×

மோட்சம் என்ற முக்தி யோகம்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

மோட்சம் என்பதற்கு விடுதலை என்று பொருள். ஜீவன் என்ற ஆத்மா பிறப்பும் இறப்பும் அற்ற ஒரு நிலையே மோட்சம் என்ற முக்தி ஆகும். சமணம் மற்றும் பௌத்தத்தில் இதனை நிர்வாணம் என்கின்றனர். இந்த நிலையை அடைவதற்கு இயற்கைதான் நமக்கு வழிகாட்டும். இதனை இறைநிலையாக கருதுகின்றனர். நம் கலாச்சாரத்தில் அத்வைதம், துவைதம் என்ற இரு நம்பிக்கைகள் உள்ளன. அத்வைதம் என்பது இறைநிலை நோக்கி நாம் செல்வதையும் நாமே அந்த நிலையாக மாறுவதையும் விரிவாக்குகிறது. துவைதம் என்பது இறைநிலை என்பது வேறு, நாம் என்பது வேறு என்று இரண்டாகப் பிரித்து நாம் இறைவனை சரணடைவது என்று சொல்கிறது. ஜீவாத்மா என்ற ஜீவன் பரமாத்மாவுடன் இணைவது முக்தி ஆகும். இதில் எந்த வழிமுறையாக இருந்தாலும் இயற்கை நம்மை அந்த நிலைக்கு அழைத்துச் செல்வதை அப்படியே என்று கொள்வதாகும்.

ஜோதிடத்தில் மோட்சத்திற்கான அடையாளங்கள்

* மோட்சம் என்பது ‘நான்’ என்ற இல்லாத நிலையாகும். ‘நான்’ என்பதையே, ரமண மகிரிஷி அகந்தை என்கிறார். ஜோதிடத்தில் நான் என்பது லக்ன பாவத்தையும் அதற்கு மாறான ‘நான்’ அற்ற நிலை பன்னிரெண்டாம் பாவத்தையும் குறிப்பிடுகின்றது. ‘நான்’ என்பதை ஒருவன் இழக்கும்போது அவன் இயற்கையாக மாறுகிறான். அப்ேபாது இயற்கை அவனுக்கு கட்டுப்படும் அமைப்பாக இருக்கிறது. இது லௌகிக வாழ்வில் உள்ளவர்களுக்கு ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் உள்ளது. ஆனால், இறைநிலை நோக்கி பயணிப்பவனுக்கு இது அதிசயம் இல்லை என்பதை உணர்ந்திருப்பான்.

* இந்த பன்னிரெண்டாம் பாவகமே (12-ஆம்) முக்தி (எ) மோட்சத்தை தருவதால், இந்த அமைப்பு உடையவர்கள் கண்டிப்பாக `பரதேசவாசம்’ உடையவர்கள். இந்த பரதேசவாசம் உள்நாடாகவும் இருக்கலாம் வெளிநாடாகவும் இருக்கலாம். ஓரிடத்தில் இல்லாமல் அலைந்து கொண்டும் திரிந்தும் கொண்டும் இருப்பர். எப்பொழுது எங்கே செல்வார்கள்? திரும்பி வருவார்களா? என்றே புரியாத புதிராக இருப்பர். நமக்கு ஒரு வழக்கு மொழி உண்டு ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்பதாகும்.

* முக்தியோகம் அமைப்புடையவர்களுக்கு லக்னாதிபதி வலுப்பெற்று ஆறாம் (6-ஆம்) பாவகம், எட்டாம் (8-ஆம்) பாவகம், பன்னிரெண்டாம் (12-ஆம்) பாவகம் ஆகியவற்றில் மறைந்திருந்தால், எங்கோ தொலைதூரம் சென்று மறைந்து வாழும் அமைப்பை உடையவர்கள். அதிகம் பேசாமல் இருப்பர். இதன் பொருள் இரண்டாம் பாவகம் (2-ஆம்) என்னும் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழும் வாழ்க்கை கொண்டவர்கள்.

* முக்தி பெறும் யோகம் கொண்டவர்கள் சந்நியாசிகளாகவும், சிலர் லௌகீகம் என்ற குடும்பத்தில் இருந்துகொண்டே முக்தி நிலைக்கு பயணிப்பர். சந்நியாசிகளாக இருப்பவர்களுக்கு சந்திரன் என்ற மனோகாரகனும் சனி என்ற கர்மகாரகனும் இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருப்பவர்களுக்கு சந்நியாச யோகம் (சந்திரன் + சனி இணைவு) உண்டாகிறது. இவர்கள் எதையும் விரும்பவோ அல்லது வெறுக்கவோ மாட்டார்கள்.

