×

ஜோதிடத்தில் கல்வி

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஒரு காலத்தில் கல்வி கற்க, ஒரு குழந்தை விவரம் தெரிகின்ற பருவ நிலை வந்ததும் அதாவது, எட்டு அல்லது ஒன்பது வயதிற்கு மேல்தான் ஆரம்பக் கல்வி என்ற குருகுலக் கல்வி தொடங்கும். அந்தக் கல்வியை கற்க பெற்றோரை விட்டு குருகுலம் சென்று தன் கடமைகளை தானே செய்கின்ற பழக்கத்திற்கு உட்பட்டு தொடங்குகிறது. அப்போது குரு என்ற ஆசிரியருக்கும் மாணவன் சேவை செய்து கல்வியை கற்க வேண்டிய காலம் இருந்தது.

பின்பு தினமும் குருவின் வீட்டிற்கு சென்று வரும் பழக்கம் ஏற்பட்டது. கல்விச்சாலைகள் தொடங்கிய பின்புதான் கல்வி என்பது அனைவருக்கும் என்றானது. உலகத்தில் எத்தனையோ செல்வங்கள் இருந்தாலும் கல்வி என்ற செல்வத்தை கற்றவனைத் தவிர ஒரு நாளும் யாராலும் அபகரிக்கவோ அழிக்கவோ முடியாத சிறந்த செல்வம் ஆகும்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

– திருக்குறள்

உலகில் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் கல்வி என்ற செல்வமே ஒருவனை கடைசி வரை காப்பாற்றும் எனச் சொன்னால் அது மிகையில்லை. கல்விதான் ஒரு மனிதனை சிந்திக்கச் செய்கிறது. வாழ்வின் ஏற்றத்தை உண்டாக்குகிறது. தன்னை பற்றிய விழிப்புணர்வையும் உலகைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு வழிவகை செய்வதும் கல்விதான். உலகை வெல்வதற்கு சிறந்த ஆயுதம் ஒருவன் கற்ற கல்விதான்.

கல்வி, மூன்று நிலைகளில் உள்ளன. ஆரம்பக்கல்வி, உயர்நிலைக்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி எனச் சொல்லலாம். யார்? யார்? என்ன கல்வி கற்கலாம். எந்தக் கல்வி அவர்களை வழிநடத்தும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கல்வி எனும் பாவகம்: ஒரு மனிதனின் தொடக்கக் கல்வி இரண்டாம் பாவகமாகவும் (2ம்) மேல்நிலைக்கல்வி என்ற கல்லூரி பயிலும் கல்வி என்பது நான்காம் பாவகமாகவும் (4ம்) உயர் பட்டப்படிப்பு என்பது ஐந்தாம் பாவகமாகவும் (5ம்) எடுத்துக் கொள்ளலாம். கல்விக்கு துணை பாவகமாக ஐந்தாம் பாவகத்தையும் (5ம்) எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், கல்வியில் எப்படிப்பட்ட நிலையில் ஒரு ஜாதகர் கல்வி கற்கிறார் என்பதையும் புத்தி ஸ்தானத்தையும் ஐந்தாம் பாவகம் குறிப்பிடும். மேலும், ஐந்தாம் பாவகத்திற்கு ஐந்தாம் பாவகமாகிய ஒன்பதாம் பாவகம் (9ம்) கல்வி கிடைப்பதற்குரிய சாதகமான சூழ்நிலைகளைச் சொல்லும் பாவகமாகும். ஒன்பதாம் பாவகம் (9ம்) வலிமையாக இருந்தால் படிப்பதற்குரிய பாக்கியங்கள் ஒரு ஜாதகனுக்கு தடையில்லாமல் கிடைக்கும்.

ஐந்தாம் பாவகம் ஒருவருடைய ஞாபக சக்தியை பற்றியதாகும். ஒருவன் ஒரு விஷயத்தை ஒருமுறையோ அல்லது இருமுறையோ வாசிக்கும் போதும் அல்லது ஆசிரியர் வகுப்பினில் பாடம் நடத்தும் போது கவனித்தாலே சிறப்பாகும். ஐந்தாம் அதிபதி வலுத்த ஜாதகர் ஞாபக சக்தியுடன் படித்ததை சரியான இடத்தில் பரீட்சையிலும் தேவையான இடத்தில் பயன்படுத்துதலும் சிறப்பானதாக கொள்ளலாம்.

பொதுவாக புதன் என்னும் கல்விக் கிரகம் ஒருவருக்கு வலிமையாக இருந்தாலே கல்வி சிறப்பாக வரும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜோதிடத்திற்கும் புதன் வலிமையாக இருந்தால்தான் யாராக இருந்தாலும் ஜோதிடத்தை கற்றுக் கொள்ள வருவர். அந்த புதன் கேந்திரத்திரத்திலோ (1,4,7,10) அல்லது மிதுனம், கன்னி போன்ற ராசிக் கட்டங்களில் இருந்தால் புதன் வலிமை அடைவார் அல்லது நீச்ச பங்கமாக இருந்தாலும் புதன் வலிமை அடைவார்.

