×

ரூ.1.40 கோடியில் மேம்பாட்டு பணிகளால் நடைபயிற்சிக்கு பயன்படும் மரியன் ஊரணி: சாத்தூர் மக்கள் வரவேற்பு

 

சாத்தூர், மே 3: சாத்தூர் மரியன் ஊரணி பூங்காவில் தேங்கியுள்ள தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, பூங்காவை சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சாத்தூர் நகர் பகுதியில் நாற்பது ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் பெரும்பான்மையானவர்கள் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் பணிபுரிபவர்கள். குறைந்த வருவாய் உள்ளதால் அதிகளவில் பணத்தை செலவு குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். நகர் பகுதி மக்களின் பொழுதை போக்கவும், நடை பயிற்சி செய்வதற்கும் இடம் இல்லாமல் ரயில் நிலையம் நடை மேடை, நகர் பகுதியில் உள்ள சாலையை காலை மாலை நேரங்களில் நடை பயிற்சி செய்வதற்கு பயன்படுத்தி வந்தனர்.

சாலையில் நடை பயிற்சி செய்வதால் வாகனங்களால் விபத்து ஏற்படுவதும் அதில் உயிர் பலியாவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனால் விபத்தில் உயிரிழப்பை தடுக்க பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் வசதிக்காக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்புக்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கி வழங்கிய நிதி ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் மரியன் ஊரணியில் மழை தண்ணீரை தேக்குவதற்கு வசதியாக ஊரணியின் உள்பகுதி சுற்று சுவர்கள் முழுவதும் கற்களை வைத்து கட்டுமான பணிகள் செய்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடை பயிற்சி செய்வதற்கு வசதியாக கரையின் மேற்பரப்பு முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

நடை பயிற்சி செய்வதற்கு ஊரணிக்கு வரும் பொதுமக்கள் ஊரணியில் தேங்கியிருக்கும் தண்ணீரால் விபத்து ஏற்படாமல் இருக்க சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். அதில் பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்து வருகிறார்கள். மேலும் மரியன் ஊரணியில் மழை நீர் சேமிப்பதால் ஊரணியை சுற்றியுள்ள புதுகாலனி, ஒரிஜினல் கினற்று தெரு, சிதம்பரம்நகர், மெஜூரா கோட்ஸ் காலனி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளின் ஆழ்துளை கினறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உப்பு தண்ணீர் சுவையாக மாறியுள்ளது. சாத்தூர் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் விடுமுறை நாட்களில் தங்களின் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.

The post ரூ.1.40 கோடியில் மேம்பாட்டு பணிகளால் நடைபயிற்சிக்கு பயன்படும் மரியன் ஊரணி: சாத்தூர் மக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Marion Pani ,Chatur ,Chatur Marion Park ,
× RELATED சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது