×

இந்த வார விசேஷங்கள்

சுவாமிமலை தேர்
6.5.2023 – சனி

முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதலிய திருக்கோயில் திட்டத்துடன் தொடங்கியது. மகா துவாஜரோகனம் கொடியேற்றம் செய்துகொண்டு விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஸ்ரீசண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு படி சட்டத்தில் சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் பல்லக்கில் சுவாமி திருவீதிஉலா மற்றும் இடும்பன் வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கடா வாகனம், தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்தில் வீதி உலா நடைபெறும். சப்பரத்தில் பஞ்சமூர்த்தி திருவிழா காட்சியும், தொடர்ந்து யானை வாகனம், காமதேனு வாகனம் வெண்ணெய்த்தாழி பல்லக்கில் சுவாமி வீதி உலா காட்சி, மற்றும் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வாக, இன்று காலை 9-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை மதியம் தீர்த்தவாரியும் நடைபெறும்.

கள்ளழகர் விழா
6.5.2023 – சனி

மதுரையில் நடக்கும் புகழ்பெற்ற ஆன்மிக விழாக்களில் முக்கியமானது மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவாகும். இதோடு இணைந்த விழாவாக மதுரை மாவட்டம் அழகர்கோயிலிலும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அழகர்கோவிலில் சித்திரைத் திருவிழா மே 01-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்றுவருகிறது. மே 6-ஆம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார்.

மே 6-ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் மதுரைக்கு வந்த நோக்கம் நிறை வேறியதும் அன்றைய தினம் நள்ளிரவு இராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 7-ஆம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லக்கில் புறப்படுவார். இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் தங்கும் கள்ளழகர் மே 8-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கிப் புறப்படுகிறார்.

சங்கடஹர சதுர்த்தி
8.5.2023 – திங்கள்

சங்கடங்களைக் களைபவர் விநாயகர். அவருக்கு மிகவும் பிடித்த விரதம் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம். இந்த விரதம் விநாயகருக்கு என்றே உருவான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை எல்லா தோஷமும் நிவர்த்தியாகும். என்றே சொல்லப்படுகிறது. பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹரசதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. இன்று திங்கள் கேட்டை நட்சத்திரத்தில் வருவது சிறப்பு.

பழனி கிரிவலம்
8.5.2023 – திங்கள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

இம்மலையைச் சுற்றி சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இப்பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும். மலைப்பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. அக்னி நட்ஷத்திரத்தை ஒட்டி இன்று கிரிவலம் செய்வது சிறப்பு.

அங்காரக சதுர்த்தி
9.5.2023 – செவ்வாய்

இன்று மூல நட்சத்திரம். செவ்வாய்க் கிழமையில் சதுர்த்தி சேர்ந்தால் அங்காரக சதுர்த்தி என்பார்கள். பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க, அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க அதற்கு அங்காரகன் எனப் பெயர் சூட்டினர். முனிவர் விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். அவரும் விநாயகரை குறித்து தவம் இருந்தார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக் கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். அங்காரக விரதம் இருந்து விநாயகரை வணங்கினால் கடன், நோய், எதிரி தொல்லை நீங்கும். கோடீஸ்வர வாழ்வு தேடி வரும். வீடு மனை யோகம் தரும் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும்.

தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே)
பிறந்த நாள் 11.5.2023 வியாழன்

ஜே.கே. என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை. எந்த தத்துவ மரபின் எந்தப் பிரிவுக்குள்ளும் இவரை வகைப்படுத்த முடியாது. உண்மையைத் தேடும் யாத்திரையை ஒவ்வொருவருக்குள்ளும் சாத்தியப்படுத்தும் வழிமுறை அவருடையது. ஜே. கிருஷ்ணமூர்த்தி 1895-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனபள்ளி என்னும் சிற்றூரில் பிறந்தார். அவரையும் அவரது சகோதரரையும் தியாசஃபிகல் சொசைட்டியின் தலைவராக இருந்த டாக்டர் அன்னிபெசன்ட் தத்தெடுத்து வளர்த்தார்.

துவக்கத்தில் ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட் என்ற அமைப்பை நிறுவி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியை அதன் தலைவராக நியமித்தார்கள். 1929-ல் அந்தப் பதவியைத் துறந்தார். பெரிய அளவில் ஆதர வாளர்களையும் ஏகப்பட்ட சொத்துகளையும் கொண்டிருந்த அந்த அமைப்பையும் கலைத்தார்.
அதன் பிறகு, 1986 பிப்ரவரி 17-ல் மரணம் அடைவது வரையிலும் சுமார் 60 ஆண்டுகள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். மனித இனத்தில் தீவிரமான மாற்றங்கள் நிகழ வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிவந்தார்.

