×

கம்பம்மெட்டு பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்ட வந்தவர்கள் கைது: வாகனம் பறிமுதல்

 

கம்பம், மே 23: கம்பம்மெட்டு பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்ட வந்தவர்களை போலீசார் கைது செய்து கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கேரளப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், இறைச்சிக்கடைகளில் சேகரமாகும் இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை கேரளாவில் கொட்டுவதற்கு கேரள அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால் அங்குள்ள குப்பைகளை இரவு நேரங்களில் வாகனங்கள் மூலமாக எல்லையில் உள்ள தமிழக வனப்பகுதி மற்றும் சாலையோரங்களில் கொட்டப்படுவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று கம்பம்மெட்டு தமிழக எல்லையில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவிலிருந்து தமிழகப்பகுதிக்குள் பேரலோடு வந்த லோடு ஆட்டோ ஒன்றை நிறுத்தி விசாரித்தனர். அப்போது ஆட்டோவில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், போலீசார்கள் ஆட்டோவில் இருந்த பேரலை திறந்து பார்த்தனர். அப்போது அதில் தொற்றுநோயை பரப்பக்கூடிய வகையில் கோழி இறைச்சிக்கழிவுகள் மற்றும் ஆட்டு கொழுப்பும் இருந்தது.

இதுகுறித்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இராயப்பன்பட்டியைச் சேர்ந்த மணி(53), மற்றும் பரமன்(55) என்பதும், இதில் மணி வண்டன்மேட்டில் கோழிக்கடை வைத்துள்ளதாகவும், அங்கு கோழி கழிவுகளை கொட்ட முடியாததால் தமிழக வனப்பகுதிக்குள் கொட்ட வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து சோதனைச்சாவடி போலீசார் வாகனத்துடன் அவர்கள் இருவரையும் கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கம்பம் வடக்கு காவல்நிலைய எஸ்ஐ இளையராஜா அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

The post கம்பம்மெட்டு பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்ட வந்தவர்கள் கைது: வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kampammettu ,Gambam ,Gambammetdu ,Kampam North ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர், எம்எல்ஏ பிரசாரம்