×

புராணங்களின் நிலையாமைக்குப் பதிவின்மையே காரணம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 50

(பகவத்கீதை உரை)

(இந்த இதழிலிருந்து பகவத்கீதையின் நான்காவது அத்தியாயமான ‘ஞான கர்ம ஸந்யாஸ யோகம்’ பகுதியில், பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கும் அவன் மூலம் நமக்கும் என்ன உபதேசம் செய்கிறார் என்பதைப் பார்க்கலாம்)

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம்
விவஸ்வான்மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவே ப்ரவீத் (4:1)

‘‘அழிவையே காணமுடியாத இந்த யோகத்தைப் பற்றி நான் முதலில் சூரியனுக்குச் சொன்னேன். எப்போது? ஆதியில், அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னாலேயே! அதை சூரியன் தனது மகன் மனுவிடம் கூறினான்; மனு, தன்னுடைய புத்திரனான இக்ஷ்வாகு மன்னனிடம் சொன்னான்.’’ எந்த ஒரு சம்பவத்துக்கும் காலப்பரிமாணம் என்பது அவசியம் வேண்டும். ஒரு விஷயத்தில் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளுக்கெல்லாம் மேலான கேள்வியும் ஒன்றிருக்கிறது – ‘எப்போது?’ எந்த ஆரம்பத்துக்கும் காலப் பரிமாணம் இருந்தால்தான் அது ஒரு முடிவுக்கு வரமுடியும். சம்பவத்தைச் சார்ந்து காலமா, காலத்தைச் சார்ந்து சம்பவமா? இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்ததே.

இன்ன சம்பவம் நடந்தது என்பதற்கு அது நடந்த காலகட்டம் ஆதாரமாக அமைகிறது. சம்பவத்தின் நீட்சியைப் பொறுத்து காலமும் நீள்கிறது. இத்தனை நாள் போர் நடந்தது, இத்தனை மணிநேரம் மழை பொழிந்தது, இத்தனை மணிக்கு விபத்து ஏற்பட்டது. சொற்ப நிமிடங்களில் ரயிலைத் தவறவிட்டேன், கண் சிமிட்டும் நேரத்துக்குள்ளாக நிகழ்ந்துவிட்டது… என்றெல்லாம் சம்பவமும், காலமும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. யோகத்தைப் பற்றிப் பேசும்போது கிருஷ்ணன், காலத்தை ஏன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? அப்போதுதான் கிருஷ்ணனைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள முடியும்.

ஆமாம், ‘நான் யோகத்தைப்பற்றி சூரியனிடம் சொன்னேன்,’ என்று இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணன் கூறுகிறார் என்றால், அவர் யுகங்களைக் கடந் தவர் என்று அர்த்தம்.காலத்துக்குள் அவர் கட்டுப்படாதவர் என்று அர்த்தம். சூரியனிடம் சொன்னார் என்றால், ஆரம்பமும் இன்றி, முடிவு மின்றி நிரந்தரமாக நிலைத்திருக்கும் ஒரே பொருள் சூரியன் என்பதால்தான். அதாவது, சூரியன் தோன்றிய பிறகுதான் மற்ற எல்லாமும் சேர்ந்த பிரபஞ்சம் உருவாயிற்று. பகவான் கிருஷ்ணன் கால அருமை கருதி, தான் முதன்முதலாகப் படைத்த சூரியனிடம் யோகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

அதாவது, ஒளிதான் முதல். மற்ற எல்லாமும் அதன் ‘பிரதிபலிப்பு’தான். ஆகவே, பிரபஞ்சத்தின் முதல் ஒளியான சூரியனிடம் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார் என்றால், அவர் எல்லா காலத்துக்கும் முற்பட்டவர் என்றுதானே அர்த்தம்! ‘கிருஷ்ணன் எப்போது சொன்னார்?’ என்ற கேள்வி வரும்போது, அவர் சூரியனிடம் சொன்னார் என்ற தகவல் ஒன்றே பதிலாக அமையும். அதாவது, பிரபஞ்சத்தின் முதல் ஒளி ஆதாரம்! எந்த சம்பவத்தைப் பற்றியும் பின்னாளில் தெரிந்துகொள்வதற்குக் காலம் மிக முக்கியம். எத்தகைய சம்பவமாக இருந்தாலும் சரி, அது பதிவாகியிருந்தால் அப்போது அதன் காலம் தெரியவரும், அந்த விஷயத்தின் தொன்மையும் புரியும். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களில் விவரிக்கப் படும் சம்பவங்கள் நடந்த காலங்கள், அந்தந்த யுகங்களாகக் கணிக்கப்பட்டன.

