×

தாம்பரம் அருகே முறிந்து விழுந்த ராட்சத விளம்பர பேனர்

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில், ஒரு தனியார் வீட்டின் மொட்டை மாடியில் உரிய அனுமதியின்றி அமைத்திருந்த சுமார் 40 அடி உயர தனியார் நிறுவன ராட்சத விளம்பர பேனர் திடீரென முறிந்து விழுந்தது. இதில் மின்கம்பங்கள், வயர்கள் சேதமாகின. சென்னை தாம்பரம் அருகே கரசங்கால் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (50). இவர், தனக்கு சொந்தமான வீட்டின் மொட்டை மாடியில் ஒரு தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் வைப்பதற்கான இடத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த இடத்தில், சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சுமார் 40 அடி உயரத்தில் ஒரு தனியார் ராட்சத அளவிலான தனியார் நிறுவனத்தின் விளம்பர பேனரை பொருத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் அண்ணாதுரை வீட்டின் மொட்டை மாடியில் அரசின் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டு இருந்த தனியார் நிறுவனத்தின் 40 அடி உயர ராட்சத விளம்பர பேனர் திடீரென முறிந்து கீழே விழுந்தது.

இதனால் அப்பகுதியில் இருந்த 5க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து, ஆங்காங்கே மின்வயர்கள் துண்டிக்கப்பட்டு தொங்கியது. இதையடுத்து அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் மணிமங்கலம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன் ராட்சத விளம்பர பேனர் அகற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சேதமான மின்கம்பங்கள் மற்றும் மின்வயர்களை மாற்றி, சுமார் 2 மணி நேரம் கழித்து மின் வினியோகம் சீரமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இப்புகாரின்பேரில் போலீசார் வீட்டு உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் விளம்பர நிர்வாகியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post தாம்பரம் அருகே முறிந்து விழுந்த ராட்சத விளம்பர பேனர் appeared first on Dinakaran.

Tags : tambaram ,Sripurudur ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...