×

அணைக்கட்டு தடுப்பணையில் நுரை பொங்கி வரும் அமில கழிவு வெள்ளம்; 96 ஏரிகளில் நீர் மாசடையும் அபாயம்: ஆந்திர மாநில தொழிற்சாலைகளில் இருந்து பொன்னையாற்றில் கழிவுநீர் கலப்பதால்

பொன்னை, மே 9: ஆந்திர மாநில தொழிற்சாலைகளில் இருந்து பொன்னையாற்றில் கழிவுநீர் கலப்பதால் அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து அமில கழிவு வெள்ளம் நுரை நுரையாய் பொங்கி வருகிறது. இதனால் 96 ஏரிகளில் நீர் மாசடையும் அபாயம் உள்ளது. மேலும் பொன்னையாற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆங்காங்கே பெரும்பாலான ஏரி, குளம், குட்டை மற்றும் தடுப்பணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் முதல் வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லை பகுதி மற்றும் பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆந்திர மாநில எல்லையில் பேட்டரி கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலை மற்றும் தமிழகத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றினால் பொன்னை ஆற்றில் நுரை நுரையாய் கழிவுநீர் பொங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நுரை நுரையாய் வரும் வெள்ளம் அமிலம் கழிவுகள் போல் உள்ளது என்று அப்பகுதியினர் கூறுகின்றனர். மேலும் இந்த வெள்ளம் அதிக துர்நாற்றத்தை வீசுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிப்படைவதாகவும், மேலும் தாவரங்கள் செடி கொடிகள் மற்றும் தடுப்பணையில் உள்ள மீன்கள் உள்ளிட்டவை பாதிப்படைவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 96 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அமில நுரை பொங்கி வெள்ளம்போல் வருவதால் அனைத்து ஏரிக்களிலும் கலந்து நீர் மாசடையும் அபாயம் உள்ளது. இதுதவிர பொன்னையாற்றில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் நுரை பொங்கி வருவதால் தற்போது குடிநீர் சப்ளை செய்வதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பேட்டரி அமிலக் கழிவுகள் கலக்கும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் நிலத்தடி நீரை பாதுகாக்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பொன்னை ஆற்றில் கலக்கும் அமிலக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், அணைக்கட்டு தடுப்பணையில் பொங்கி வரும் அமிலக்கழிவுகளை அகற்றி குடிநீர் ஆதாராத்தை பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அணைக்கட்டு தடுப்பணையில் நுரை பொங்கி வரும் அமில கழிவு வெள்ளம்; 96 ஏரிகளில் நீர் மாசடையும் அபாயம்: ஆந்திர மாநில தொழிற்சாலைகளில் இருந்து பொன்னையாற்றில் கழிவுநீர் கலப்பதால் appeared first on Dinakaran.

Tags : Ponnayadadu ,AP ,Ponna ,Andhra ,Ponnayadad ,Golden Nayadu ,Dinakaran ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?