×

பெண் எழுத்தாளர் தொடர்ந்த பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி வழங்க உத்தரவு

வாஷிங்டன்: பெண் எழுத்தாளரை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று அந்த நாட்டின் ஃபெடரல் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல இதழ் ஒன்றின் பெண் எழுத்தாளரான ஜீன் கரோல் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தவர் ஆவார். இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வாத பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒரு மனதாக தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி டிரம்ப் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் அதே நேரம் பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எழுத்தாளர் கரோலுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் ரூ.41 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஒரு நேர்மையற்ற தீர்ப்பு என்று சமூக வலைத்தளம் வாயிலாக டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு ரூபாய் கூட தரப்போவது இல்லை என்று கூறியுள்ள டிரம்ப் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு முரண்பாடான தீர்ப்பு என்று டிரம்பின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது 79 வயதாகும் பெண் எழுத்தாளர் ஜீன் கரோலி கடந்த 1995 அல்லது 1996-ம் ஆண்டு மேன்ஹாட்டனில் உள்ள பல்பொருள் அங்காடியில் வைத்து டிரம்ப் பலாத்காரம் செய்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த புகாரை தாம் எழுதிய புத்தகம் ஒன்றில் கடந்த 2019-ம் ஆண்டு ஜீன் கரோலி கூறியிருந்தார். கடந்த ஏப்ரல் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூல, அளித்த ஜீன் கரோல் தம்மை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு பின்னர் தன்னுடைய கணவருடன் சிரித்துக்கூட பேச இயலாத அளவுக்கு மனதளவில் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். தற்போது வரை குடும்ப வாழ்வில் ஈடுபட முடியாத அளவுக்கு மன நெருக்கடிக்கும் ஆளாகியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்த ஜீன் கரோலை தனக்கு யார் என்றே தெரியாது என்று கூறிய டிரம்ப் அவர் ஒரு பொய்யர் என்றே சாடியிருந்தார். என்றாலும் கரோலுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் அடுத்தாண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்புக்கு சட்ட சிக்கலை உருவாக்கலாம் என்று தெரிகிறது. இது உரிமையியல் வழக்கு என்பதால் டிரம்புக்கு சிறை தண்டனை ஏதும் விதிக்கப்படாது. ஏற்கனவே ஆபாச நடிகையுடன் உறவில் இருந்ததோடு அரசு பணத்தை அவருக்கு கொடுத்ததாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாகி ஜாமீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post பெண் எழுத்தாளர் தொடர்ந்த பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரூ.41 கோடி வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Former ,President Donald Trump ,Washington ,US ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...