ராமன் அவதாரம் முதல் ராவணன் வதம்வரை சம்பவங்கள் அடுக்கடுக்காக, அடுத்தடுத்து, ராமனின் வயது கூடிக்கொண்டே போகும் வகையாக அவர் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஒரு சங்கிலித் தொடர்போல, காலப் பரிமாணத்துடன் கோக்கப்பட்டன. இப்போது ராமாயணத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது இந்தச் சம்பவங்கள் இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று அனுமானிக்க முடிகிறது.

பொதுவாக இதுபோன்ற புராதனத் தகவல்கள் கல்வெட்டுகளாகப் பதிவு செய்யப்படுவதும் அந்தக் கல்வெட்டுகள் கோயில் களில் அல்லது பொது இடங்களில் அல்லது அந்த காலத்திய மன்னர்களின் அரண்மனைகளில் நிறுவப்படுவதும் வழக்கமாக இருந்தன. கல்வெட்டுகளாக மட்டும் அமையாமல், ஓவியமாகவும், சிற்பமாகவும் அந்தச் சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நாளடைவில், பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள், நம் நாட்டின் மீது போர்தொடுத்து, நம் நாட்டைத் தம் சொத்தாக ஆக்கிக்கொண்டவர்கள், நம் தேசத்தை ஆக்கிரமித்தவர்கள் எல்லாம் நம்மையே அடிமைப்படுத்தியபோது இந்த காலபூர்வமான பதிவுகள் சிதைக்கப்பட்டன.

இந்தத் தொன்மை விஷயங்களில் பொதிந்திருந்த நம் நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லது புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது தம் அடிமைகள் தாம் நிர்ணயிக்கும் வாழ்க்கை நியதிக்குட்பட்டுதான் வாழவேண்டும் என்ற அவர்களுடைய அகங்காரம் அல்லது நம்முடைய சிறப்பான வாழ்க்கை முறையை, பொறாமையால் சகித்துக்கொள்ள முடியாதது… அதுமட்டுமல்ல, இப்படி சிதைக்கப்பட்ட பதிவுகளுக்கு பதிலாக தங்களுடைய சொந்தப் பதிவுகளை மாற்றி வைத்ததன் விளைவுதான், இப்போது நம் புராண சம்பவங்கள் பலவற்றின் காலத்தைத் துல்லியமாக அறிய முடியாமல் போனதன் காரணம்.

மணி, தேதி, வாரம், மாதம் என்ற நம் பயன்பாட்டு முறையை அழித்து தங்களுடைய காலண்டரை அவர்கள் அறிமுகப்படுத்தியதும் இன்னொரு காரணம். சமீப காலத்திய, அதாவது, இரண்டாயிரம் வருடங்களாக தினசரி நம் வாழ்வியலில் அந்த காலண்டர் தவிர்க்கவே முடியாத ஓர் அவசியமாகிவிட்டது. ராகுகாலத்தைக்கூட நாழிகை கணக்காகப் பார்க்காமல் கடிகாரக் கணக்காகவே கணக்கிட்டுக்கொள்ளும் அத்தியாவசிய நிர்ப்பந்தத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்!

