×

மருத்துவமனையில் அட்மிட் செய்ய லஞ்சம் கேட்டதால் புடவையை மறைத்து சாலையில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண்கள்: உத்தர பிரதேசத்தில் அவலம்

அலிகார்: அலிகார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க லஞ்சம் கேட்ட நிலையில், சாலையில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்கும் அவலநிலை ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் இக்லாஸ் பகுதியை சேர்ந்த தொழிலாளி பப்லு சிங் (30) – சுமன் தேவி (25) தம்பதி வசித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான சுமன் தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் பிரசவம் பார்ப்பதற்காக ரூ. 1000 லஞ்சம் கேட்டனர்.

ஆனால் சுமன் தேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் இருந்து தனது மனைவியை வெளியே அழைத்து வந்த பப்லு சிங், வேறொரு அரசு மருத்துவமனைக்கு செல்ல முயன்றார். ஆனால் நடந்து செல்லும் வழியில் சுமன் தேவிக்கு பிரசவ வலி கடுமையானது. அதனால் அவ்வழியாக சென்ற வழிப்போக்கர்கள் உட்பட பல பெண்கள், சுமன் தேவியின் பிரசவத்திற்கு உதவினர்.

அதற்காக அவர்கள் புடவையால் சுமன் தேவிவை சுற்றிலும் மறைப்பு அமைத்து பிரசவம் பார்த்தனர். அப்போது சுமன் தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து பப்லு சிங் கூறுகையில், ‘ஆரம்ப சுகாதார மைய ஊழியர்கள், என் மனைவியை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக என்னிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டனர். எனது மனைவியின் பிரசவ வலி அதிகமானதால், அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வலியுறுத்தினர். அதனால் அலிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து செல்ல முயன்றேன். ஆனால் போகும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

வழிப்போக்கர்களின் உதவியால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது’ என்றார். இதுகுறித்து இக்லாஸ் சுகாதார மைய பொறுப்பாளர் ரோஹித் பாட்டி கூறுகையில், ‘சுமன் தேவியின் கணவரிடம் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. செவிலியர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரசவித்த பெண் அலிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர்’ என்றனர்.

The post மருத்துவமனையில் அட்மிட் செய்ய லஞ்சம் கேட்டதால் புடவையை மறைத்து சாலையில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண்கள்: உத்தர பிரதேசத்தில் அவலம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Aligarh ,Aligarh Hospital ,Admit ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...