×

ஆன்மிகத்திற்கு வழிகாட்டும் கார்த்திகேய ஆஸ்ரமம்

நம்முடைய புண்ணிய பூமியான பாரத தேசத்தில், வடக்கு பாகத்தில் இமயமலை அடிவாரத்தில், உத்திரகாண்ட் மாநிலத்தில், ரிஷிகேஷ் (ரிஷிகேசம்) அமைந்துள்ளது. இமயமலையில் உருவாகும் புனித கங்கை நதி, சமதளத்தில் பாயும் முதல் இடமாக ரிஷிகேஷ் அமைந்துள்ளதால், இதற்கு தனிச் சிறப்புண்டு. இந்த ரிஷிகேஷில், அதிகமான துறவிகள் தவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய இமயமலையில் சங்கமித்திருக்கும் இந்த புனிதத் தலங்களுக்கு, வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.

இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அறிமுகம் இல்லாத ஊர்கள், மொழிப் பிரச்னை, தங்குவது என பல தயக்கம்தான் பலரை கட்டிப் போடுகிறது. திக்குத் தெரியாத இந்த தலங்களில், குறிப்பாக தமிழர்களுக்கு சேவை செய்வதற்காகவே பல ஆண்டுகளாக ரிஷிகேசத்தில் தங்கி இருக்கின்றனர் “ஸ்ரீசுவாமி ராகேஷானந்தா’’, “ஸ்ரீசுவாமி ராஜேந்திரா நந்தா’’, “ஸ்ரீசுவாமி சுந்தர சைதன்யா’’, “ஸ்ரீசுவாமி சிவானந்தா’’, “ஸ்ரீசுவாமி ஈஸ்வரானந்தா’’, “ஸ்ரீசுவாமி நாகராஜ்’’ மற்றும் பல சிவனடியார்கள் அனைவரும் ரிஷிகேசத்தில் “ஸ்ரீகார்த்திகேய ஆஸ்ரமத்தில்’’ இருந்தபடி சேவை புரிகிறார்கள்.

ஸ்ரீசுவாமி ராகேஷானந்தா சரஸ்வதி

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில், சௌராஷ்டிர பிராமண குலத்தில், ஸ்ரீமுத்துகிருஷ்ணய்யர் – கோமல் தாயார் தம்பதியினருக்கு மூத்த மகனாக 20.04.1946-ல் பிறந்தார், சுவாமி ராகேஷானந்தா. சிறுவயதிலிருந்தே ஆன்மிக கதை கேட்பது, பக்தியில் திளைத்திருப்பது என்று இருந்தார். தனது 15-வது வயதில் ஸ்ரீசுந்தரம் சுவாமிகளிடம் தீட்சையும் பெற்றார். ஆன்மிகத்தில் நாட்டம் இருந்த காரணத்தால், சேலத்திற்கு அருகாமையில் உள்ள குள்ளம்பட்டி ஆனந்தாஸ்ரமத்தில் சேர்ந்தார்.

4 ஆண்டுகள் சேவைக்குப் பின்னர், மதுரை பிரம்மானந்த சுவாமி மடாலயத்தில் சேர்ந்து, வேதாந்த பாடங்களையும், சமஸ்கிருத பாடங்களையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர், காசிக்குச் சென்று ஸ்ரீதட்சிணாமூர்த்தி சமஸ்கிருத பாடசாலையில் சேர்ந்தார். அங்குதான் இவரது குருநாதர் “ஸ்ரீலஸ்ரீசுவாமி கைலாசானந்தா’’ அவர்கள், காசியில் தங்கியிருந்து ரிஷிகேசத்தில் உள்ள “ஸ்ரீகார்த்திகேயா’’ ஆஸ்ரமத்து நிர்வாகத்தையும், கவனித்து வந்தார்.

சுவாமி ராகேஷானந்தா காசியில் பிரதமா, மத்யமா, சாஸ்திரி, ஆசார்யா முதலியவைகளை முறையோடு கற்றுத் தேர்ந்தார். இவரது குருநாதர் சுவாமி கைலாசானந்தாவுக்கு, பல சீடர்கள் இருந்தார்கள். இவர்களில் முதன்மை சீடரான சுவாமி ராகேஷானந்தாவை, 1983-ல் “ரிஷிகேஷ் ஸ்ரீகார்த்திகேயா ஆஸ்ரமத்தின்’’ பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுமாறு உத்திரவிட்டதன் பேரில், அன்று முதல் ரிஷிகேசம் ஸ்ரீகார்த்திகேய ஆஸ்ரமப் பொறுப்புகளை ஏற்று நடத்திவந்தார்.

ஆஸ்ரமத்தை தற்காலவசதிகளுக்கேற்றவாறு, 1985-ஆம் ஆண்டு முதல் சிறுகச் சிறுக மாற்றங்களைச் செய்தும், தற்போதைய “ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி’’ திருக்கோயிலையும் கட்டி தற்போதைய ஆஸ்ரமம் வடிவத்தை அமைத்தவர் இவரே.

