சென்னை: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சலிங் நாளை தொடங்கும் என்று தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிவிப்பு: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆகியோருக்கு 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் கவுன்சலிங் தொடர்பான அட்டவணை கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணங்க, மே 22, 24, மற்றும் 26ம் தேதிகளில் நடக்க இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது, திருத்திய கால அட்டவணையின்படி மேற்கண்ட ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சலிங் நடக்கும் என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இதன்படி, பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீளவும் தாய் ஒன்றியத்துக்குள் ஈர்க்கும் கவுன்சலிங் 24ம் தேதி நடக்கும். இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சலிங்(ஒன்றியத்துக்குள்) 25ம் தேதியும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கவுன்சலிங் 26ம் தேதியும், இடைநிலை ஆசிரியர் மாறுதல் கவுன்சலிங் 29ம் தேதியும் நடக்கும்.
The post ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நாளை தொடங்கும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
