×

இந்த வார விசேஷங்கள்

தத்தாத்ரேயர் ஜெயந்தி 14.5.2023 – ஞாயிறு

தத்த ஜெயந்தி என்று வழங்கப்படும் தத்தாத்ரேயர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. அத்ரி மகரிஷி அனுசுயாவுக்கு மகனாகப் பிறந்தவர். மும்மூர்த்திகளின் ஸ்வரூபமாக ஒரு குழந்தை வேண்டும் என்று அத்ரி முனிவர் தவம் செய்தார். அதற்காக மூன்று மூர்த்திகளும் சேர்ந்து ஒரு திருவிளையாடல் நடத்தி ஒரு மகனாக அவருக்கு அமைந்தனர். சுசீந்திரம் தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்று ஒரு கருத்து உண்டு.

பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர், வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். பரசுராமனால் அழிக்கப்பட்ட கார்த்தவீரியார்ஜுனன் இவரது சீடரே. பெரும்பாலான இடங்களில் இன்று தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டாலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்கழி பௌர்ணமியில் கொண்டாடப் படுகிறது.

அபரா ஏகாதசி
15.5.2023 – திங்கள்

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரனுக்குரிய திங்கட்கிழமை இந்த அபரா ஏகாதசி ஏற்படுகிறது. `அபரா’ என்றால் மிகச்சிறந்த என்றும் அளவில்லாத பலனைக் கொடுப்பது என்றும் பொருள். எல்லாவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், நாம் கேட்கும் அனைத்து விதமான செல்வங்களையும் அளிக்க வல்லது என்று சொல்கின்றன புராணங்கள். இந்த ஏகாதசிக்கு அம்பரீஷன் கதை சொல்லப்படுகிறது. அம்பரீஷன் மிகச்சிறந்த திருமால் பக்தன். ஏகாதசியை தவறாமல் கடைப்பிடிப்பவன்.

எந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் மற்ற விரதங்கள் கடைப்பிடிக்க தேவையில்லாதபடிக்கு அத்தனை பலன்களையும் தருகிறதோ அந்த விரதம் ஏகாதசி விரதம். விரதங்களில் தலைசிறந்தது ஏகாதசி விரதம் என்று சான்றோர்கள் சொல்லுவார்கள். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமில்லாமல், இந்து சமயத்தை கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக மாத்வ சம்பிரதாயத்தினர் நிர்ஜலமாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதை தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளனர்.

இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாத்வ சம்ரதாயமான ஆலயங்களில் ஏகாதசியில் இறைவனுக்கு நிவேதனம் கிடையாது. தேங்காய் உடைப்பது கிடையாது.
அத்தனை வைராக்கியத்தோடு ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இப்படிப்பட்ட ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தான் அம்பரீஷன். தன்னுடைய நாட்டு மக்களையும் கடைபிடிக்க வைத்தான். அதனால், அந்த நாட்டில் செல்வமும் சிறப்பும் நாளுக்கு நாள் வளர்ந்தது.

ஒரு ஏகாதசி விரதத்தின் போது துர்வாச முனிவர் இவருடைய அரண்மனைக்கு வந்தார். முனிவரை வரவேற்றவர், தன்னோடு துவாதசி பாரணையைச் செய்ய வேண்டும் என்று முனிவரிடம் சொன்னார். முனிவரும், ‘‘நான் நீராடி விட்டு வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு தன்னுடைய சீடர்கள் குழுவோடு நீராடச் சென்றுவிட்டார். ஏகாதசி விரதத்தின் முக்கியமான விஷயம் துவாதசி பாரணைதான் (காலையில் சீக்கிரமாக எழுந்து ஆண்டவனுக்கு நிவேதித்து அந்த உணவை உண்ண வேண்டும்).

துவாதசி பாரணை குறிப்பிட்ட நேரத்தில் கடைப் பிடிக்காவிட்டால் ஏகாதசி விரதத்தில் பலன் கிடைக்காது. நேரம் கடந்துகொண்டிருந்தது. அம்ப ரீசன் தவித்தான். முனிவர் வர வேண்டுமே என்று துடித்தான். ஆனால், நீராடச் சென்ற முனிவர் வரவில்லை. அப்பொழுது அவர் துவாதசி பாரணை காலத்துக்குள் துளசி தீர்த்தத்தை மட்டும் பருகினால் தோஷம் இல்லை என்று நினைத்து பூஜையில் இருந்த துளசி தீர்த்தத்தை உத்தரணியில் எடுத்து பருகியவுடன் துர்வாசர் வந்துவிட்டார்.

‘‘என்னை விட்டுவிட்டு எப்படி நீ துவாதசி விரதத்தைத் செய்தாய்?’’ என்று சொல்லி கடும் கோபம் கொண்டார். அம்பரீசன் பணிவோடு சொன்ன சமாதானங்களை அவர் ஏற்கவில்லை. தன்னுடைய ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டு அதை கடுமையான ஒரு பூதமாக உருவாக்கி அம்பரீஷனை அழிப்பதற்காக அனுப்பினார். அம்பரீஷன் திருமாலிடம் சரணடைய, அவர் கரத்திலிருந்த சக்ராயுதம் புறப்பட்டு வந்து துர்வாசர் அனுப்பிய பூதத்தை அழித்தது.

