×

10 சென்ட் நிலத்தில் 80 ரக நாட்டுத் தக்காளி

பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்த இளம் உழவர்

காய்கறிகளில் தக்காளிக்கு தனி இடம் உண்டு. தக்காளி இல்லாமல் எந்த உணவும் தயாரிப்பதில்லை என்றே சொல்லலாம். கிலோ ₹100க்கு விற்றாலும் தாய்மார்கள் தக்காளி இல்லாமல் சமையல் செய்வதில்லை. இப்படி சமையலில் தக்காளிக்கு முக்கியவத்துவம் கொடுக்கின்றனர். மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள தக்காளி ரகத்தில் நமக்கு தெரிந்ததோ, ஒரு சில ரகங்கள் மட்டுமே.நம் முன்னோர்கள் பயன்படுத்திய, பல விதமான தக்காளி விதைகளை சேகரித்து ஒரே தோட்டத்தில் 80 விதமாக தக்காளி விதைகளை விதைத்து பாரம்பரிய தக்காளி ரகங்களை மீட்டெடுத்துவருகிறார். அவர்தான், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரதீப்குமார். டிப்ளோமோ இன் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படித்துள்ளார். படிப்புக்கான வேலையில் ஆர்வம் இல்லாததால், வீட்டின் அருகே சொந்த நிலத்தில் நூறு விதமான நாட்டு காய்கறிகளை விதைத்து இயற்கை விவசாயத்தில் களமிறங்கியுள்ளார்.

மேலும், நமது பாரம்பரியக் காய்கறி விதைகளை சேகரித்து, பலவிதமான காய்கறிகளை அறுவடை செய்து, வீட்டிற்கு தேவையானது போக, மற்ற காய்கறிகளை விற்பனை செய்து லாபமும் பார்க்கிறார். அதோடு தக்காளி ரகங் களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி மறைந்த விதைகளை மீட்டு எடுத்தும் வருகிறார். அதன்படி தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பினருடன் இணைந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்கிருந்து 80 விதமான நாட்டுத் தக்காளி விதைகளை சேகரித்துள்ளார். அதனை அவருடைய 10 சென்ட் நிலத்தில் நட்டு செடியாக்கி வளர்த்துவருகிறார்.

ஒரு மாலைப் பொழுதில் தக்காளித் தோட்டத்தில் இளம் விவசாயி பிரதீப்குமாரை சந்த்தித்தோம் ‘‘நம் முன்னோர்கள் விதைத்து அதையே உணவுக்கு பயன்படுத்திவந்து காலபோக்கில் மறைந்து போனவைகள்தான் இந்த தக்காளி ரகங்கள். உலக அளவில் 12,000 ரக தக்காளி விதைகள் உள்ளன. விதை சேகரிப்பு பயணத்தின் மூலம் எனக்கு 80 ரக தக்காளி விதைகள் கிடைத்தன. அதனை தோட்டத்தில் நட்டு வளர்த்து வருகிறேன். இதன்மூலம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் விதைகளை அதிமாக உற்பத்தி செய்ய வேண்டும், அதனை மற்றவர்களுக்கும் வழங்கி அவர்களும் இதையே விதைத்து அந்த தக்காளிகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற சேவை மனப்பான்மை மட்டுமே. நாம் பல்வேறு பெரிய அளவிலான உணவகங்களுக்கு செல்கிறோம், அவர்கள் தக்காளியில் செய்த பலவிதமான உணவுகளை நமக்கு பட்டியலிட்டு எந்த வகை உணவு வேண்டும் என்று கேட்கிறார்கள், இது எல்லாம் ஒருசில தக்காளி ரகங்களில் செய்யப்பட்டவை அல்ல. இது போன்ற பலவிதமான தக்காளி ரகங்களில் உற்பத்திசெய்து அதன் மூலமாகவே உணவங்களில் தக்காளி சார்ந்த புதுப்புது உணவுகள், சூப்கள் தயாரிக்கப்படுகிறது என்பது தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே கிராமங்களில் மறைந்த நம் பாரம்பரியமாக பயன்படுத்திய தக்காளியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு அதை உணவிற்கு பயன்படுத்தி அனைவரும் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். என்னிடம், 80 விதமான தக்காளி ரகங்கள் உள்ளன.

