×

வளம் பல அருள்வாள் வள்ளியூர் நாயகி

வள்ளியூர் – திருநெல்வேலி

புராணங்கள் பொய்யில்லை, கட்டுக் கதையில்லை என்பதை இந்தக் கலிகாலத்திலும் பல சாட்சியங்கள் நிரூபிக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை, எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டு இன்றளவும் அருள் பரப்பிக் கொண்டிருக்கும் கோயில்கள். அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அமிர்தவல்லி – சுந்தரவல்லி சமேத சுப்ரமண்யர் கோயில். இது ஒரு குடைவரைக்கோயில். இங்குதான் முருகப்பெருமான் வள்ளி பிராட்டியைக் கடிமணம் புரிந்துகொண்டார். பேரழகி என்பதால் வள்ளி, சுந்தரவல்லியானாள். இந்த அன்னையின் பெயரை வைத்தே ஊரும் வள்ளியூர் என்றானது.

கோயிலில் வள்ளியம்மைக்குத் தனி சந்நதி அமைந்திருப்பதும், இந்தப் பெயர்க் காரணத்துக்குப் பொருத்தமாக விளங்குகிறது. தொண்டைநாட்டின் மேற்பட்டி என்ற ஊருக்கு அருகே உள்ளது வள்ளி மலை. வள்ளியை நோக்கி முருகனை ஈர்த்த மலை என்றும் சொல்லலாம்! இந்த மலையடிவாரத்தில் நம்பி என்ற வேடுவர் தலைவன் கோலோச்சி வந்தான். ஒருசமயம் வேடுவப் பெண்கள் மலைமீது தினைவனத்தில் பணிபுரியச் சென்றபோது, ஒரு மரத்தடியில் பெண்சிசு ஒன்று அழுதபடி கிடந்ததைக் கண்டார்கள்.

உடனே அதை எடுத்துச் சென்று தலைவன் நம்பியிடம் ஒப்படைத்தார்கள். தெய்வீகப் பொலிவுடன் விளங்கிய அந்தக் குழந்தைக்கு அப்போதே வள்ளி என்று பெயர் சூட்டி தம் குழந்தையாக ஏற்று வளர்க்க ஆரம்பித்தனர் நம்பியும் அவன் மனைவியும். வள்ளி வேடுவப் பெண்ணாகவே வளர்ந்தாள். சிறுமிப் பருவம் அடைந்தவுடன் வேடுவ சம்பிரதாயப்படி அவளை தினைப்புனத்தைக் காக்கும் பணிக்கு அனுப்பி வைத்தான் நம்பி. முற்றி, அறுவடைக்காகக் காத்திருக்கும் தினைகளைக் கொத்தித் தின்ன வரும் பறவைகளை ஆலோலம் பாடியபடி, கவண்கல் வீசி விரட்டினாள் வள்ளி.

அந்தத் தனிமை நேரத்தில் அவள் மனதில் சேவற்கொடி, வேல், மயில் சகிதமாக முருகன் காட்சி தந்தான். இது அவளுடைய தெய்வீக முற்பிறவியின் பலன். அப்போது வான்வழியே சென்ற நாரதர், அவளுடைய ஒயிலான தோற்றம் கண்டு வியந்தார். இந்த சுந்தரிக்கேற்ற சுந்தரன் முருகன்தான் என்று தீர்மானித்தார். உடனே மால்மருகனிடம் சென்று, தான் கண்டதை விவரித்தார். முருகனும் வள்ளியை மணம்புரிய மனம் கொண்டான். மானிடப் பெண்ணான அவளை அடைய மானுட ரூபத்தில் செல்வதுதான் சரி என்று தீர்மானித்தான். வேடனாய் உருமாறிச் சென்றான்.

அவளைப் பார்த்ததும் மையல்கொண்டான். நேரடியாகவே அவளை மணக்க விரும்புவதாக அவன் சொன்னபோது, வள்ளி அதிர்ந்துதான் போனாள். வேடுவப்பெண்ணிற்கு வேடன்தான் பொருத்தம் என்றாலும், அது எப்படி திடுதிப்பென்று முடிவெடுப்பது? மருண்ட அவள் திகைத்து நின்றபோது வேடுவர்கள் சிலர் அங்கே வந்தார்கள். எங்கே அவர்கள் தங்கள் இருவரையும் பார்த்து விபரீதமாக கற்பனை செய்து கொண்டு விடுவார்களோ என்று பயந்த வள்ளி, அங்கிருந்து சென்றுவிடுமாறு முருகனை வேண்டினாள்.

