ஊட்டி : நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்ய கூடிய மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.மலை மாவட்டமான நீலகிரியில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும்,ஏராளமான தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன.
இதனிடையே நடப்பு ஆண்டில் உறைபனிப் பொழிவானது ஜனவரி மாத துவக்கத்தில் துவங்கியது. உறைபனி பொழிவு, பகல் நேரங்களில் கொளுத்திய வெயில் போன்ற காரணங்களால் பசுந்தேயிலை வளர்ச்சி பாதித்தது. இந்நிலையில் மார்ச் மாதத்துடன் பனிப்பொழிவு நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் இறுதி வாரத்தில் இருந்து அவ்வப்போது நல்ல மழை பெய்தது.
இம்மாதத்திலும் விட்டு விட்டு மாவட்டம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்த நிலையில் நல்ல மகசூல் ஈட்டும் நோக்கில் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு பராமரித்தனர்.
இதனால் தற்போது தேயிலை மகசூல் கிடைக்க துவங்கியுள்ளது. ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post நீலகிரியில் பரவலான மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.