ஆரம்பக் கல்வியும், பட்டப்படிப்பு கல்வியும்: தொடக்கக் கல்வியில் ஒருவன் சிறந்து விளங்க ஜோதிடத்தில் இரண்டாம் பாவகம் (2ம்) சுபகிரகங்களின் தொடர்போடு இருந்தால் மட்டுமே சிறப்பானதாக இருக்கும். அசுப கிரகங்கள் தொடர்பு ஏற்பட்டாலும் புதன் வலிமை இல்லாமல் இருந்தாலும் ராகு திசை, சுக்ர திசை போன்ற திசைகள் அவர்களுக்கு நடந்தாலும் ஆரம்பக் கல்வியில் தடைகள் உண்டு. ஆரம்பக் கல்வியே அதற்கு அடுத்து வரும் படிப்புகளுக்கு வேராக இருக்கும். ஆகையால், ஆரம்பக் கல்வி என்பது ரொம்ப முக்கியம்.

பட்டப்படிப்பு கல்வி என்பது ஜோதிடத்தில் நான்காம் பாவகத்தின் தொடர்புடன்தான் தொடரும் நிலை ஏற்படும். நான்காம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் அதனுடன் தொடர்புடைய பட்டப்படிப்பை தொடர்ந்தால் வெற்றிகரமாக தொடரலாம். சிலருக்கு கோச்சார கிரகங்கள் நான்காம் பாவகத்துடன் தொடர்பு ஏற்படும் பட்டப்படிப்பு சிறப்பாகவும் சிலருக்கு பட்டப்படிப்பு தடைகள் ஏற்படவும் நிகழ்வுகள் உண்டாகும். அதற்கு அந்த கிரகத்திற்குரிய படிப்புகளையும் அல்லது அந்த கிரகத்திற்குரிய வழிபாடு முறைகளையும் செய்தால் வெற்றி பெறலாம்.

பாடங்களும் கிரகங்களும்: தமிழ் – சந்திரன், ஆங்கிலம் – கேது, கணிதம் – புதன், அறிவியல் – வியாழன் + சனி, வரலாறு – சனி, புவியியல் – செவ்வாய், இந்தி, உருது போன்றவை – ராகுவிற்கு தொடர்பான கிரகங்களாகும்.

நான்காம் பாவகமும் தொடர்பான படிப்புகளும்

* செவ்வாய் + சனி தொடர்புடன் இருந்தால் கன்ஸ்டக்‌ஷன் (Construction), மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மற்றும் இஞ்சினியரிங் தொடர்பான படிப்புகள் இவருக்கு சிறந்ததாக இருக்கும்.

* குரு + சனி தொடர்புடன் இருந்தால் மாஸ்டர் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA) சிறப்பானதாக இருக்கும். நிர்வாகத்துறையில் சிறந்து விளங்குவர்.

* செவ்வாய் + சூரியன் தொடர்புடன் இருந்தால் டெக்னிக்கல் படிப்புகளிலும், எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக் படிப்புகள் இவர்களுக்கு சிறப்பாக வரும்.

* சந்திரன் + சனி தொடர்புடன் இருந்தால் இவர்கள் மீடியா தொடர்பான படிப்புகள் மற்றும் ஐ.டி செக்டர் தொடர்புடைய படிப்புகளையும், கேட்டரிங் தொடர்பான படிப்புகளை படித்தால் வெற்றி பெறுவர்.

* சனி + புதன் + சூரியன் வலுவாக இருக்கும் ஜாதக அமைப்பு கொண்டவர்கள் சட்ட நிபுணர்களாக வரலாம். இரண்டாம் பாவகம் எனச் சொல்லக்கூடிய வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் வலிமையாக இருக்க வேண்டும்.

* செவ்வாய் + கேது + சூரியன் போன்ற கிரகங்கள் வலிமையாகவும் தொடர்புடன் இருந்தால், சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகள் இவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை தரும்.

* செவ்வாய் + சூரியன் + வியாழன் போன்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால் அலோபதி மருத்துவராக வெற்றி பெறலாம்.

* சூரியன் + சனி தொடர்பு உள்ளவர்கள் பல் தொடர்பான மருத்துவராகவும், எலும்பு முறிவு தொடர்பான மருத்துவராக வெற்றி பெறலாம்.

* சந்திரன் + சுக்கிரன் + சனி போன்ற கிரகங்கள் நான்காம் பாவத்துடன் தொடர்பிலோ இணைவிலோ இருந்தால் டெக்ஸ்டைல் தொடர்பான கல்வி கற்கலாம்.

* சந்திரன் + புதன் + வியாழன் போன்ற கிரகங்கள் தொடர்பில் இருந்தால் பிரின்டிங் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளில் வெற்றி பெறலாம்.

ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள்

ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஐந்தாம் பாவகம் (5ம்) மற்றும் ஒன்பதாம் பாவகம் (9ம்) வலிமையாக இருக்க வேண்டும். இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களால் டாக்டர் பட்டம் ஆகியவை பெற இயலும். இதில் கண்டுபிடிப்புகள் ஏதேனும் நிகழ்த்தி சாதனை செய்வது என்பதெல்லாம் எட்டாம் பாவகம் (8ம்) வலிமையான சுப கிரகங்களின் பார்வையின் தொடர்பில் இருந்தால் மட்டுமே் சாத்தியம்.

The post ஜோதிடத்தில் கல்வி appeared first on Dinakaran.

Tags : Sivakanesan ,
× RELATED சாயா நாடி 2