தனது 15-வது வயதிலேயே தீட்சை பெற்ற சுவாமி ராகேஷானந்தா, 60 ஆண்டு காலமாக ஓய்வின்றி இறைப்பணியாற்றி, கடந்த 27.10.2021-ஆம் தேதி தனது 75-வது வயதில் மோட்ச கதி அடைந்தார். வடமாநிலத்தவர் வழக்கப்படி, ரிஷிகேஷத்திலுள்ள அனைத்து துறவிகளும், பக்கதர்களும் சுவாமிகளின் பூதஉடலை, ரிஷிகேஷ் கங்கை நதியில் ‘‘ஜலசமாதி’’ செய்தனர்.

ரிஷிகேஷ் ஸ்ரீகார்த்திகேய ஆஸ்ரமம்

ஹரித்துவார் புண்ணிய ஸ்தலத்திலிருந்து, சுமார் 25 கி.மீ. தொலைவில், ரிஷிகேஷ் அமைந்துள்ளது. ரிஷிகேஷ் நகரில், கங்கைக் கரையின் தென்பகுதியையும், ஹரித்துவாருக்கு வடபகுதியையும், இமய மலையின் அடிவாரத்தையும் மையமாக வைத்து “ஸ்ரீகார்த்திகேய ஆசிரமம்’’ அமைந்துள்ளது. இது முழுக்க தமிழ்த்துறவிகளால் நடத்தப்படும் ஆசிரமமாகும். இந்த ஆசிரமமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீசுவாமி ஷண்முகானந்தா அவர்களால் உருவாக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் குருஜீ ஸ்ரீஷண்முகானந்தா, ரிஷிகேசம் ஆன்மீக யாத்திரை சென்ற போது, அவருக்கு உணவும் உறைவிடமும் கிடைக்காமல் மிகுந்த சிரமமடைந்தார்.

இதன் காரணமாக, தமிழர்களுக்கு உதவும் நோக்கில், குருஜீ இந்த ஆசிரமத்தை தொடங்கினார். 1973-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஸ்ரீசுவாமி ஷண்முகானந்தா அவர்கள் இவ்வுலகை துறந்து, இறைவனடி அடைந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்ரீசுவாமி கைலாசானந்தா ஆசிரம தலைவர் ஆனார். இவர், பல சிஷ்யர்களை உருவாக்கியும், தமிழ்நாட்டில் இருந்து வரும் சாதுக்களுக்கும், தமிழ் யாத்திரிகர்களுக்கும் இடம் மற்றும் உணவளித்து உதவியதுடன், ஸ்ரீகார்த்திகேய ஆசிரமத்தையும் விரிவடையச் செய்தார்.

இந்த ஆசிரமத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு கோயில் ஒன்று கட்டியிருக்கிறார்கள். மேலும் இக்கோயிலில் சிவலிங்கம், லட்சுமி நாராயணன், கருடாழ்வார், ஆஞ்சநேயர், காலபைரவர் மற்றும் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். இத்தலம், “ஸ்ரீகார்த்திகேய திருக்கோயில் ஸ்ரீகார்த்திகேய மந்திர்’’ என்ற பெயரில் விளங்குகிறது. ரிஷிகேசத்தில், ஸ்ரீகார்த்திகேய ஆசிரமத்தில் மட்டும்தான் முருகன் கோயில் உள்ளது. இதை வைத்து ரிஷிகேஷ் செல்பவர்கள் எளிதாக இந்த ஆசிரமத்தை அடையாளம் கொள்ளலாம்.

ரிஷிகேசத்திற்கு வரும் யாத்திரிகர்கள் முன்கூட்டியே ஆசிரமத்திற்கு தகவல் கொடுத்து தங்கள் வரவை பதிவு செய்து கொள்வது நல்லது. யாத்திரிகர்களுக்கு தங்குமிடம் உணவு ஆகியவைகள் வழங்கப்படுகிறது. ரிஷிகேசத்திலிருந்து கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்திரிநாத், கேதார்நாத் போன்ற இடங்களுக்குச் செல்லலாம். இவை ரிஷிகேசத்திலிருந்து, 300 கி.மீ. சுற்றளவில் அமைந்திருக்கின்றன.

இந்த இடங்களை சுற்றிப் பார்க்க குறைந்த வாடகைக்கு கார் அல்லது ஜீப் போன்ற ஏற்பாடுகளையும் இந்த ஆசிரமம் செய்து கொடுக்கிறது. இந்த ஆஸ்ரமத்திற்கு ஸ்ரீசுவாமி தயானந்தர், ஸ்ரீசுவாமி விஸ்வேஸ்ரானந்தாஜி, ஸ்ரீரவிசங்கர்ஜி போன்ற துறவிகள் வருகை புரிந்திருக்கின்றனர். பிரபல நடிகர் திரு ரஜினிகாந்த் இந்த ஆஸ்ரமத்திற்கு வருகை புரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ரமத்தின் தனிச்சிறப்பு

இந்துக்களின் ஆன்மா இறுதி யாத்திரையாகச் செல்ல விரும்பும் இடம் மோட்சம். இதற்காக வசதி படைத்தவர்கள் அஸ்தியை காசி, ராமேஸ்வரம் என்று எடுத்துச் சென்று கரைப்பார்கள். ஏழைகள், அருகாமையில் உள்ள ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் புரோகிதரை வைத்து கரைத்து, கங்கையில் கரைத்து புண்ணியம் தேடுவது வழக்கம். சாமான்யர்களுக்கும் இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைத்து மோட்சம் பெரும் வசதியை ரிஷிகேசம் ஸ்ரீகார்த்திகேய ஆஸ்ரமம் பெரும் சேவையாக செய்து வருகிறது.

