×

புதுவையில் இருந்து பெங்களூரூ சென்ற சொகுசு பஸ்சில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

புதுச்சேரி, மே 5: புதுவையில் இருந்து பெங்களூரூ சென்ற சொகுசு பஸ்சில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரூவை பூர்வீகமாக கொண்ட 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா குணமங்கலம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் சொகுசு பேருந்தில் பயணித்துள்ளார். படுக்கை வசதி கொண்ட பயணத்தை இளம்பெண் மேற்கொண்டிருந்த நிலையில், அதே பஸ்சில் வேறு பயணிகளும் பெங்களூரூ சென்றுள்ளனர்.

நள்ளிரவை கடந்து பஸ் பெங்களூரூ நோக்கி சென்று கொண்டிருந்தபோது அப்பெண்ணின் படுக்கைக்கு அருகில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் படுத்திருந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டாராம். மேலும் வலுக்கட்டாயமாக பலாத்கார முயற்சிகளில் ஈடுபடவே, இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த சக பயணிகள் அந்த வாலிபரை பிடித்து பேருந்து ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை கடுமையாக எச்சரித்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், தனியாக படுத்திருந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட்ட வாலிபரை நடுவழியில் கீழே இறக்கிவிட்டு பெங்களூரூ சென்று விட்டனர். இதனிடையே சொந்த வீட்டிற்கு திரும்பிய இளம்பெண் தனது பெற்றோரிடம் சம்பவம் பற்றி முறையிட்டுள்ளார். பின்னர் ஆன்லைன் மூலமாக புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு புகார் மனுவை அனுப்பினார்.

இதனிடையே, ஓடும் பஸ்சில் பாலியல் ரீதியான தொல்லைகளால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் நேரில் வரவழைத்த இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார், எழுத்துப்பூர்வ புகாரை பெற்றனர். பின்னர் அடையாளம் தெரியாத வாலிபர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய போலீசார், குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதற்காக பஸ் நிலையம் அருகே தனியார் சொகுசு பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post புதுவையில் இருந்து பெங்களூரூ சென்ற சொகுசு பஸ்சில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Puduwai ,Puducherry ,Puduvai ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...