×

ஆன்மிகம் பிட்ஸ்: திருவேற்காடு கருமாரியம்மன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவேற்காடு – கருமாரியம்மன்

வெள்வேல் மரங்கள் அதிகமாக இருந்ததால் வேற்காடு என்றானது. வேதங்களையே மரங்களாக்கி அதனடியில் லிங்க மூர்த்தத்தில் ஈசன் வெளிப்பட்டார். லிங்கத்தோடு அன்னையும் உதயமானாள். கொடிய அசுரனை அழிக்க முருகனுக்கு கருமாரி அன்னை தம் திருக்கரத்தால் வேல் அளித்தாள். அதனாலேயே `வேற்கன்னி’ ஆனாள். வேலன் வேலால் கீறி தீர்த்தம் உண்டாக்கினான். அதுவே வேலாயுத தீர்த்தமாயிற்று. அந்த பராசக்தியே இங்கு மாரியம்மனாக அமர்ந்து எல்லோரையும் காக்கிறாள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே இந்த கருமாரி. வேண்டுதல் இல்லாமலேயே வேண்டியதைத் தருவதில், பெற்றவளுக்கும் நிகரற்று விளங்கும் தாய் இவள். இத்தலம் சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகே உள்ளது.

கன்னியாகுமரி – ஸ்ரீபகவதி அம்மன்

முக்கடலும் சங்கமிக்கும் புண்ணியபூமி, கன்னியாகுமரி. குமரி, பகவதிக்கு தோழிகள் இருவர். ஒருத்தி கோயிலின் வடக்கில் தியாக சுந்தரியாகவும் மற்றவள் வடமேற்கில் பாலசுந்தரியாகவும் வீற்றருள்கிறார்கள். கன்னியாகுமரி, வலக்கையில் ருத்ராட்ச மாலை கொண்டும் இடது கையை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக்கோலத்தில் அருள்கிறாள். தலை கிரீடத்தில் பிறைச் சந்திரனும், மூக்கில் வைரமூக்குத்தியும் மின்னுகின்றன. ராமபிரான், இலங்கைக்கு செல்வதற்கு முன்பு கன்னியாகுமரியை வணங்கிச் சென்றார். பகன், முகன் எனும் அசுரர்களை அழித்த காளி, கொல்கத்தாவிலும், கன்னியாகுமரியிலும் நிலைபெற்று பாரதத்தின் இரு எல்லைகளையும் காப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. இக்கோயிலில் கன்யா பூஜை செய்தால், மழலைப் பாக்கியம் கிட்டுவது உறுதி.

கடலூர் – கரை காத்த காளியம்மன்

கடலூர் புது பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் அமைந்துள்ளது கரைகாத்த காளியம்மன் கோயில். ஒருமுறை இங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது, வெள்ளத்தைத் தடுத்து மக்களைக் காத்த தெய்வம் என்று இந்த அம்மனைப் போற்றுகிறார்கள். எனவே, ‘கரை காத்த காளி அம்மன்’ என்றும் இந்த அம்மனை அழைக்கின்றனர். நியாயமான வழக்குகளில் வெற்றி கிடைக்க, இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து புடவை சாற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.

பூவாளூர் – ஸ்ரீசெளந்தரியம்பாள்

திருச்சி – லால்குடி நெடுஞ்சாலையில் லால்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூவாளூர் என்ற இந்த தலம். பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது. இங்குள்ள திருமூலநாத சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘திருமூலநாத சுவாமி’. இறைவி பெயர் குங்கும சௌந்தரி அம்பாள். ஆலயத்தின் அருகே வலது புறம் “வாக்கு வாளம்மன்’’ ஆலயம் உள்ளது.

இதன் கருவறையில் சப்த மாதர்களின் திருமேனிகள் உள்ளன. திருமணம் ஆகாத கன்னியர்கள், இறைவி குங்கும சவுந்தரிக்குக் குங்கும அர்ச்சனைசெய்து, அந்த குங்குமத்தை எடுத்து தினசரி நெற்றியில் இட்டுக்கொண்டால், விரைந்து திருமணம் நடைபெறும் என்கின்றனர் பக்தர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இறைவியின் சந்நதியில் தொட்டில் வாங்கி கட்டினால் அந்த பாக்கியம் உண்டாகும் என்றும் சொல்கின்றனர் பக்தர்கள்.

திருமணஞ்சேரி – ஸ்ரீகோகிலாம்பாள்

ஒருமுறை அம்பிகை சாபத்தால் பசுவாக மாறி பல இடங்களுக்கும் சென்றாள். கோமல் என்ற தலத்தை அடைந்தபோது, அங்கே திருமால், மாடு மேய்ப்பவனாக வந்து, தன் பசுக்களோடு அவளையும் பாதுகாத்தார். திருக்கோழம்பத்தில் அந்த பசுவின் வருடலை ஏற்றார் திருமால். பிறகு, திருவாவடு துறையில் அந்தப் பசுவிற்கு சாப விமோசனம் அளித்தார். குத்தாலம் என்ற திருத்தலத்தில், பசு உருவம் நீங்கி, பரத மகரிஷியின் வேள்வியில், மீண்டும் உமையம்மையாக தோன்றுகிறாள் அம்பிகை. அதையடுத்து, திருவேள்விக்குடியில் கங்கணதாரணம் செய்துகொண்டு, குறுமுலைப்பாடி மற்றும் எதிர்கொள்பாடி வழியே சென்றபோது, மணக்கோல நாதராக அவளை இறைவன் எதிர்கொண்டார்.

திருமணஞ்சேரியில் அவளை மணஞ் செய்துகொண்டு, கல்யாணசுந்தரராக அருள்பாலிக்கிறார் இறைவன். அம்பிகை இந்தத் தலத்தில், கோகிலாம்பிகையாக அருளாட்சிபுரிகிறாள். எம்பெருமானின் திருமண வைபவத்தைக் காண ஏழு கடல்களும் மாலையாக மாறி வந்ததாகத் தலபுராணம் சொல்கிறது. இந்த கடல்மாலைகள், கோயிலைச் சுற்றி இப்போது அகழியாகக் காட்சியளிக்கின்றன. திருமணம் கூட்டுவிப்பது மட்டுமல்ல, மனவேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரையும் மனம் திருந்தி, இணைந்து வாழச்செய்யும் அற்புதத் தலம் இது.

தொகுப்பு: அருள் ஜோதி

The post ஆன்மிகம் பிட்ஸ்: திருவேற்காடு கருமாரியம்மன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தாயின் உயர் தகுதி