ஆக, காலங்களுக்கெல்லாம் முற்பட்டவரான கிருஷ்ணன், சூரியனுக்குச் சொன்ன காலத்தில் அவரும் ஓர் ஒளிப்பிழம்பாகவே இருந்திருப்பார் எனலாம். அதாவது, இப்போது அர்ஜுனனுடன் பேசிக்கொண்டிருக்கும் கிருஷ்ணன் இல்லை அவர்! ஸ்ரீமந் நாராயணனின் இதற்கு முந்தைய அவதாரங்களுக்கும் முற்பட்ட ஓர் ஒளி! உருவமில்லாத பிரகாசம்! ஒரு புள்ளியாகவும், அதேசமயம் வானம் முழுவதும் வியாபித்தும் தோன்றும் ஒளிப் பெருவெள்ளம். இந்த ஒளி, தான் சிருஷ்டித்த சூரியன் என்ற ஒளியிடம் சொன்ன ‘யோக’த் தகவல் அது.

அந்த யோகம் பற்றிய விவரத்தை கிருஷ்ணனிடமிருந்து அறிந்துகொண்ட சூரியன், அதைத் தனது மகனான மனுவிடம் சொன்னான். இந்த மனுதான் மனித வாழ்வின் நியமங்களை, கடமைகளை, வாழ்க்கையின் ஒழுங்கை ‘ஸ்மிருதி’யாக இயற்றி அளித்தவர். இந்த மனு, தன் புத்திரனான இக்ஷ்வாகு மன்னனிடம் தெரிவித்தான். இக்ஷ்வாகு மன்னன், சூரியகுலத்தின் முதல் அரசனாவான்! அதாவது, மக்கள் அனைவருக்கும் அவர்களுடைய நலன் காக்கும் தலைவ னாகத் திகழ்ந்தவன். அதாவது, தன் தந்தையார் இயற்றிய மனுஸ்மிருதியை ஒட்டி தன் வாழ்க்கை ஒழுக்கத்தை அமைத்துக்கொண்டவன். தன் மக்களுக்கும் அதைத் தன் அரசாட்சி மூலமாக உபதேசித்தவன். இந்த ஆரம்பம் அவனுடைய குலத்தைப் பொறுத்தவரை, ‘ராம ராஜ்யம்’வரை நீண்டது.

ஒன்றின் ஆரம்பமும் அதன் முடிவும் காலக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வருபவை. அந்த இடைவெளி நீளலாம் அல்லது சுருங்கலாம். அது அந்த சம்பவத்தின் தன்மையைப் பொறுத்தது. அதன்படி யோகம் பற்றிய தகவல் பரிமாற்றம் என்பது எத்தனையோ யுகாந்திரங்களுக்கு முந்தைய காலத்தில் ஆரம்பித்து இப்போது அர்ஜுனன் காலம்வரை நீண்டிருக்கிறது. இதில் வேடிக்கையும், அர்ஜுனன் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடியதுமான விஷயம், ஆதியில் சூரியனுக்குச் சொன்ன ‘அதே’ கிருஷ்ணனே இப்போது தனக்கும் கூறுவதுதான்!

இக்ஷ்வாகு மன்னன் தனக்குப் பிறகு யாரிடம் சொன்னான் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவன் காலத்திற்குப் பிறகு யோகத்தைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியம் இல்லாதிருந்திருக்கலாம். இப்போது ஒரு புத்தகத்தின் இரண்டாம் பதிப்புபோல, அந்த யோகத்தை மீண்டும் கிருஷ்ணனே தன் உபதேசத்தால் மீண்டும் பதிவு செய்கிறார். அதாவது, இக்ஷ்வாகு காலத்திற்குப் பிறகு இப்போது அதற்கான தேவை வந்து விட்டது. அதை கிருஷ்ணன் துவாபரயுகத்தில் அந்த யுகத்தோருக்கு மட்டுமல்லாமல், அடுத்து வரும் கலியுகத்தின் மக்களுக்காகவும் அர்ஜுனன் மூலமாகச்சொல்கிறார், அவ்வளவுதான்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆதியில் சூரியனுக்கு கிருஷ்ணன் சொன்னபோது மட்டுமல்லாமல், இப்போது அர்ஜுனனுக்குச் சொல்லும்போது மட்டுமல்லாமல், என்றென்றும் தொடர்ந்து இருக்கக்கூடியதான யோகம் என்ற சத்தியம்தான். இக்ஷ்வாகு மன்னன் தான் கற்றுக்கொண்ட யோக சத்தியத்தை அடுத்து யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் அது நிலைத்திருக்கத்தான் செய்தது, மறைந்துவிடவில்லை. இக்ஷ்வாகுவுக்கும் அர்ஜுனுக்கும் இடைப்பட்ட கால இடைவெளியில் அந்த சத்தியம் மறைந்துவிடவில்லை. யாராலும் அடுத்தடுத்துக் கூறப்படவில்லை, அல்லது போதிக்கப்படவில்லை, அவ்வளவுதான்.

