சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 29ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கத்திரி வெயில் முடிவுக்கு வரவுள்ளது. அதே நேரத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்க உள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் நேற்று 106 டிகிரி வெயில் நிலவியது. குறிப்பாக சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது.
கோவை, கரூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெப்ப சலனம் நீடித்து வருவதால், ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பரமத்தியில் 50மிமீ மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க உள்ள நிலையில் தரைப் பகுதியில் வறண்ட காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் மற்றும் வெப்பம் அதிகரிக்கும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப சலனம் மேலும் நீடிக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டில் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். 29ம் தேதி இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதியில் காற்று மணிக்கு 40 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
The post வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
