×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

541 (A). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)

கச்யப முனிவரின் மனைவிகளுள் ஒருத்தியான திதி தேவி, ஒரு பிரதோஷ நாளில் மாலை வேளையில் தன் கணவரான கச்யபரிடம் வந்தாள். எனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும், அந்தக் குழந்தையை இப்போதே எனக்கு அருள வேண்டும் என்று கச்யபரிடம் வேண்டினாள் திதி. இது பிரதோஷ காலம். சம்ஹார மூர்த்தியான சிவபெருமான் நாட்டியம் ஆடும் நேரம். இச்சமயத்தில் நாம் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அந்திப் பொழுது இதற்கேற்ற பொழுதன்று. இரவுப் பொழுது வந்தபின் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறேன் என்று சொன்னார் கச்யப முனிவர். ஆனால் ஆசையின் மேலீட்டால் அதைப் பொருட்படுத்தாமல் தனது கோரிக்கையில் உறுதியாக நின்றாள் திதி. கச்யபர் தனது அனுஷ்டானங்களையும் அக்னி காரியங்களையும் செய்ய முடியாத படி அவருக்கு இடையூறு செய்யும் வகையில் அவரிடம் மீண்டும் மீண்டும் தன் ஆசையைத் தெரிவித்துவந்தாள்.

வேறு வழியே இல்லாமல் திதி கேட்டபடி பிள்ளை வரத்தை அவளுக்கு அருளினார் கச்யபர். அதன்பின் கச்யபர் நீராடி விட்டு, பிராணாயாமம் செய்து மேற்கொண்டு தனது அனுஷ்டானங்களைச் செய்யப் போனார்.இந்த நிலையில்தான் தனது தவறை உணர்ந்தாள் திதி. சிறிது காலம்தானே நம் கணவர் பொறுத்திருக்கச் சொன்னார். அந்த அளவு கூட பொறுமை இல்லாது இப்படி ஆசைக்கு அடிமை ஆகிவிட்டேனே என்று வருந்தினாள். கணவர் கச்யபரின் பாதங்களில் வந்து விழுந்தாள்.

சுவாமி, ஏதோ ஆசையின் மேலீட்டால் தவறு செய்துவிட்டேன். அடியேனை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினாள் திதி. ஆனால் கச்யபரோ, நான் எவ்வளவு அறிவுரை சொல்லியும் நீ கேட்கவில்லை. இனி வருந்தி என்ன பயன். உனக்கு இரண்டு மகன்கள் பிறப்பார்கள். இருவரும் உலகையே கதறச் செய்து அச்சுறுத்துவார்கள், இதை மாற்ற முடியாது என்று சபித்துவிட்டார். அழுது கதறிக் கொண்டு கச்யபரின் பாதங்களில் விழுந்தாள் திதி. அடியேனை மன்னிக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய கச்யபர், அவள்மீது கருணை கொண்டார். கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது. எனினும், பிள்ளைகள் தீயவர்களாகப் பிறந்த போதும், உனக்கு ஒரு பேரன் பிறப்பான். அவனை உலகமே கொண்டாடும் என்றார்.

இதன் விளைவாகவே, இரணியகசிபு, இரணியாட்சன் என்ற இரண்டு அசுரப் பிள்ளைகள் திதியின் வயிற்றில் பிறந்தார்கள். திருமாலின் வாயில்காப்பாளர்களாய் ஜயன்-விஜயன் என்ற பெயரோடு முன்பு இருந்த அவர்கள், சனத்குமார சாபத்தால் பூமியில் பிறக்க நேரிட்டது. அவ்விருவரும் திதியின் கருவை அடைந்தார்கள். அவர்களுள் ஒருவனான இரணியகசிபுவின் மகனான பிரகலாதன் தான் கச்யபர் சொன்ன படி உலகமே கொண்டாடும் பிள்ளையாக விளங்கினான்.

இரணியகசிபுவும் இரணியாட்சனும் பிறக்கும் நேரத்தில் மலைகள் நடுங்கின, திசைகள் எரிந்தன, வானிலிருந்து கொள்ளிக் கட்டைகள் விழுந்தன, வால் நட்சத்திரம் தோன்றியது, காற்றில் மரங்கள் பறந்தன, மேகங்கள் சூரியனை மறைத்தன, கடல் கொந்தளித்தது, நதிகளில் பெருவெள்ளம் ஓடியது, ஆந்தைகள் அலறின, பசுக்கள் பயந்து ஒளிந்துகொண்டன, கிரகங்கள் வக்கிரமாகச் சுழன்றன. இத்தகைய சூழலில் தான் இருவரும் பிறந்தார்கள்.அந்த இரணியாட்சன் மொத்த உலகையும் பிரளயக் கடலுக்கு உள்ளே ஒளித்து வைத்தான். திருமால் பன்றி வடிவத்துடன் வராகராகத் தோன்றி அந்த இரணியாட்சனை அழித்துப் பூமியை மீட்டார்.