அதேசமயம், தனக்கு கிருஷ்ணன் சொன்ன பிறகு, அவ்வாறு தான் அறிந்துகொண்டதை அர்ஜுனன் பின்னாளில் யாருக்கும் சொல்லாவிட்டாலும், அந்த சத்தியம் என்பது இந்த உலகில் நிலைகொண்டுதான் இருக்கிறது. அது மாறுவதில்லை. வழிவழியாய் சொல்லப்பட்டாலும், வார்த்தைகள் மாறியிருக்கலாமே தவிர, தொனி மாறியிருக்கலாமே தவிர, அதன் உண்மை, பூரணத்துவம் மட்டும் அப்படியே நிலைத்திருக்கத்தான் செய்கிறது.

இப்போதும் உபதேசமாகச் செய்யாவிட்டாலும், அந்த சத்தியத்தைப் பற்றி நாம் பேசுகிறோம், அது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறோம். நமக்குப் பின்னாலும் நிலைத்திருக்கக்கூடிய ஒரே விஷயம் இந்த யோகம் என்ற சத்தியம்தான். அது அந்தப் பரமாத்மா போல, ஏன் மனிதரின் ஆன்மாபோல அழிவற்றது.

ஏவம் பரம்பரா ப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:
ஸ காலேனேஹ மஹதா யோகோ நஷ்ட பரந்தப (4:2)

‘‘பரம்பரையாகத் தான் கற்றுணர்ந்ததை அப்படியே பொருள் மாறாமல் அக்ஷரம் பிசகாமல் புரிந்துகொண்டு பின்பற்றியவர்கள் மஹரிஷிகள். அடுத்தடுத்து, பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டிருந்த அந்த யோகம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த உலகக் காலத்தில் அபூர்வமாகி விட்டது.’’ஒரு நூல் மலர்களைத் தொடுக்கிறது. மலர்கள் பல வண்ணங்களுடையவையாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கெல்லாம் ஒரே ஆதாரம் அந்த நூல்தான். ‘பூவோடு சேர்ந்த நாரும் நாறும்’ என்ற சொலவடை, பூக்களுக்குப் பெருமை தருவதாக இருந்தாலும், அவை ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம் நூல்தான், நார்தான். இந்த நாரைப் பரம்பரை என்று சொல்லலாம்.

அதில் ஒரேவகையான மலர்கள் கோக்கப்படலாம்; பல வண்ண, பல மணமுள்ள மலர்கள் கோக்கப்படலாம். ஆனால், ஆதாரம் என்னவோ நார்தான். ஆரம்பத்திலிருந்து ஒன்றொன்றாகவோ, இரண்டிரண்டாகவோ மலர்களைத் தன்னுடன் பிணைத்துக்கொண்டு எத்தனை முடியுமோ அத்தனை நீளத்துக்கு அந்த நார் நீண்டுகொண்டே செல்கிறது. நாளடைவில் அந்த மலர்கள் வாடிவிடலாம், மணம் இழக்கலாம், உதிரலாம். நாரும் குப்பைக்குப் போய்விடலாம். ஆனால், நாரின் இணைப்பதாகிய சத்தியம் தொடர்ந்து நிலைத்து வருவது உண்மைதானே!

