×

கோடி பாவங்கள் தீர்க்கும் கோமடி சங்கு

ஆதியும் – அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியாய்த் திகழும் சிவப்பரம்பொருளின் அருள்மிகுந்த செயல்கள் இந்த மண்ணுலகில் பற்பல இடங்களில் நடைபெற்றுள்ளன. அவற்றை அளவிடுவது மிகவும் கடினம். அப்படிப்பட்ட அற்புதம் மிகுந்த திருத்தலமாக போற்றப்படுகிறது பெரும்பேர் கண்டிகை. பெரும்பேர் கண்டிகை என்றதுமே நம் எல்லோர் நினைவிலும் வருவது இங்கு குன்றின்மீது குடிகொண்டருளும் கந்தக் கடவுளைதான்.

அந்த அளவிற்கு முருகன் இங்கே பிரசித்தம். கந்தனின் பெருமையை இங்கே போற்றும் அன்பர்கள் இத்தலத்தினில் அருள்பாலிக்கும், அகத்திய மாமுனி வரால் வழிபடப்பெற்ற ஸ்ரீதான்தோன்றீஸ்வரரையும் வணங்கி மகிழ்கின்றனர். அதிசயமிக்க, அபூர்வமான கோமடி சங்கு உள்ளதும் இந்த தலத்தினில்தான். அது என்ன கோமடி சங்கு? அப்படி என்ன பெருமை இந்த சங்கிற்கு?

கோமடி சங்கு

மகாலட்சுமியின் ஸ்வரூபமாகத் திகழும் சங்குகள் வலம்புரி – இடம்புரி என இரண்டு வகைப்படும். இதில் நமது பூமியில் ஒரு கோடி இடம்புரி சங்குகளுக்கு பின்னரே ஒரு வலம்புரி சங்கு தோன்றுமாம். அதுபோல ஒரு கோடி வலம்புரி சங்குகளுக்கு பிறகு அபூர்வமான சிவன் சாமி ஒரு கோமதி பசுவின் மடி சங்கு தோன்றுமாம். இந்த சங்கினை பசுமாட்டினுடைய மடிக்காம்பின் கீழே வைத்தால் போதும். பசு தானாகவே பால் சுரக்கும். இந்த அதிசய நிகழ்வு இன்றளவும் நடைபெற்று வருவது மிகவும் வியப்பாகவும், பிரமிப்பாகவும் உள்ளது.

இந்த அதிசய சங்கு தோன்றி ஆயிரம் வருடங்கள் கடந்துவிட்டன. இச்சங்கு இத்தலத்தினில் மட்டுமே உண்டு என்பது இந்த தலத்திற்குரிய சிறப்பாகும். இந்த கோமடி சங்கினால் இத்தல ஈசற்கும் – அம்பிகைக்கும் பால் அபிஷேகம் செய்தால் பல கோடி பாபங்கள் தீர்ந்து, ஸ்ரீலட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும். இந்த செய்தியை திருவாவடுதுறை ஆதின ஓலைச்சுவடி சான்று கூறுகின்றது.

அகத்தியர்

கயிலையில் நடைபெற்ற பார்வதி – பரமேஸ்வரரின் திருமணத்தின்போது ஏற்பட்ட சமநிலை மாற்றத்தை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்பொதிகை மலைக்கு அனுப்பினார் அரனார். பொதிகைமலையை அடைந்தார் அகத்தியர். பூமி சமநிலை பெற்றது. பின்னர், சிவன் – பார்வதியின் திருமணக்கோலத்தைத் திருக்குற்றாலத்திலேயே கண்டு ஆனந்தம் அடைந்தார் அகத்திய முனிவர். அந்த பேரானந்தம் போதவில்லை. ‘‘அடியேன் எங்கெல்லாம் தங்களது திருமணக் கோலத்தை காண விரும்புகிறேனோ அங்கெல்லாம் தாங்கள் மணக்கோலம் காட்டி எம்மை மகிழ்விக்க வேண்டும்” என்று வரம் கேட்டார், குருமுனிகள். அதன்படியே ஆகட்டும் என்று வருமருளினார் சர்வேஸ்வரர்.

அவ்வாறு திருமணக்கோலம் கண்ட திருத்தலங்களுல் ஒன்றாக திகழ்கிறது இந்த பெரும்பேர் கண்டிகை. திரிபுர சம்ஹாரத்தின்போது, கணபதி அச்சுமுறித்த தலமான அச்சிறுபாக்கத்தில் இருந்து ஈசனை தடுத்து, அழைத்து வந்து இத்தலத்தில் திருமணக்காட்சியை அகத்தியருக்கு காட்டியருளியதால் இத்தல அம்பிகை தடுத்தாட்கொண்டநாயகி என்று போற்றப்படுகின்றாள்.