இதற்காக நாட்டில் எந்த மூலையிலிருந்தும் இறந்தவர்களின் அஸ்தியை ரிஷிகேசம் ஸ்ரீகார்த்திகேய ஆஸ்ரமத்திற்கு அனுப்பி வைத்தால், சகல ஆகம விதி மற்றும் பூஜைகளை செய்து, இமயமலையில் இருந்து கங்கை வந்தடையும் புண்ணிய பூமியின் முதல் இடமான ரிஷிகேசம் கங்கை நதியில் கரைத்து மோட்சத்திற்கு வழி திறக்கும் பணியை செய்வதுடன், இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய, வழிபாடு செய்வது இந்த ஆஸ்ரமத்தின் தனிச் சிறப்பு.

மேலும், புனித நதியாம் கங்கை வாழும் தெவீக நகரமான ரிஷிகேஷ் என்னும் ஸ்தலத்தில் அமைந்துள்ள “ஸ்ரீதண்டாயுதபாணி” ஆலயத்தில் (கார்த்திகா ஆஸ்ரமம்) சென்னையில் தேர்ந்த அடியார் ஒருவரின் சிவசிந்தனையால், நால்வர் மூர்த்தங்கள் அதாவது திருஞானசம்பந்த நாயனார், திருநாவுக்கரசு நாயனார், திருசுந்தநாயனார், திருமாணிக்க வாசகர் ஆகியோர்களின் பிரதிஷ்டை வைபவம் 6.6.2023 நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த சிவனடியார்கள், தேவாரம் ஓதுவார்கள், கைலாய வாத்திய குழுவினர்கள், சிவநடனம் புரியும் அடியார்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து, 7.6.2023 மஹா பூர்ணாஹூதியும், கலசம் புறப்பாடாகி நால்வர் பெருமக்களுக்கு திருக்குட நன்னீராட்டு மிக சிறப்பாக நடைபெற்றது. சிவனை சிந்தையில் நிறுத்தியுள்ள அனைத்து அடியார்களும், குடும்பத்தினரோடு வந்திருந்து நால்வர் பெருமக்களின் திருக்குட நன்னீராட்டு வைபவத்தில் கலந்து கொண்டு குருவருளையும், திருவருளையும், பெற்றுச் சென்றனர்.

மற்றும் 250 சந்நியாசிகளுக்கும், மடாதிபதிகளுக்கும், அடியார்களுக்கும் அன்னதானம் அருமையான முறையில் நடைபெற்றது. நால்வர் பெருமக்களை வட நாட்டில் பிரதிஷ்டை செய்வது இதுவே முதல் முறை. இங்கு தவிர வேறெங்கும் காணாமுடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இமயமலை அடிவாரத்தில், உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் ரிஷிகேஷ் நகர் கங்கை நதிக்கரையில், தென் பகுதியின் இமயமலையின் அடிவாரமான கங்கா மாதாவின் பூமிப் பிரவேச ஸ்தானத்தில் ஸ்ரீலஸ்ரீசுவாமி சண்முகானந்தாஜி மகாராஜ் அவர்களால் உருவாக்கப்பட்டது.

அதன் பிறகு, திருக்கைலாயமணி ஸ்ரீலஸ்ரீசுவாமி கைலாசானந்த மகாராஜ் அவர்களால் பாதுகாக்கப்பட்டு, திருக்கைலாயமணி ஸ்ரீசுவாமி ராகேஷானந்த சரஸ்வதி அவர்களால் சிறப்பாக வளர்க்கப்பட்ட கார்த்திகேயா ஆஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலில் ஒன்று கூடி, கங்கை கரையில் தமிழகத்திலிருந்து நால்வர் பெருமக்களை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

எவ்வாறு செல்வது?

மதுரையிலிருந்து டேராடூன் வரை செல்லும் டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஹரித்துவார் சென்றடைய வேண்டும். ஹரித்துவாரிலிருந்து 25 கி.மீ. பஸ் பிரயாணம் மூலம் ரிஷிகேஷ் அடையலாம். மதுரையிலிருந்து ரிஷிகேஷ் சுமார் 3200 கி.மீ. சென்னையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் வரையில் ரயில் மூலம் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷிற்கு பஸ் மூலம் அடையலாம். டெல்லியிலிருந்து ஹரித்துவாருக்கு சுமார் 250 கி.மீ. தொலைவில் அடைந்துவிடலாம்.

The post ஆன்மிகத்திற்கு வழிகாட்டும் கார்த்திகேய ஆஸ்ரமம் appeared first on Dinakaran.

Tags : Ashram ,Rishikesh ,Rishikesam ,Himalayan ,Uttarakhand ,Bharat ,Himalayas ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு