×

3வது போட்டியிலும் நியூசி. தோல்வி ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

கராச்சி: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வென்று தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. கராச்சியில் நேற்று முன்தினம் பகலிரவாக நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. கடந்த 2 போட்டிகளில் சதமடித்த பகர் ஜமான் 19 ரன்களில் மேட் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், இமாம் உல் ஹக் ஜோடி சிறப்பாக விளையாடியது. பாபர் அசாம் 54, இமாம் உல் ஹக் 90 ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய அகா சல்மான் (31), சதாப் கான் (21) அதிரடி காட்ட, பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. நியூசி. தரப்பில் மேட் ஹென்றி 3, மில்னே 2 விக்கெட் வீழ்த்தினர். 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்கம் சிறப்பாக அமைந்தது.

முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த நிலையில், வில் யங் 33 ரன்னில் ரன்-அவுட் ஆனார். விக்கெட்கீப்பர் டாம் பிளண்டல் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் டாம் லாதம் 45 ரன்னில் அவுட் ஆனார். பின்வரிசையில் கோல் மெக்கோன்சி 45 பந்துகளில் 64 ரன் குவித்தார். ஆனாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் மட்டுமே எடுத்து, 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாக். தரப்பில் ஷாகீன் அப்ரிதி, நசீம் ஷா, முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஏற்கனவே 2 போட்டிகளை வென்றதன் மூலம், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரில் இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன.

The post 3வது போட்டியிலும் நியூசி. தோல்வி ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Newsy ,Pakistan ,Karachi ,New Zealand ,Dinakaran ,
× RELATED ரூதர்போர்டு, அல்ஜாரி அதிரடியால்...