அதில், திராட்சைத் தக்காளி, சிறப்பு, காட்டு, இளஞ்சிவப்பு, கறுப்பு செர்ரி, சிறிய காட்டு ஜாமுன், சிப்புக் குடம், மஞ்சள்குடம், பழுப்பு குடம், கருஞ்சிவப்பு, கருமஞ்சள், கும்கும்சேகரி, சிவப்புகொடி, இளஞ்சிவப்புக்கொடி, மதனப்பள்ளி தக்காளி, காசி, மடிப்பு தக்காளி, மஞ்சள்கோலி, ஆப்பிள், முப்படை, சிவப்பு வரி, கறுப்பு வரி, பிளம் தக்காளி, கறுப்பு பிளம், சிவப்பு உருட்டு, கொடி பிளம் தக்காளி, மஞ்சள் உருட்டு, பச்சை வரி, கருப்பு வரி, இதய தக்காளி, ரோமன், போளூர், பெரிய பிளம், இன்டிகோ, சிவப்பு வால் தக்காளி, கறுப்பு அழகி, பூசணி, சிவப்புப் பூசணி தக்காளி, ஊதா பூசணி தக்காளி, வேலன்டைன் தக்காளி, காங்கேயன், மடிப்பு, மஞ்சள் முப்பட்டி தக்காளி, மஞ்சள் வரி, கறுப்பு தக்காளி என்பன உள்பட மொத்தம் 80 வகையான தக்காளி விதைகள் விதைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. 80 ரக தக்காளி செடிகளையும் இயற்கை முறையிலே வளர்த்து வருகிறேன். கொடிவிதமான தக்காளிகளையும் வளர்த்து வருகிறேன். இவ்வாறு இவர் வளர்த்து வரும் 80 விதமான புதுப்புது ரக தக்காளிகளை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வேளாண், தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் வந்து பார்க்கின்றனர். அவர்களுக்கும் தக்காளி விதைகள் மீட்கும் விதங்களை விளக்கமாக எடுத்து கூறுகிறேன். விதைகளை இலவசமாகவும், குறைந்த விலைக்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி நடவு முறை:

முதலில் காலியாக உள்ள விளை நிலத்தில் மாட்டுச் சாணம் நிரப்பி ஏர் உழ வேண்டும். பின்னர் நிரந்தர வேளாண்மைக்கான மேட்டுப் பாத்தி ஏற்படுத்த வேண்டும். தக்காளி விதையை நாமே தயாரிப்பதால், தக்காளியை வெயிலில் ஒரு நாள் வைக்க வேண்டும். நிழலில் 7 நாள் வைக்க வேண்டும். காற்று போகாதபடி ஒரு மாதம் அறைக்கான வெப்பநிலையில் வைக்க வேண்டும். பின்னர் அந்த விதையை ஒரு மாதம் விதையைக் கண்ணாடி டப்பாவில் வைக்க வேண்டும். பின்னர் நாற்று போட வேண்டும். 5 நாள் செடி முளைக்கும். 25வது நாள் நாற்று எடுத்து நடவு செய்ய வேண்டும். 45வது பூ எடுத்து, காய்க்கும், பழம் என்றால் 90 நாள் ஆகும். 90 முதல் 100 நாட்களில் அறுவடை செய்யலாம். பின்னர் தொடர்ந்து அதே செடிகளில் 2 முறை அறுவடை செய்யலாம். 20 முறை வரையில் அதிகபட்சம் அறுவடை செய்யலாம்.” என்கிறார்.

சுழல்நீர் தெளிப்பான் முறையில் தண்ணீர் பாய்ச்சல்

10 சென்ட் பரப்பளவில் நட்டு வளர்த்து வரும் 80ரக தக்காளிச் செடிகளுக்கு சுழல்நீர் தெளிப்பான் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த சுழல்நீர் தெளிப்பான் மூலம் தண்ணீர் விடும்போது தண்ணீர் செடிமேல் படும், அதில் விளையும் தக்காளிக்கும் சேதாரம் ஆகாது, இதற்கான செலவும் குறைவு தான் ஆகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புக்கு
பிரதீப்குமார்: 96558 93668

The post 10 சென்ட் நிலத்தில் 80 ரக நாட்டுத் தக்காளி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!