குடகு மலையில் காவிரி உற்பத்தியாகிறது. ஒரு சிறு தொட்டியிலிருந்து புனலாகப் பொங்கிப் பெருகுகிறது. அந்தத் தொட்டியின் எத்தனை அடி ஆழத்திலிருந்து அது ஆரம்பிக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனாலும் அது காவிரியாகப் பிரவகிக்கிறது. சிறு தொட்டியிலிருந்து பெருகி, எதிரே உள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்து வழிந்து வெளியே, பேராறாக சுழித்துக்கொண்டு ஓடுகிறது. நடுநடுவே சில ஓடைகளும், சிற்றாறுகளும் அதனுடன் கலக்கின்றன. ஆனாலும் காவிரி தன் தன்மையை இழப்பதில்லை; அது அப்போதும் காவிரி என்றுதான் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இதுதான் ஆதார ஆறு. குடகிலும் இது காவிரிதான், ஸ்ரீரங்கத்திலும் இது காவிரிதான், வழிநெடுகவும் காவிரிதான்.

இதேபோலதான் நம் பரம்பரையும். இந்த வகையில் ரிஷிகள் யோகத்தைப் பற்றி அடுத்தவர்களுக்குக் கூறினார்கள். எதிர்கால சமுதாயத்தின் நன்மையை உத்தேசித்தே உபதேசம் செய்யக்கூடிய இந்த ரிஷிகள், அந்த அக்கறையைத் தாம் தீர்க்கமாக சொல்லும் தன்மையில் காட்டினார்கள். கேட்பவர்களில் சிலர் அலட்சியமாக இருந்தாலும், கூறுபவர்கள் மிகுந்த விசுவாசத்தோடு தம் பணியைச் செய்தார்கள். கேட்பவர்களில் ஒரு சிலராவது தாம் சொல்வதை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, தம்மைப் போலவே அவர்களும் சமுதாயப் பொறுப்புணர்வுடன் தம் கடமையைத் தொடர்வார்கள் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள் அந்த ரிஷிகள்.

இதில் ‘ரிஷிகள் அறிந்திருந்தனர், அவர்கள் மற்றவர்களுக்குக் கூறினர்’ என்று கிருஷ்ணன் சொல்வதிலிருந்து அவர்கள் சமுதாய நலன் விழைந்த பெரியவர்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. அதாவது, அத்தகைய பொறுப்புணர்வுடன் அவர்கள் கூறினார்கள் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிருஷ்ணன் சொல்கிறார்; அதேசமயம் கேட்பவர்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. அதாவது, யோகத்தைச் சொல்ல வேண்டியது, தெளிவாகச் சொல்லவேண்டியது, அக்கறையுடன் சொல்லவேண்டியது என்ற பொறுப்பில் ரிஷிகள் நடந்து கொண்டாலும், கேட்பவர்கள் எல்லாம் அத்தனை ஈடுபாட்டோடு, எதிர்கால நன்மையை உத்தேசித்துக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

சொல்லப்பட்டவை எழுதப்பட்டிருந்திருக்குமானால், கேட்பவர்களின் அக்கறையின்மையைப் பற்றி வருந்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், பாரம்பரியமாக ‘ஸ்ரவண’ வழியே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. சொல்வதும், சொல்வதைக் கேட்பதுமாகிய இந்த வழக்கத்தில் ஆரம்ப முழுமை தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே. சொல்லும்போது உச்சரிப்பில் மாற்றம், அல்லது கேட்கும்போது கவனமின்மை காரணமாக மூல உபதேசம் சிதைக்கப்பட்டிருக்கலாம்.

இந்தச் சிதைவின் பரிமாணம் கூடிக்கொண்டே போயிருக்கலாம். ஓர் ஒளியை விட்டு விலகி, தள்ளித் தள்ளிச் சென்றுகொண்டேயிருக்கும்போது பார்வையிலிருந்து அந்த ஒளி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நம் கண்களைப் பொறுத்தவரை இல்லாமலேயே போய்விடலாம். அதுபோலதான் இப்போது ‘யோகம் அபூர்வமாகி விட்டது’ என்று சொல்கிறார் கிருஷ்ணன். ஆனால், ஒளி இருக்கத்தான் செய்கிறது. யோகம் என்ற சத்தியம் நிரந்தரமாக ஒளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதை உணராததால், அதை அறியாததால் அது முற்றிலும் இல்லையோ என்ற மாயை ஏற்படுகிறது.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post புராணங்களின் நிலையாமைக்குப் பதிவின்மையே காரணம்! appeared first on Dinakaran.

Tags : Ghana ,
× RELATED கத்தியுடன் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட...