×

அனல் பறக்கும் பிரசாரம்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜ மூத்த தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர். இதனால் பிரசாரத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது. மே 10ம் தேதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி முக்கிய வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூரு, வடகர்நாடகா, தென்கர்நாடகா பகுதிகளில் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றும் 40 சதவீத கமிஷன் பாஜ ஆட்சிக்கு 40 இடங்களை கொடுங்கள் போதும். 150 இடங்களை காங்கிரசுக்கு கொடுங்கள் என்று தனக்கே உரிய பாணியில் அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடக மக்கள் பிரச்னையை பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்கும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் அவருக்கு கல்லறை தோண்ட முயற்சிப்பதாக பேசுவது முறையா? என்று மக்களிடம் கேள்வி எழுப்பி வருகிறார். காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால் ஒன்றியத்திலும், கர்நாடகாவிலும் பாஜ ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுப்பது போன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பிரசாரத்தில், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தருவது சட்டவிரோதமானது என்று 4 சதவீத இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தி பேசிவருகிறார். காங்கிரசை மட்டுமல்ல மதசார்பற்ற ஜனதா தளத்தையும் அவர் தாக்கி பேசிவருகிறார்.

இந்நிலையில், கர்நாடகாவில் ‘சிவோட்டர்ஸ்’ இதுவரை ஆறு முறை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. சமீபத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் வெற்றிக்கு வாய்ப்புள்ளதாகவே குறிப்பிட்டுள்ளது. தற்போது வரை காங்கிரசுக்கு சாதகமாகவே கர்நாடக வாக்காளர்கள் இருப்பதால் அதை நிலை நிறுத்திக்கொள்ள, பிரசாரத்தின் போது எந்தவித சர்ச்சை கருத்துகளையும் முன்வைக்க வேண்டாம் என்று ஸ்டார் பேச்சாளர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பிரச்னையை மட்டும் எடுத்துக்கூறி ஓட்டு சேகரியுங்கள் என்றும் கூறியுள்ளது. ஆனால் பாஜ தலைவர்கள் காங்கிரசை வம்புக்கு இழுப்பது போன்று பேசி வருகிறார்கள். இதற்கிடைய ஒரு கருத்துக்கணிப்பில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் மீண்டும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பழைய மைசூரு மண்டலத்தில் குமாரசாமியின் மஜத கட்சிக்கு 38 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருத்து கணிப்பு முடிகள் தெரிவிப்பதால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. பாஜவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் இஸ்லாமியர்களின் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என்று சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து சிக்கமகளூரு சென்ற அவர் பாஜ பொது செயலாளர் சி.டி.ரவியை ஆதரித்து பேசுகையில், சி.டி.ரவிக்கு ஓட்டு போட்டு முதல்வராக்குங்கள். அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசியதால் கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலிலும் அனல் பறக்கும் கர்நாடக தேர்தல் களத்தில் வெற்றி யாருக்கு என்று அடுத்த இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.

The post அனல் பறக்கும் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Baja ,Karnataka Assembly election ,Thermal Flying Propagation ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...