×

பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி திருநங்கைகள் திருப்புமுனையாக இருக்க வேண்டும்-கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அறிவுரை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின்கீழ் திருநங்கைகள் தொழில் தொடங்க மானிய கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். அனைவரையும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஸ்டெல்லா வரவேற்றார். பின்னர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திருநங்கைகளுக்கு மானிய கடன் உதவி திட்டம் மற்றும் இலவச தையல் இயந்திரம் உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் இந்த ஆண்டு நிதியாண்டிற்கு திருநங்கைகள் சொந்த தொழில் துவங்கிட அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த 19 திருநங்கைகளுக்கு சொந்த தொழில் துவங்கிட ₹9 லட்சத்து37 ஆயிரத்து 544 மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் திட்டத்தின்கீழ் 41 தகுதியான நபர்களுக்கு தலா ஒரு இயந்திரம் ₹5992/- வீதம் 2 லட்சத்து 45 ஆயிரம் என மொத்தம் 12 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை திருநங்கைகள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றத் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். திருநங்கைகள் என்பவர்கள் பிறக்கும் போதே திருநங்கைகளாக பிறக்கப்படுவதில்லை. அவர்கள் இறைவன். சிவபெருமான் கூட ஆண் பாதி பெண் பாதியாக உருவெடுத்து பிறந்து அர்த்தநாரீஸ்வரராக இந்த பூமியில் அவதரித்தார்.

இது போலத்தான் திருநங்கைகளும் அர்த்தநாரீஸ்வரராக உள்ளார்கள். எனவே நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக இருக்க வேண்டும். உங்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மானிய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன்களை பெற்று தங்கள் வாழ்க்கையில் சொந்தக் காலில் நின்று முன்னேறி வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அதேபோல் பெற்றோர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைக்கிறேன். தங்கள் குழந்தைகள் இதுபோன்ற திருநங்கைகளாக மாறினால் அவர்களை நீங்கள் அரவணைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து நீங்கள் அவர்களை பாதுகாக்க வேண்டும். இந்த பூமியில் மூன்றாம் பாலினம் என்பவர்கள் நம்மை போன்ற மனிதர்கள் தான். அவர்களை மனிதர்களாக பாவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பெற்றோர்கள் முன் வர வேண்டும். அவர்களை ஒதுக்க கூடாது. அவர்கள் மனதை புண்படுத்த கூடாது.

இன்று அரசுத்துறையில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையில் கூட அதிக அளவில் திருநங்கைகள் காவலர்களாகவும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவும் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான் மாவட்ட கலெக்டராக பணியாற்றும் போது கூட சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளில் திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். எனவே திருநங்கைகள் மற்றவர்களுக்கு திருப்புமுனையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி திருநங்கைகள் திருப்புமுனையாக இருக்க வேண்டும்-கலெக்டர் பாஸ்கரபாண்டியன் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Department of Social Welfare and Women's Rights ,Tirupattur District Collector's Office ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...