×

9 அடி மட்டுமே நீர் இருப்பு குட்டை போல் சுருங்கியது கொடுமுடியாறு அணை: வரத்தும் குறைந்தது

நெல்லை: நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடுமுடியாறு, கோம்பை ஆறு இரண்டும் சேர்ந்து தாமரையாறு என்ற இடத்தில் இணையும் இடத்தில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 52.50 அடியாகும். இந்த அணையில் அதிகபட்சமாக 121 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும். கொடுமுடியாறு அணையின் மூலம் வள்ளியூரான், படலையார் மற்றும் ஆத்துகால்வாய் என 3 கால்வாய்கள் மூலம் 44 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 517 ஏக்கர் நிலமும், வடமலையான் கால்வாய் மூலம் 3 ஆயிரத்து 232 ஏக்கர் நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 280 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நாங்குநேரி தாலுகாவில் 6 கிராமங்களும், ராதாபுரம் தாலுகாவில் 10 கிராமங்களும் என மொத்தம் 16 கிராமங்கள் கொடுமுடியாறு அணையின் மூலம் பயனடைகின்றன. கொடுமுடியாறு அணை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நிரம்புவது வழக்கம். பின்னர் பிசான நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படும்.

தற்போது பிசான நெல் சாகுபடி முடிந்து ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம் என்பதால் கொடுமுடியாறு அணையின் நீர் இருப்பு குறைந்துள்ளது. அணையில் தற்போது நீர்மட்டம் 9 அடி மட்டுமே உள்ளதால், அணையின் நீர் இருப்பு சுருங்கி சிறிய குட்டை போல் காட்சி தருகிறது. வன விலங்குகள் அணைப்பகுதியில் தண்ணீர் அருந்த வந்து செல்கின்றன. அணைக்கு விநாடிக்கு 8.96 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை. ஜூன் 1ம் தேதி தென் மேற்கு பருவமழை துவங்குவது வழக்கம். குறித்த காலத்தில் பருவமழை துவங்கும் பட்சத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு நீர் வரத்து இருக்கும். அதன் பின்னரே நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.

* சுற்றித் திரியும் மிளா கூட்டம் கொடுமுடியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நீர் இருக்கும் இடத்தை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்வது வழக்கம். கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பதால் வன விலங்குகள் கூட்டம், கூட்டமாக வந்து தண்ணீர் அருந்திச் செல்கின்றன. கொடுமுடியாறு அணையில் நீர் அருந்திய மிளாக் கூட்டம் அருகில் உள்ள வனப்பகுதியில் முளைத்துள்ள புற்கள் மூலம் இரை தேடிக் கொண்டன.

The post 9 அடி மட்டுமே நீர் இருப்பு குட்டை போல் சுருங்கியது கொடுமுடியாறு அணை: வரத்தும் குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Tirakkurungudi ,West Ghillside ,Kombai ,Dinakaran ,
× RELATED குலதெய்வ கோயிலுக்கு சென்ற மதுரையை சேர்ந்தவர் பலி