அவனோ பளிச்சென்று வேங்கை மரமாகி நின்றான். வந்தவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாததால் வள்ளியிடம் உணவுப்பொருட்களை வழங்கிவிட்டுத் திரும்பினார்கள். வாலிபத்தோற்றத்தில் வந்து தன் காதலை அவளுக்குப் புரிய வைப்பது கடினம் என்றுணர்ந்த முருகன், பிறர் மீது இயல்பாக உரிமை எடுத்துக் கொள்ளத்தக்க வயோதிகனாக வந்தால் அது இயலும் என்று கருதினான். உடனே முதியவராக மாறினான். வள்ளியை நெருங்கினான். பெரியவர் என்ற சலுகையில் அவருக்கு உபசாரம் செய்தாள் வள்ளி.

உடனே அவர், ‘தாகம் தீர்க்கத்தண்ணீர் தந்தாய், பசி தீர்க்க உணவு தந்தாய். காமம் தீர என்ன தரப்போகிறாய்?’ என்று கேட்டபோது அரண்டு போனாள். யோகித் தோற்றத்தில் ஒரு போகியா! பொல்லாத கிழவர் இவர் என்று புரிந்துகொண்டாள். உடனே அவரை விட்டு விலகி ஓடினாள். முருகன் தன் தமையன் விநாயகரை உதவிக்கு வருமாறு வேண்டினான். அவரும் தம்பியின் அவாவைப் புரிந்துகொண்டு யானையாக உருக்கொண்டு வந்து வள்ளியை பயமுறுத்தினார். யானை தன்னைத் தாக்கிவிடக்கூடாதே என்று கலங்கிய வள்ளி, ஓடிப்போய் வயோதிகர் மடியில் விழுந்தாள்.

பளீரென்று பேரொளி தோன்றியது, வடிவேலுடன் தோன்றினான் முருகன். அக்கணமே பேருவகை கொண்டாள் வள்ளி. தான் ஏற்கெனவே மணக்க நினைத்திருந்த கந்தவேள் இப்போது தானாக வந்து என்னை தாரமாக்கிக் கொள்ள வந்திருக்கிறான்! ஆனாலும், தான் வேடுவப் பெண்ணாயிற்றே என்ற தாழ்வுணர்ச்சியால் தடுமாறினாள். ஆனால், அவளுக்கு இப்பிறவி இப்படித்தான் விதித்திருக்கிறது என்று விளக்கி அவளைக் கடிமணம் புரிந்து கொண்டான் முருகன்.

விவரம் தெரிந்து வெகுண்டெழுந்து வந்த நம்பியையும் அவனது படைகளையும் முருகன் எதிர்கொள்ள, அந்தப் பரம்பொருளே தன் மருமகனாகிவிட்ட பேரானந்தத்தில் நம்பிராஜன், முருகன் தாள் பணிந்து வள்ளியை அவனுக்கு மணமுடித்து வைத்தான். இப்படி வள்ளியை மணம்புரிந்த முருகன், கொலுவிருக்கும் திருத் தலத்தின் நுழைவாயில் வடக்கு நோக்கியிருக்கிறது. உள்ளே கிழக்கிலுள்ள சரவணப் பொய்கையை நோக்கி தரிசனம் தருகிறான், சுந்தரவல்லி – அமிர்தவல்லி சமேத சுப்ரமண்யன். கோயிலுக்குக் கிழக்குப் பக்கத்திலும் ஒரு வாசல் இருக்கிறது.

அப்போதெல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலையான மகேந்திர கிரியிலிருந்து நீர் அருவியாக வீழ்ந்து, சரவணப் பொய்கையை அடைந்திருக்கிறது. இப்போது மழைநீர்தான்! பக்கத்திலேயே இன்னொரு பெரிய தீர்த்தமும் உள்ளது. இது முருகனின் தெப்பம் வலம் வருவதற்கென்றே உண்டானது. பிறநாட்களில் பொதுமக்களின் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

குகைக்கோயில் என்பதால் மூலவரை வலம்வர இயலாது. அதற்காகவே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கோயிலைச் சுற்றி கிரிவல ஏற்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். குன்றின் மீது சுப்ரமண்யரின் கருவறை விமானம் கவின் மிகு சிற்பங்களுடன் வண்ண மயமாகக் காட்சியளிக்கிறது. கோயிலினுள் ஆஜார்ய விநாயகர் தரிசனம் அருள்கிறார்.

