×

‘என்ன பண்ணிட்டு இருக்கீங்க… கடத்தலா நடக்குது இங்க…’லாரிகளை சிறைபிடித்த அமைச்சர் போலீசாருக்கு செம டோஸ்: தமிழக-கேரள எல்லையில் நள்ளிரவில் நடந்த அதிரடி ரெய்டு

நாகர்கோவில் : ‘அனைவரையும் தொலைச்சிருவேன்… என்ன பண்ணிட்டு இருக்கீங்க… கடத்தலா நடக்குது இங்க… அசிங்கமா இல்ல’ இப்படி ஆவேசமாக பேசி போலீசாரை நடுநடுங்க வைத்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த 19ம்தேதி இரவு குமரி மாவட்டத்துக்கு வந்து கொண்டிருந்தார். குமரி மாவட்ட எல்லையான கோழிவிளை சோதனை சாவடி வழியாக அமைச்சர் கார் வந்த போது, அந்த வழியாக சாரை சாரையாக டாரஸ் லாரிகள் சென்றன. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் , உடனடியாக காரை நிறுத்தி நடுரோட்டில் இறங்கி டாரஸ் லாரிகளை அப்படியே நிறுத்துமாறு கூறினார். பின்னர் சோதனை சாவடிக்கு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், ‘என்ன பண்ணீட்டு இருக்கீங்க.. இவ்வளவு லாரி போய்ட்டு இருக்கிறது. எப்படி போகுது. சோதனை செய்தீர்களா?’ என கேட்டார்.

அப்போது போலீசார் ஒருவர், ‘ஓவர் லோடுக்கு பைன் போட்டு இருக்கிறோம்’ என்றார். அதற்கு அமைச்சர், ‘என்ன செய்றீங்க. எஸ்.பி.க்கு போன் போடுங்க. அனைத்து வண்டியையும் லாக் செய்து சாவியை எடுங்க. 10 டயர் வண்டில கனிம வளங்கள் கொண்டு போக கூடாதுன்னு உத்தரவு இருக்கா இல்லையா? அரசு உத்தரவு உங்களுக்கு தெரியாதா? என்ன வேலை பாக்கீங்க. கடத்தலா நடக்குது இங்க? அசிங்கமா இல்ல. அனைவரையும் தொலைச்சிருவேன்’ என கடுமையாக எச்சரித்தார். பின்னர் எஸ்.பி.க்கு போன் போட்டு பேசி, அனைத்து டாரஸ் லாரிக்கும் பைன் போட உத்தரவு போட்ட அமைச்சர், சோதனை சாவடியில் அலட்சியமாக இருக்கும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையால், கோழிவிளை சோதனை சாவடியில் இருந்த போலீசார் கதி கலங்கி போனார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘என்ன பண்ணிட்டு இருக்கீங்க… கடத்தலா நடக்குது இங்க…’லாரிகளை சிறைபிடித்த அமைச்சர் போலீசாருக்கு செம டோஸ்: தமிழக-கேரள எல்லையில் நள்ளிரவில் நடந்த அதிரடி ரெய்டு appeared first on Dinakaran.

Tags : minister ,Tamil Nadu-Kerala border ,Nagarko ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...