* ஜோதிடத்தில் இறைநிலை ஸ்தானம் அல்லது தெய்வீக ஸ்தானம் எனச் சொல்லக்கூடிய ஒன்றாம் பாவகம் (1-ஆம்), ஐந்தாம் பாவகம் (5-ஆம்), ஒன்பதாம் பாவகம் (9-ஆம்) மற்றும் பன்னிரெண்டாம் (12-ஆம்) பாவகத்தில் சுபகிரகங்கள் வலிமை உடையதாகவும் ஆட்சி, உச்சம் பெற்றதாகவும் அந்த பாவகங்களை சுபகிரகங்கள் பார்வை செய்வதாகவும் இருக்க வேண்டும். இறைநிலை எனச் சொல்லக்கூடிய இறையை நோக்கி இவர்கள் இயற்கையாகவே பயணிப்பவர்களாக இருப்பர்.

* மோட்சம் முக்தி என்பது இறுதியான நிலையாக இருந்தாலும், சமாதி என்ற நிலைக்கு இவர்கள் பயணிப்பர். இந்த சமாதி நிலையே மனத்தை இழக்கும் நிலையாகும். இந்த சமாதி நிலைக்கு பயணிப்பவர்கள், மனதை இழக்கும் கலையை கற்றவர்களாக இருப்பர். ஆகவே, மனம் என்று சொல்லக்கூடிய சந்திரன் நீசமாகவோ, ராகு – கேது என்னும் சாயா கிரகங்களுடன் இணைந்தோ அல்லது அசுப கிரகங்களின் பார்வையில் இருக்கும். ஆதலால், இவர்கள் உடலை பேணி பராமரிக்கமாட்டார்கள். கிடைத்த உணவை உண்ணும் மனநிலையில்தான் இருப்பர். சந்திரன் ஆறாம் (6-ஆம்), எட்டாம் (8-ஆம்) பாவகத்துடன் சனியுடன் தொடர்பு ஏற்படுத்தியிருக்கும். யாசகம் வாங்கி உண்பர்.

* இவர்களுக்கு ஆத்ம காரனாகிய சூரியன் வலுவான நிலையில் இருக்கும். சூரியன் ஆட்சி பெற்றோ உச்சம் பெற்றோ அல்லது பெளர்ணமியில் பிறந்தவர்களாக இருப்பர். ஆதலால் ஆத்மகாரகன் வலிமை என்பதால் ஆத்மாவை தரிசிக்கக் கூடியவர்கள். சூரியன் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்திலோ வியாழனின் சுப பார்வையிலோ அல்லது வியாழனுடன் இணைந்துதான் சூரியன் இருக்கும்.

* முக்தியோகம் அமைப்புடையவர்களுக்கு ஒன்பதாம் பாவம் (9-ஆம்) வலிமையாக இருப்பதால், இவர்களை நாடி குரு என்பவர் வழிகாட்ட வருவார் அல்லது இவர்கள் குருவைத் தேடி செல்லும் அமைப்பே இருக்கும்.

* ஐந்தாம் பாவம் (5-ஆம்) என்ற பூர்வ புண்ணியம் வலிமையாக இருக்கும் பட்சத்தில் சென்ற பிறவியில் தொடரப்பட்ட முக்தி முடியாத நிலையில், இப்பிறவியில் சிறுவயதிலேயே சிலருக்கு முக்தி யோகம் அமையும். சிலருக்கு பூர்வபுண்ணியத்தின் பயனாக இப்பிறவியின் இறுதியில் முக்தி பெறுவர். ஐந்தாம் பாவம் (5-ஆம்) என்று சொல்வதால் பிள்ளைப்பேறு சிலருக்கு உண்டு. சிலருக்கு அவர்களின் சீடர்களே பிள்ளைகளாக இருப்பர். அனுபவப்படாமல் இறுதியாக வரும் முக்தி யோகத்தினை பற்றிய ஆய்வுகள்யாவும் பல சித்த புருஷர்கள் மற்றும் குருமார்கள் மற்றும் முக்தி பெற்றவர்களின் ஜாதகமே இந்த ஆய்வுகளாக இருக்கிறது. இதை கடந்து இன்னும் சில வழிகளும் உண்டு. எந்த யோகம் கிடைத்தாலும் யாராலும் கிடைக்கப் பெறாத மிகப்பெரிய யோகம் `மோட்சம்’ என்ற முக்தி யோகம்தான்.

The post மோட்சம் என்ற முக்தி யோகம் appeared first on Dinakaran.

Tags : Modham ,Sivakanesan Motham ,Moksham ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்