துர்வாச முனிவரையும் துரத்தியது. முனிவர் அடைக்கலம் தேடி இந்திர லோகத்திற்குச் சென்றார். பிரம்ம லோகத்துக்குச் சென்றார். எங்கு சென்றும் அவருக்கு அடைக்கலம் கிடைக்கவில்லை. சக்கரத்தின் வேகத்தைப் பார்த்து அனை வரும் பயந்தனர். சக்கரபாணியான திருமாலிடமே செல்லலாம் என்று முடிவெடுத்து அங்கு சென்றவுடன் திருமால், ‘‘நீ பரந்தாமனை அவமதித்தால் என்னிடம் சரண் செய்து அடைக்கலம் கொள்ளலாம். ஆனால், நீ அவமதித்தது பரந்தாமன் பக்தனான அம்பரீஷனை.

அதற்கு பிராயச்சித்தம் செய்ய முடியாது. என்னுடைய சக்கரம் பாகவதனை காக்கும் பொருட்டு வந்ததால், அதனை நான் கட்டுப்படுத்த முடியாது. நீ அம்பரீஷனிடமே அடைக்கலம் தேடு’’ என்று சொன்னவுடன், அம்பரீசன் அரண்மனைக்கு வந்து துர்வாச முனிவர் அடைக்கலம் கேட்டார். அம்பரீசன் சக்கரத்தாயுதத்தை வேண்ட, சக்கரம் பழையபடி திருமாலின் திருக்கையை அடைந்தது. இன்றைய தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் சேரும். குறிப்பாக உலகளந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாளை வழிபட பூரணமான பலன் கிடைக்கும்.

பிரதோஷம்
17.5.2023 – புதன்

‘‘எல்லா தோஷங்களும் நீங்க பிரதோஷம் இரு’’ என்பார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது அல்லவா… இன்று புதன் பிரதோஷம். கல்வி கேள்விகளில் விருத்தி பெறவும், உத்தியோகத்தில் உயர்வு பெறவும் பிரதோஷ விரதம் இருப்பது நன்று. அன்றைய நாளில் சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும்கூட விசேஷ பூஜைகள் செய்யப்படும். நம்முடைய பாவம் நீக்கி யருளும் பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று வழிபட வேண்டும்.

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்திபகவானையும் அபிஷேகம் செய்து வில்வஇலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

கழற்சிங்க நாயனார் குருபூஜை
18.5.2023 – வியாழன்

“கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” – என்பது திருத்தொண்டத்தொகை. கழற்சிங்க நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் பல்லவர் குலத்திலே தோன்றியவர். குறுநில மன்னர். சிவனடி அன்றி வேறொன்றை அறியாதவர்; வடபுலவேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்டவர். வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார்.

அப்பொழுது திருக்கோயிலை வலம் வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி, அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலரொன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்கு வந்த செருத்துணையார் என்னும் சிவனடியார், இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறை வரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு `அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?’ எனக் கேட்டார்.

அருகே நின்ற செருத்துணையார், ‘இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையால் நானே இதைச் செய்தேன்’ என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, ‘‘நீங்கள் செய்தது சரிதான்’’ என்றார். சிவ பூஜைக்கு குந்தகம் எனில் மனைவியே ஆயினும் தண்டனைக்கு உரியவள் என்ற நிலையை உடைய இவர், பல்வேறு சிவத்தொண்டுகளைச் செய்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு, சிவபெருமான் திருவடி நீழலில்பெருவாழ்வு பெற்றார். அவருடைய குரு பூஜை வைகாசி பரணி. (இன்று)

அமாவாசை
19.5.2023 – வெள்ளி

மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையில் சூரிய பகவானின் கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த அமாவாசை வருவது சிறப்பு. சூரியனோடு சந்திரன் சேரும் நாள்தான் அமாவாசை என்பார்கள். சூரியனுடைய நட்சத்திரமான கார்த்திகையில் சந்திரன் சேர்ந்து இருப்பதால் சூரியனோடு சந்திரனை சேரும் முழுமையான பலன் கிடைக்கும். ஒரே நட்சத்திரத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கக்கூடிய வாய்ப்பு இது. இச்சேர்க்கை ரிஷபராசியில் நடைபெறுவதால் ரிஷப ராசிக்குரிய சுக்கிர பகவானின் அருளும் பூரணமாக கிடைக்கும்.

பொதுவாக எல்லாக் கடன்கள் தீர்ந்தாலும் நீத்தார் கடன் தீராது. ஆகையினால் இன்றைய தினத்திலே நீங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக எள்ளும் நீரும் அளிக்க வேண்டும். அதற்கு பிறகு, மதியம் அன்னதானம் போன்றவற்றைச் செய்யலாம். தலைவாழை இலை வைத்து நம்முடைய முன்னோர்களுக்குப் படையல் போட வேண்டும். உச்சி காலத்தில் அவர்களுக்கு பூஜை செய்து, பிறகு காக்கைக்கு ஒரு பிடி அன்னம் வைத்து விட்டு, அதற்குப் பிறகு உண்ண வேண்டும்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Dathathreyar Jayanthi ,Tathatha Jayanthi ,Atri Maharishi ,
× RELATED குழந்தை வரம் தரும் தத்தாத்ரேயர்; பித்ரு தோஷங்கள் நீங்கும்..!!