×

கெஜ்ரிவாலை ஒழிக்க பாஜக முயற்சி; மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ₹830 கோடி செலவா?.. குஜராத் நிர்வாகி மீது வழக்கு; ஆம்ஆத்மி எம்பி காட்டம்

புதுடெல்லி: மனதின் குரல் குறித்து ஆம்ஆத்மி குஜராத் தலைவர் விமர்சித்ததற்காக அவர் மீது வழக்குபதியப்பட்டது. டெல்லி முதல்வரை ஒழிக்க பாஜக முயல்வதாக ஆம்ஆத்மி எம்பி குற்றச்சாட்டினார். ஆம்ஆத்மி கட்சியின் குஜராத் பிரிவு தலைவர் இசுதான் காத்வி என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். இந்த நிகழ்ச்சி குறித்த அவரது பதிவில், ‘ஒவ்வொரு மனதின் குரல் நிகழ்ச்சிக்கும் சுமார் 8.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி, 100 மனதின் குரல் நிகழ்ச்சிகளுக்காக ஒன்றிய அரசு இதுவரை ரூ.830 கோடி செலவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், அந்தப் பதிவை அவர் நீக்கினார். நீக்கப்பட்ட பதிவின் படத்தைப் பகிர்ந்து ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) அளித்த விளக்கத்தில், ‘மனதின் குரல் நிகழ்ச்சியின் விளம்பரங்களுக்காக இதுவரை மொத்தம் ரூ.8.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அத்தொகை செலவிடப்பட்டதாக வதந்தி பரப்பும் இப்பதிவு தவறானது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அடிப்படை ஆதாரங்களின்றி தவறான தகவல்களைப் பரப்பியதாக இசுதான் காத்வி மீது அகமதாபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஆம்ஆத்மி எம்பி தேசியும், செய்தித் தொடர்பாளருமான ராகவ் சத்தா கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் ஒரு அரசியல் நிகழ்ச்சியை கேலி செய்ததற்காக இசுதான் காத்வி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விருது பெற்ற மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் ஆளானது தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் இச்சம்பவத்தில் தொடர்புடைய பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். ஆனால் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகுதான் டெல்லி காவல்துறை பாஜக எம்பி மீது எப்ஐஆர் பதிவு செய்தது.

ஒன்றிய பாஜக அரசு இரண்டு வகையான சட்டங்களை வைத்துள்ளது. ஒன்று பாஜக தலைவர்களையும் நண்பர்களையும் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. மற்றொன்று எதிர்க்கட்சித் தலைவர்களை, குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களை குறி வைத்து வழக்குகளை போடுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அரசியல் ரீதியாக ஒழிக்கவும், ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்கவும் முயற்சித்து வருகிறது. அதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளையும் காவல்துறையையும் தவறாகப் பயன்படுத்துகிறது. ஆனால் மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் ஆம்ஆத்மி பெற்றிருப்பதால் பாஜகவின் கனவு பலிக்காது’ என்றார்.

The post கெஜ்ரிவாலை ஒழிக்க பாஜக முயற்சி; மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ₹830 கோடி செலவா?.. குஜராத் நிர்வாகி மீது வழக்கு; ஆம்ஆத்மி எம்பி காட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kejriwal ,Gujarat ,Amadmie ,MP Katham ,New Delhi ,Amaatmy Gujarat ,Delhi ,Amadmy ,
× RELATED இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி...