×

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீது மோசடி வழக்கு: நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்

திருவனந்தபுரம்: மோசடி புகாரில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மோன்சன். இவர் கொச்சியில் பழங்கால புராதனப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் தன்னிடம் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள், சிம்மாசனம், முகம்மது நபி, கிருஷ்ணர் ஆகியோர் பயன்படுத்திய பொருட்கள் உள்பட பழங்காலப் பொருட்கள் இருப்பதாக கூறி வந்தார்.

இவரது நிறுவனத்திற்கு கேரளாவை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள், நடிகர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரும் சென்று வந்தனர். இந்நிலையில் மோன்சன் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து நடத்திய விசாரணையில் தான் அவரது நிறுவனத்தில் இருந்த எதுவும் பழங்காலப் பொருட்கள் அல்ல என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரது மோசடிகள் குறித்த தகவல்கள் வெளியான நிலையில் பிரபல நடிகர் மோகன்லால், காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன், முன்னாள் டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் மோன்சனுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மோன்சனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கேரள மாநில தலைவர் சுதாகரன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நாளை (14ம் தேதி) கொச்சியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரனுக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீது மோசடி வழக்கு: நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Kerala State Congress ,President ,Sudhakaran ,Thiruvananthapuram ,Kerala ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!