யானை உருவில் வந்து வள்ளியைப்பயமுறுத்தி, தம்பி முருகனிடம் அடைக்கலம் புக வைத்த விநாயகர் இவர். ஆச்சரியம் என்றால் பலமிக்க ஒருவனைத் தஞ்சமடைதல் என்று பொருள். அதுவே ஆஜார்ய என்றாகி விட்டது! உள்ளே வலப்பக்கம் சனீஸ்வரர், கர்ப்பகிரகத்துக்கு முன்னால் காசி விஸ்வநாதர் – விசாலாட்சி அருள்பாலிக்கிறார்கள். துவார பாலகர்களைக் கடந்து கருவறைக்குள் பார்வையை செலுத்தினால், எண்ணெய்த்தீபங் களின் ஒளியில் சுப்ரமண்யரை, தேவியருடன் காணலாம். மின் ஒளியின்றி இயற்கையான குகை பின்னணியில் ஐயனை தரிசிப்பது மெய்சிலிர்க்கும் பக்தி அனுபவம்.

அர்த்த மண்டபத்திலிருந்து வலது பக்க வாசல் வழியாகச் சென்றால், தனி சந்நதிகளில் ஜயந்தீஸ்வரரும், சௌந்தர்யநாயகி அம்மனும் அருளாசி வழங்குகிறார்கள். கருவறை மண்டபத்து இடது பக்க வாசல் வழியாகச் சென்றால், தலப்பெயரை நிரூபிக்கும் வகையில் வள்ளியம்மை தனி சந்நதியில் பேரருள் புரிகிறாள். இந்த சந்நதிக்குப்பின்னால் குகைச் சுவரில் விநாயகர் – சாஸ்தா – சிவன் மற்றும் அஷ்ட கன்னியர் திருவுருவங்களைக் காணலாம். கோயிலின் பிரதான திருவிழா, தாரக வதம். பிற முருகத் தலங்களில் சூரசம்ஹார கொண்டாட்டம் நடைபெறும்.

இங்கே முருகனின் தளபதியான வீரபாகுவை சிறைப்படுத்தி, இம்சையும் படுத்திய தாரகனை முருகன் இத்தலத்தில் வதம் செய்தான். ஆகவே இங்கே தாரகசம்ஹாரம்தான் விசேஷம். சில ஆண்டுகள் திருவாங்கூர் சமஸ்தான நிர்வாகத்தின் கீழ் இருந்ததால், இக்கோயிலில் சில சம்பிரதாயங்கள் இன்றும் கேரள பாணியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

அருணகிரிநாதர் தன் ஒரே பாடலால் (‘அல்லில் நேருமின் அதுதானும் அல்லதாகிய உடல் மாயை – கல்லில் நேரவ்வழி தோறும் கையன் நானும் உலையலாமோ – சொல்லில் நேர்படு முதுசூரர் தொய்யவூர் கெடவிடும் வடிவேலா – வல்லிமாரிரு புறமாக வள்ளியூருறை பெருமாளே’) இத்தலத்தைப் போற்றித் தொழுதிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே குறிப்பிட்டபடி இத்திருத்தலத்தின் புராணம் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தும் சாட்சியங்களை இப்போது பார்க்கலாம். முருகன் முதியோனாக உருமாறி வந்த காரணத்தால் பண்டாரவளை மற்றும் கிழவனேரி என்ற ஊர்கள் இப்பகுதியில் உள்ளன. அதேபோல, விநாயகர் வந்ததால் ஆனைக்குளமும் உள்ளது. வள்ளியின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனை சிறப்பிக்கும் வகையில் நம்பியாறு, நம்பிக்கோயில், நம்பியன்விளை, நம்பித் தோப்பு, நம்பிக்கிணறு என்றெல்லாமும் இன்றும் விளங்குகின்றன.

விநாயக யானையைக் கண்டு வள்ளி அஞ்சியதால், ஒரு கிராமம் அச்சம்பாளையம் என்ற பெயர் கொண்டுள்ளது. வள்ளியூர் நாயகியான வள்ளியம்மையையும் அவளை ஆட்கொண்ட முருகவேளையும் தரிசித்து இன்னல், இடர் களைந்து ஒளி மிகுந்த வாழ்வு பெறுவோம். கோயில் தொடர்புக்கு: 04637-222888; 97914 33020.

தொகுப்பு: பிரபுசங்கர்

The post வளம் பல அருள்வாள் வள்ளியூர் நாயகி appeared first on Dinakaran.

Tags : Vallyur ,Tirunelveli ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!