×

புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புழல்: புழல் ஏரி உபரிநீர் கால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் உபரிநீர் கால்வாய், ஏரியின் மதகிலிருந்து செங்குன்றம், சாமியார் மடம், வடகரை, பாபா நகர், தண்டல்கழனி, புழல், திருநீலகண்ட நகர், காஞ்சி அருள் நகர், தமிழன் நகர், சடையங்குப்பம் உட்பட பல பகுதிகள் வழியாக எண்ணூர் வரை செல்கிறது. சுமார் 25 கிலோமீட்டர் தூரம் இந்த கால்வாயில் சுற்றி உள்ள வீடுகள், தனியார் நிறுவனங்கள், அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட செங்குன்றம் பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, செங்குன்றம் சாமியார் மடம் முதல் எண்ணூர் வரை உள்ள உபரிநீர் கால்வாயினை ஆய்வு செய்து கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் கழிவுநீர் விடும் தனியார் நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீடுகளை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், கழிவுநீரை விடுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘உபரிநீர் கால்வாயில் பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. கழிவு பொருட்களை சிலர் வீசிவிட்டு செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட செங்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் கழிவுப்பொருட்கள் கலந்து மழைக்காலங்களில் ஏரி நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படும் காலங்களில், தண்ணீர் செல்ல முடியாமல் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு பொருட்கள் மற்றும் கழிவு நீரை விடும் தனியார் நிறுவனம், அரிசி ஆலை, வீடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Puzhal lake ,Chennai ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...