×

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உதவியாளர்களுக்கு ஏசி பஸ்களில் இலவச பயணம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது உதவியாளர்களுடன் குளிர்சாதன பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அனைத்து கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் மாநகர போக்கு வரத்துக் கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வழி ஏற்கனவே ஆணையிடப்பட்டது.

எனினும் இதனை மீண்டும் வலியுறுத்தி பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் குளிர்சாதனப் பேருந்துகளில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டமன்ற பேரவை செயலாளரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் இலவச பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் ஓட்டுநர், நடத்துநர்கள் கட்டணமில்லா பயணம்செய்ய அனுமதிக்குமாறு இச்சுற்றறிக்கை வழி மீண்டும் உத்தரவிடப்படுகிறது.

குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பஸ்களில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உதவியாளர்களுக்கு ஏசி பஸ்களில் இலவச பயணம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : l. PA ,Transport Corporation ,M. l. PA ,City Transport Corporation ,M. ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...