×

ஸ்டாய்னிஸ் அதிரடி ஆட்டம் லக்னோ 177 ரன் குவிப்பு

லக்னோ: மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி 177 ரன் குவித்தது. லக்னோ வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் 63வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித்சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். லக்னோ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக தீபக்ஹோடா-குயின்டன் டி காக் களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், 3வது ஓவரில் ஹோடா 5 ரன்னில் ஜேசன்பேரண்டோப் பந்தில் டிம் டேவிட்டிடம் கேச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மான்கட் டக் அவுட் ஆகி, நடையை கட்டினார். 3வது விக்கெட்டுக்கு கேப்டன் குணால்பாண்டியா களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார். பவர் பிளே ஓவர் முடிந்திருந்தவேளையில் குயின்டன் டி காக் 16 ரன்னில் பியூஸ் சாவ்லா பந்தில் இஷான்கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

4வது விக்கெட்டுக்கு குணால் பாண்டியாவுடன், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை பந்து வீச்சை அடித்து ஆடியது. 14 ஓவரில் 100 ரன்களை கடந்தநிலையில், 16வது ஓவர் தொடக்கத்தில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த குணால் பாண்டியா, 49 ரன்னில் தசைப்பிடிப்பால் ரிட்டயர் ஹாட் ஆனார். கடைசி கட்ட ஓவர்களில் ஸ்டாய்னிஸ்-நிக்கோலஸ் பூரன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஸ்டாய்னிஸ் பேட்டில் இருந்து சிக்சரும், பவுண்டரியுமாக பறந்ததால், 20 ஓவர் முடிவில் லக்னோ 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 89 ரன்னிலும் (47 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்ஸ்), பூரன் 8 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் ஜேசன்பேரண்டோப் 2, பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 178 ரன்னை இலக்காக கொண்டு மும்பையின் ரோகித்சர்மா-இஷான்கிஷன் ஜோடி களமிறங்கியது.

* அர்ஜூனை கடித்த நாய்
சச்சின் டென்டுல்கர் மகன் வேகம் அர்ஜூன், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். லக்னோவில் நேற்று லக்னோ-மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. அதற்காக நேற்று முன்தினம் லக்னோவில் அர்ஜூன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த நாய் ஒன்று அர்ஜூனை கடித்தது. அதனால் காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

The post ஸ்டாய்னிஸ் அதிரடி ஆட்டம் லக்னோ 177 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Stoinis ,Lucknow ,IPL league ,Mumbai ,Vajpayee Stadium ,
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