×

இந்த வார விசேஷங்கள்

புண்ணாக கௌரி விரதம் 20.5.2023 – சனி

அம்பாளுக்கு உகந்த நாள் என்று வருடத்தில் சில நாள்கள் உண்டு. அந்த நாள்கள் அம்பாளுக்கு உகந்த நாள்களாக விரதம் இருந்து கொண்டாடப்படுகின்றன. அந்த விரதங்களை கௌரி விரதம் என்று பொதுவாகச் சொல்வார்கல். கௌரி என்றால் அது பார்வதி தேவியைக் குறிக்கும். பார்வதி பரமேஸ்வரனை நினைத்து இருந்த விரதங்கள் கௌரி விரதங்கள், அதாவது பார்வதியே இருந்த விரதங்கள். அவள் பல வடிவங்களில் அந்த விரதங்களை பல்வேறு பெயர்களின் இருந்திருக்கிறார். அந்த பலன்களும் பல்வேறு விதமான பலன்களாக இருக்கின்றன. இந்த நாளில் கலசம் வைத்து அம்பாளை ஆவாகனம் செய்து வணங்க வேண்டும். மலர் மாலைகளால் அம்பாள் படங்களை அலங்கரித்து விளக்குகள் ஏற்றி நிவேதனம் வைத்து வணங்குவது சிறப்பு.

ஒவ்வொரு கௌரி விரதத்திற்கும் ஒரு பலன் உண்டு. புன்னை மரத்தடியில் இருக்க வேண்டிய விரதம் இது. அங்கு நன்றாக சுத்தம் செய்து, கோலமிட்டு, பலகை இட்டு அம்பாள் படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். அன்று மாலை சிவாலயம் சென்று அம்பாள் கோயிலில் விளக்கேற்றி பிராகார வலம் வர வேண்டும். குறிப்பாக கடக ராசி, விருச்சிக ராசிக்காரர்களுக்கும், ஏழரை சனி நடைபெறும் மகர, கும்ப, மீனா ராசிகளுக்கும் இந்த விரதங்கள் சிறப்பான பலன்களைத் தரும். தீமை விலகி நன்மைகள் பெருகும். இந்த புண்ணாக கௌரி விரதம் இருப்பதால் நோய் நொடிகள் அகன்று ஆரோக்கியம் சீர்படும். புதுவாழ்வு பெற புண்ணாக கௌரி விரதம் இருக்க வேண்டும்.

திருக்கோட்டியூர் நம்பி திருநட்சத்திரம் 20.5.2023 – சனி

ராமானுஜருக்கு ஐந்து குருமார்கள். அதில் ஒருவர் திருக்கோஷ்டியூர் நம்பி. திருக்கோட்டியூர் நம்பி, ஆளவந்தாரின் சீடர். இவரை சர விளக்கு என்பார்கள். சரவிளக்கு அங்கேயே இருந்து அருள் தரும். இருந்த இடத்தில் இருக்கும் மானிடர் என்பார்கள். ராமானுஜரை குத்துவிளக்கு என்பார்கள். அவர் பல இடங்களிலும் சென்று சீடர்களுக்கு அருள் தருவார். ராமானுஜர் இவரிடம் இருந்துதான் ரகசிய மந்திரங்களை எல்லாம் பெற்றார். அந்த மந்திர அர்த்தங்களை தெரிந்து கொள்வதற்காக 18 முறை திருவரங்கத்தில் இருந்து திருக்கோட்டியூருக்கு நடந்தார். இவருக்குள்ள சிரத்தையையும் ஆர்வத்தையும் பார்த்து ஆளவந்தார் சொன்ன “ஆம் முதல்வன் இவர் தான் போலிருக்கிறது” என்பதைத் தெரிந்து கொண்டு அவருக்கு ரகசிய மந்திர அர்த்தங்களை எல்லாம் கொடுத்தார்.

