர்வாகத்தால் சாலையோரம் நடப்பட்ட ஏராளம் நிழல் தரும் மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் தற்போது பெரிய மரங்களாகி முதிர்வடைந்துள்ளன. இவை மழைக்காலங்களில் முறிந்து விழுந்து போக்குவரத்து தடை ஏற்படுவது தொடர் கதையாகி உள்ளது.

The post புதுக்கடையில் மரம் முறிந்து விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkadi ,Pudukadai ,Kumari ,
× RELATED குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில்...