×

தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம்

 

காரமடை, மே 10: காரமடையை அடுத்துள்ள தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், 40-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக இந்திரா காந்தி தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் கடந்த 1991ம் ஆண்டு கட்டப்பட்டன. வீடுகள் கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் தற்போது இங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுகின்றன. தற்போது, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால், மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் குடும்பத்துடன் வசிக்கும் மக்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். மேலும், சிலர் வீடுகள் எப்போது இடிந்து விடுமோ என்று அச்சத்தில் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு தோலம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். காலியாக இருக்கும் இந்த வீடுகளில் உபயோகப்படுத்தப்படாத பொருட்களை போட்டு வைக்கும் அறையாக மட்டுமே பயன்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தோலம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தாங்கள் அச்சத்துடனேயே வீடுகளில் வசிக்கும் நிலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சாந்தாமணி (50) கூறுகையில்,“30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் குடியிருந்து வரும் நிலையில் ஒரே வீட்டில் தாய், தந்தை, திருமணமான மகன், திருமணம் ஆகாத மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என பலர் வசித்து வருகிறோம். தற்போது, இந்த வீடுகள் கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலானதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து அவ்வப்போது கீழே விழுகின்றன.

கட்டிடத்திலும் பல இடங்களில் விரிசல் விட்டுள்ளது. இதனால், குழந்தைகளுடன் வசிக்கும் தாங்கள் உயிர் பயத்தில் வசித்து வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தமிழக அரசு தலையிட்டு தங்களது குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும் என்றார். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் (30) கூறுகையில்,“குழந்தைகளுடன் இந்த குடியிருப்பில் வசித்து வருகிறோம். கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். அசம்பாவிதம் ஏற்படும் முன் எங்களது வீடுகளை சீரமைத்து தர வேண்டும்’’ என்றார்.

The post தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Karamadai ,Rajiv Gandhi Nagar ,Tholampalayam Panchayat ,
× RELATED சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து...