இவற்றையெல்லாம் பெற்ற ராமானுஜர் அவற்றை “ஆசையுடையவர்கள் எல்லாம் வாருங்கள்” என்று சொல்லி, மற்றவர்களுக்கும் அதை வள்ளல் போல் அளித்தார். இதை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜரை அழைத்து ‘‘குருவின் ஆணையை மீறி நீ மற்றவர்களுக்குச் சொன்னதால் உனக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?’’ என்று கேட்டார். ராமானுஜர் ‘தெரியும் நரகம் கிடைக்கும்’’ என்றார்.
‘‘அப்படித் தெரிந்துதான் இதை மற்றவர்களுக்குச் சொன்னாயா?’’ என்று கேட்க, ராமானுஜர் பரம கருணையோடு, ‘‘நான் ஒருவன் நரகம் போனாலும் மற்றவர்கள் சத்கதி அடைவார்களே என்பதற்காகச் சொன்னேன்’’ என்று சொன்னவுடன், திருக்கோட்டியூர் நம்பிகள் ஆரத்தழுவி ‘‘எம்பெருமானுக்கும் இல்லாத கருணை குணம் உமக்கு இருக்கிறது. வாரும் எம் பெருமானாரே’’ என்று அவரை அழைத்து ஆசீர்வதித்தார். வைணவ தரிசனம்’ என்று அழைக்கபட்ட விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இனி மேல் ‘எம்பெருமானார் தரிசனம்’ என்று அழைக்கப்படும் என்றார். இன்றும் ஸ்ரீ இராமானுஜ சித்தாந்தம் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைக்கிறார்கள். ராமானுஜருக்கு ‘எம்பெருமானார்’ என்ற பெயர் வர இதுவே காரணம்.

ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம் ருதஸாகரம்
ஸ்ரீமத கோஷ்டீபரிபூர்ணம தேஸிகேந்த்ரம் பஜாமஹே
என்பது அவருடைய பெருமை பேசும்
சுலோகம்.

அடக்கமும், ஞானமும், சீலமும் ஒருங்கே அமைந்த திருக்கோஷ்டியூர் நம்பிகள் திருமாளிகை இன்றும் திருக்கோட்டியூர் தலத்தில் இருக்கிறது. அவர் வம்சத்தாருக்கு முதல் தீர்த்தம் மரியாதை அங்கு அளிக்கப்படுகின்றது. அவருடைய திருநட்சத்திர உற்சவம் இன்று. (வைகாசி ரோகிணி)

அக்னி நட்சத்திர பழனி கிரிவலம் நிறைவு 21.5.2023 – ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய கிழமை. இது வைகாசி மாதம் என்பதால் சூரியனுடைய கதிர்கள் அதிகமான வெம்மைச் சக்தியோடு சுட்டெரிக்கும். கத்திரி வெயில் காலம், அக்னி நட்சத்திர காலம் என்று சொல்வார்கள். சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் ஏழு நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். மேஷத்தில் உள்ள பரணி நட்சத்திரத்திலும் ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்திலும் சூரியன் இருக்கும். மேஷ ராசி செவ்வாய்க்கு உரிய ராசி. அதனுடைய அதி தேவதை முருகன். சூரியனைப் போன்று ஜொலிப்பவன்.

எனவே இந்த அக்னி நட்சத்திர ஆரம்ப காலத்தில் முருக பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து புறப்பட்டு பழனிக்கு வந்து கிரிவலம் நடப்பார்கள். சித்திரை கழுவு என்று அழைக்கப்படும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 14 நாட்களுக்கு பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். அதன்படி, கால்களில் செருப்பு அணியாமல், பெண்கள் முருகனுக்கு உகந்த கடம்ப மலர்களைத் தலையில் சூடியும், ஆண்கள் கைகளில் ஏந்தியபடி கிரிவலம் வருவர். அந்த கிரிவலத்தின் நிறைவு நாள் இன்று.

ரம்பா திருதியை 22.5.2023 – திங்கள்

ரம்பை, ஊர்வசி இருவரும் தேவ லோகத்துப் பெண்கள். அழகுக்கு உதாரணமாகத் திகழ்பவர்கள். அதில் ஒரு முறை ரம்பை தன்னுடைய அழகை இழந்து விடுகிறார். அப்பொழுது தேவேந்திரன் ‘‘மறுபடியும் இழந்த அழகையும் ஐஸ்வர்யங்களையும் பெற பார்வதி தேவி இருந்த கௌரி விரதத்தை இருக்க வேண்டும். தற்சமயம் பார்வதி தேவி சிவபெருமானை எண்ணி பூலோகத்தில் மகிழ மரத்தடியில் தவம் செய்கின்றாள். நீ அங்கு சென்று பார்வதியை வணங்கி இந்த விரதத்தை மேற்கொண்டால் உனக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்’’ என்று சொல்ல, அவள் அப்படியே புறப்பட்டு வருகின்றாள். அவளுக்கு பார்வதி தேவியின் காட்சி கிடைக்கிறது. இந்த விரதத்தின் பலனாய் இழந்த அழகையும் ஐஸ்வர்யங்களையும் பெற்று மறுபடியும் தேவலோகத்தில் முதன்மை பெண்ணாகத் திகழ்கிறாள்.

பொதுவாகவே சுக்லபட்ச திருதியை திதி என்பது மிக உயர்வானது இந்த ரம்பா திருதியை விரதம். ஆனி யிலும் சமயத்தில் வரும். இன்னும் சில பேர் கார்த்திகை வளர்பிறை திருதியை திதியை ரம்பா திருதியை ஆக அனுசரிப்பார்கள்.
முதல் நாள் மஞ்சளில் அம்பாளின் உருவம் செய்து பூஜை செய்ய வேண்டும். பூஜைக்கு மறுநாள் சுந்தரமான முருகனை மடியில் எடுத்து பார்வதி தேவி கௌரியாக காட்சி தருவாள். முக அழகு மட்டுமல்ல, மன அழகும் வசீகரமும் ஏற்படும்.  இதயம் சுத்தியாகும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். விசாலமான மனம் கிடைக்கும். அதனால் மனம் விரும்பியது எல்லாமே அடையலாம்.

அங்காரக சதுர்த்தி கதலி கௌரி விரதம் 23.5.2023 – செவ்வாய்

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தியும் இணைந்து வருவதால் ஒரு சிறப்பு உண்டு. செவ்வாயை அங்காரகன் என்பார்கள். சதுர்த்தியும் சேர்ந்து வருவதால் இன்றைய தினத்தை அங்காரக சதுர்த்தி என்று விசேஷமாகக் கொண்டாடுவார்கள். விநாயகருக்கு விரதம் இருந்து பூஜை செய்து விக்னங்களைக் களைந்து செயல் வெற்றி பெற இந்த விரதம் அவசியம் இருக்க வேண்டும். பூமிக்குரிய செவ்வாய், கிரக பதவி பெற தவமிருந்து விநாயகரை வணங்கி கிரக பதவியைப் பெற்றதால் இந்த விரதம் அவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது. இன்று காலை முதல் விரதமிருந்து, அருகம்புல் மாலை, இயன்றால் சுண்டல், மோதகம், பொறி, அவல், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று சமர்ப்பணம் செய்து விட்டு, வணங்கி வலம் வர வேண்டும்.

அவரை மனதார வணங்க வேண்டும். கோயில் அருகில் இல்லாதவர்கள் வீட்டிலும் இதே நிவேதனங்களை வைத்து பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். இன்று கதலி கவுரி விரதம். கதலி என்றால் வாழை மரங்களைக் குறிக்கும். வாழை மரத்தடியில் இந்த விரதத்தை அந்தக் காலத்தில் இருப்பார்கள். இப்பொழுது வீட்டிலேயே வாழைப்பழங்களையும் சிறு வாழை கன்றுகளையும் வைத்து பார்வதி படத்தை அலங்கரித்து விளக்கேற்றி வைத்து இந்த விரதத்தை இருப்பதன் மூலமாக தீர்க்க சுமங்கலித்துவமும் கணவனோடு இணக்கமான வாழ்வும் திருமணமாக பெண்களுக்கு நல்ல கணவனும் அமையும்.

நம்பியாண்டார் நம்பி குரு பூஜை 24.5.2023 – புதன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பக்கத்தில் உள்ள திருநாரையூர் என்ற ஊரில் சவுந்தரநாதா் என்ற திருக்கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில்,33-வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு அவதரித்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருடைய அருஞ் செயலானது தேவாரங்களைத் தொகுத்துக் கொடுத்தது. இங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் காட்டுமன்னார் கோயில் உள்ளது. அங்கு அவதரித்தவர் நாதமுனிகள். அவர் ஆழ்வார்கள் பாசுரங்களைத் தொகுத்துக் கொடுத்தார். சைவ நூல்களை தொகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூல்களைத் தொகுத்துக் கொடுத்த நாதமுனிகளும் கிட்டத்தட்ட ஒரே ஊரில் அவதரித்தது என்பது அந்த ஊருக்கான சிறப்பு.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sunga Gauri ,Shani Amphal ,
× RELATED தாயின் உயர் தகுதி