×

கோபி யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

 

கோபி: கோபி நகரில் நான்கு வழிச்சாலை திட்ட பணிகளை முடிப்பதற்கான ஆலோசனை கூட்டம் கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. சித்தோட்டில் இருந்து கவுந்தப்பாடி, கோபி வழியாக மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக சித்தோடு முதல் கோபி அருகே கரட்டடிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு 375 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

14 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிலையில் 22 மாதங்கள் முடிவுற்ற நிலையில் இதுவரை சுமார் 70 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை. பல இடங்களில் வடிகால் அமைக்கும் பணி கூட தொடங்கப்படவில்லை. பாலம் அமைக்கப்பட உள்ள இடங்களில் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளது. அதேபோல கோபி நகராட்சி எல்லையான கரட்டூரில் இருந்து சாந்தி திரையரங்கு வரை பல இடங்களில் வடிகால் கூட அமைக்கவில்லை. இந்நிலையில் கோபி யூனியன் அலுவலகத்தில் கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நான்கு வழிச்சாலை திட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் கருத்துகளை கேட்டதை தொடர்ந்து மே 4ம் தேதி தொடங்கி, 15ம் தேதிக்குள் 12 நாளுக்குள் முடிப்பது என்றும் மே 4,6,9,10,12,15 ஆகிய தேதிகளில் கோபி பேருந்து நிலையத்தில் இருந்து சாந்தி திரையரங்கு வரையிலும், மே 5, 8,11,13 ஆகிய தேதிகளில் பேருந்து நிலையத்தில் இருந்து கரட்டூர் வரையிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முழுமையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெறும் என்றும், மின் விநியோகம் நிறுத்தப்படும் நாட்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கோபி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ்வரன், யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, முன்னாள் நகராட்சி தலைவர் பி.என்.நல்லசாமி, கோபி இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, ஆல் டிரேடர்ஸ் அசோசியேசன் தலைவர் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோபி யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : MLA ,Gobi Union ,Gopi ,Gopi MLA ,KA Sengottaiyan ,Gopi Union ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...