இரணியாட்சன் எமனுக்கு நிகராகக் கருதப் படுபவன். பூமியில் உள்ள உயிர்களை அழிப்பவன் எமன் என்றால், மொத்த பூமியையும் அழிக்கப் பார்க்கும் எமனாக இருந்தான் இரணியாட்சன். அந்த எமனாகிய இரணியாட்சனைச் சக்கராயுதத்தாலே வெட்டிச் சாய்த்தபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம். க்ருதாந்த என்றால் எமன். க்ருத் என்றால் வெட்டி வீழ்த்தியவர். க்ருதாந்தக்ருத் என்றால் எமன் போன்றவனை வெட்டிச் சாய்த்தவர்.

க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் அனைத்துத் துன்பங்களையும் தன் சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்துவார் திருமால்.

541 (B). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)

பிரளயக்கடலில் இருந்து வராகப் பெருமாள் பூமிதேவியை மீட்டபோது, பூமிதேவி வராகனிடம், இந்தப் பிரளயக் கடலில் இருந்து என்னைக் காத்தது ஒருபுறம் இருக்கட்டும். இதை விடக் கொடுமையான, கடுமையான பிறவிப் பெருங்கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் அத்தனை பேரும் துன்புற்றுக் கிடக்கிறார்களே. அவர்களைக் காக்க ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டாள்.

அப்போது வராகப் பெருமாள், பூமியிடம் ஒரு சரம சுலோகத்தைச் சொன்னார்

ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபம் சமாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்

இளமைக்காலத்தில் ஒருவன் என்னைத் தியானித்து, நானே கதி என்று சரண் அடைந்து விட்டால், முதுமைக் காலத்தில், உயிர்பிரியும் தறுவாயில், அந்த பக்தன் என்னை மறந்து விட்டாலும் கூட, அந்த பக்தனை நினைவில் கொண்டு நான் மறவாமல் அவனைக் காப்பேன்.

இளமைக் காலத்தில் தன்னை நினைப்பதற்கு எளிமையான இரண்டு வழிகளை வராகப் பெருமாள் கூறினார்.

1.வாசனையுள்ள பூச்செடிகளை வளர்த்து, அந்தப் பூக்களைப் பறித்து, தானே நாரில் மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்தால் இறைவனின் மனம் மிகவும் மகிழும்.

2. இறைவனின் திருநாமங்களைப் பாமாலையாகப் பாடுதல்.

இந்த இரண்டையும் இளமைக் காலத்தில் ஒருவன் செய்துவந்தால், அவனது மனம் மெல்ல மெல்லப் பக்குவப்பட்டு சரணாகதி நிஷ்டையை அடைந்து விடுவான். இதுவே வராகர் செய்த உபதேசம்.இப்படி பக்தி என்பது இளமைக் காலத்தில் செய்ய வேண்டியது என்பதை உணர்த்தி, அந்த இளமைப் பருவத்திலேயே சரணாகதி செய்திட வேண்டும் என்பதையும் விளக்கி, அந்த பக்தனைத் தான் என்றும் மறக்காமல் காப்பேன் என்ற தன் சித்தாந்தத்தைத் தெளிவாக உரைத்தவர் வராகப் பெருமாள்.கண்ணன் கீதையில் சொன்ன சரம சுலோகத்தில் – மற்ற எல்லா வழிகளையும் விட்டு நானே கதி என்று என்னிடம் சரணாகதி செய்தால், எல்லாப் பாபங்களையும் போக்கி முக்தி அளிக்கிறேன் என்றார்.

ஸ்ரீராமன் ராமாயணத்தில் சொன்ன சரம சுலோகத்தில் – சரணம் என்று சொல்லிக் கொண்டு என் பாதங்களில் விழுந்தால், நிச்சயமாக அபயம் அளித்தே தீருவேன் என்றார். வராகப் பெருமாள் ஒருபடி மேலே போய், தனது சரம சுலோகத்தில் – என்னைச் சரணடைந்த பக்தன் என்னை மறந்தே போனாலும் கூட, நான் அவனை மறவாமல் நினைவில் கொண்டு காத்தே தீருவேன் என்று கூறியுள்ளார்.

இத்தகைய தனது அற்புதமான சித்தாந்தத்தை வழங்கியதாலே வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். க்ருதாந்தம் என்றால் சித்தாந்தம், க்ருத் என்றால் வழங்கியவர். தனது உபதேசத்தின் மூலமாகவும், வராக புராணத்தின் வாயிலாகவும் தனது சித்தாந்தத்தைத் தெளிவாக வழங்கியபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார்.அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம்.க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமக்கும் வாழ்வில் சித்தாந்தத் தெளிவு ஏற்படும்படி வராகர் அருள்புரிவார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Anandan ,Saffron Spirituality ,Krudantha Kruthe Namaha ,Kruthaantha Kruthey Namaha ,Kasyapa ,
× RELATED போலீஸ் எனக்கூறி வங்கி உதவி மேலாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி..!!