அவரைப் புரிந்துகொண்டால்தான் அவர் தத்துவங்களைப் புரிந்துகொள்ளமுடியும். உதாரணத்திற்கு ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. ‘‘நீங்கள் ஏன் கூச்சப்படுகிறீர்கள்?’’ அதற்கு ஜே கிருஷ்ணமூர்த்தி சொன்ன பதில், அடையாளம் கொண்டிராத, பெயர் பெற்றிடாத, அனாமாதேயமாக ஒருவர் இருப்பது என்பது அசாதாரணமான விஷயம். பிரசித்தி பெற்றவராகவோ, மாவீரனாகவோ, மிகவும் படித்தவராகவோ, புரட்சியாளராகவோ, தன்னை கருதிக்கொள்ளாமல், சாமானியப்பட்ட ஒருவனாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவரை, திடீரென்று அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்துகொள்ளும் போது அவர் கூச்ச உணர்வுடன் ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறார். அதுதான் நான் கூச்சப்படுவதற்கு காரணம் என்றார். அவர் ஒதுங்க, அவருடைய சிந்தனைகள் பலரையும் அவர் பால் ஈர்த்தது. அவருடைய பிறந்தநாள் இன்று.

திருவோண விரதம்
11.5.2023 வியாழன்

இன்று குருவாரம். திருவோண நட்சத் திரம். சந்திரன் தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் இருக்க, குருவினுடைய வியாழக்கிழமையில் இந்த விரதம் வருவது சிறப்பு. இன்று ஒப்பிலியப்பன், திருப்பதி கோயில்களில் சிரவண வழிபாடு விசேஷமாக இருக்கும். திருவோண விரதம் இருப்பதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய பெருமாள் தோத்திரங்களை ஓதி, மாலையில் பக்கத்தில் இருக்கக்கூடிய பெருமாள் கோயிலுக்கு நெய்தீபம் போட்டு, துளசி மாலை சாற்றி, வலம் வருவதன் மூலமாக சந்திரனுடைய சகல தோஷங்களையும் போக்கிக்கொள்ளலாம்.

வணிகம், உத்தியோகம், தொழில் முதலிய அனைத்தும் மிகவும் சிறப்பாக நடக்கும். மாணவர்கள் கலைகளிலும் கல்வியிலும் கெட்டிக்காரர்களாகத் திகழ்வார்கள். சகல மங்கலங்களும் கொடுக்கும் இந்த விரதம். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சித்திரைவிழா திருத்தேர்பெரம்பலூர் அருகே உள்ளது சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில். இங்கே சித்திரைத் தேரோட்டம் மிகவும் விசேஷமாக நடைபெறும். இந்த தேரோட்டத்தை ஒட்டி பூச்சொரிதல் விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெறும். சிறுவாச்சூருக்கு பக்கத்தில் உள்ள பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும் மதுர காளியம்மனுக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்து, நாள்தோறும் யானை, குதிரை, உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலாக் காட்சிகள் நடக்கும்.

அவ்விழாவின் தொடர்ச்சியாக இன்றைய தினம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறு வாச்சூர் கிராமத்தின் எல்லா வீதிகள் வழியாக தேரோட்டமும் நடக்கும். மாலையில் தேர் நிலைக்கு வந்தடையும். இந்த உற்சவத்தின் தொடர்ச்சியாக மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஊஞ்சல் நிகழ்ச்சியும் நடந்து, நிறைவாக சுவாமி மலையேறும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.

தேய்பிறை அஷ்டமி
12.5.2023 வெள்ளி

துன்பங்கள், துயரங்கள் தீர பைரவரை வழிபடுபவர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று ராகு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். தேய்பிறை அன்று அஷ்டமி வருவதைதான் பைரவாஷ்டமி என்கிறோம். தேய்பிறை அஷ்டமி அன்று உச்சியில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கு ஏற்றி, சிவப்பு பூக்களால் அர்ச்சனை செய்து பைரவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும். மன அழுத்தம் தரும் கடன் தொல்லை நீங்கிவிடும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை மனதார நினைந்து வழிபட்டாலே தீராத நோய்களும் குணமாகும். பட்ட துன்பங்கள் யாவும் விலகி ஓடும். இன்று கால பைரவர் வழிபாடும் துர்க்கை வழிபாடும் செய்வது சிறப்பு. வழிபாடு நேரம் 12.5.2023 வெள்ளி காலை 10.51 முதல் 13.5.2023 சனிக்கிழமை காலை 8.22 வரை.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Swamimalai ,Sani Murugan ,Arapad ,Houses ,Swaminathaswamy Temple ,
× RELATED சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில்...