×

வெயிலால் வறண்ட ஒமதேப்பள்ளி ஏரி: கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

சூளகிரி: கடும் வெயிலால் வற்றிய ஒமதேப்பள்ளி பெரிய ஏரிக்கு, கெலவரப்பள்ளி அணையில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சூளகிரி ஒன்றியம், தியாகசனப்பள்ளி ஊராட்சி பகுதியில், ஒமதேப்பள்ளி கிராமத்தில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு ஓசூர் ெகலவரப்பள்ளி அணை நிரப்பி வெளியேறும் உபரிநீர், கால்வாய் வழியாக கொண்டு வரப்படுகிறது. கடந்தாண்டு பரவலாக மழை பெய்து, கெலவரப்பள்ளி அணை நிரம்பியதால் கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஓமதேப்பள்ளி பெரிய ஏரி நிரம்பியது. இந்த ஏரியின் மூலம் டி.கே.நகர், மோத்துகானப்பள்ளி, சின்ன மோத்துகானப்பள்ளி, பெரிய மோத்துகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்கிறது. இந்த ஏரியின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயமும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீரும் கிடைக்கிறது.

தற்போது கோடை வெயில் வாட்டியெடுப்பதால், ஒமதேப்பள்ளி பெரிய ஏரியில் தண்ணீர் வற்றியுள்ளது. இதனால் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த தண்ணீரை நம்பி சாகுபடி செய்த பயிர்களை காப்பாற்றவும், பொதுமக்களுக்கு கோடையில் தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்கவும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து கால்வாய் மூலம், ஓமதேப்பள்ளி ஏரிக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெயிலால் வறண்ட ஒமதேப்பள்ளி ஏரி: கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Omathepalli Lake ,Kelavarappalli dam ,Soulakiri ,Oamadepalli ,Omantepalli Lake ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...