ஸ்ரீரண பத்திரகாளி

திருவக்கரையில் அரக்கியை அழித்த கையோடு, அட்டகாசம் செய்து வந்த சண்டன் மற்றும் முண்டனை இத்தலத்திலே அழிக்கின்றாள் ஸ்ரீகாளிதேவி. திருவக்கரையில் வக்ரகாளி என்று போற்றப்படும் ஸ்ரீகாளிதேவி இங்கே ரணபத்ரகாளி என்று அழைக்கப்படுகின்றாள். இச்சம்பவத்தை போற்றும் வகையில் ஆதிசங்கரர் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில்…. ‘‘சண்டமுண்டசுர நிஷூதின்யை நமஹ’’ என்று அம்பாளைப் போற்றி துதிக்கின்றார். மேலும், இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீரணபத்திரகாளியை விக்கிரமாதித்யன் பூஜித்து பேறு பெற்றுள்ளான். அதன் பின்னர் உறையூர் வெக்காளியை வழிபட்டதாக வரலாறு கூறுகின்றது.

ஸ்ரீகனக துர்கை

கற்காலம் முதலே கொற்றவை எனப்படும் துர்கையின் வழிபாடு நம் தமிழகத்திலே பிரபலமாக உள்ளது. அவ்வகையில் இத்தலத்தினில் எட்டு கரங்களுடன், மான் வாகனம் கொண்டு, எருமைக்கிடா மீது நின்றவண்ணம் வீற்றருளும் ஸ்ரீகனக துர்க்கை மிகவும் பழமையான தெய்வமாவாள். ஆதிகாலம் தொட்டு இந்த துர்கையை பலர் வழிபட்டு, தங்களது இன்னல்களை போக்கிக் கொண்டுள்ளனர். பல்லவர்களும், சோழர்களும் தங்களது போர் வெற்றிக்காக இந்த கனகதுர்கையை விசேடமாக வழிபட்டுள்ளனர்.

திருப்பணிகள்

முதலாம் இராஜராஜச் சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்ட இப்பதி, அவரது நன்கொடைகள் பலவற்றையும் பெற்றுள்ளது சிறப்புக்குரியது. இராஜராஜனது கல்வெட்டில் இவ்வூர், ‘‘ஜெயங்கொண்ட சோழமண்டலத்து, களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் ஸ்ரீமதுராந்தக சதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகை பெரும்பேறூர்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல பெருமான்…. ஸ்ரீகரணீஸ்வரர் என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. ‘‘திருபுவனநல்லூர்’’ என்றும் இப்பதி வர்ணிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1070 மற்றும் கி.பி. 1079-ஆம் ஆண்டில் முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் மற்றும் வீர இராஜேந்திரன் ஆகியோரது காலத்தில் இத்தலத்திற்கு செய்யப்பட்ட திருப்பணிகள் குறித்தும், அளித்த நன்கொடைகள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு அமுது படைக்கவும், ஆதிசைவ அந்தணர்களுக்கு ஜீவனம் செய்திடவும், நிலங்கள் ஒதுக்கியுள்ளனர். அதோடு, விளக்கெரிக்கவும், பசுக்களை தானமாக வழங்கியுள்ளனர்.

கற்கால மனிதர்கள்

கற்காலம் தொட்டு மனிதர்கள் இங்கு வாழ்ந்ததாக தொல்பொருள்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இத்தலத்தின் அருகே உள்ள மலையின் அடிவாரத்தில் பழங்காலத் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வரலாற்றுக் காலத்திற்கு முன்பே மனிதர்கள் இங்கே வாழ்ந்துள்ளனர் என்கிற பெருமையை இப்பதி பெற்றுள்ளது.

ஆலயம்

ஊரின் கீழ்த்திசையில் சிவாலயம் அமைதியான சூழலில் அமைப்பெற்றுள்ளது. கிழக்கு நோக்கி சிறிய ஆலயம். இராஜகோபுரம் காணப்படவில்லை. தென்முக வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், நேராக முதலில் அம்பிகை சந்நதி கொண்டு திகழ்கின்றாள். சிறிய திருமேனி. ஸ்ரீதடுத்தாட்கொண்டநாயகி என்று அழைக்கப்படுகின்றாள். அகிலாண்டேஸ்வரி என்கிற பெயரும் இங்கு அம்பிகைக்கு உண்டு. கிழக்குப்புறம் நந்தியும், கொடிமரமும் காணப்படுகின்றன.

நேராக மகாமண்டபம். ஸ்வாமி சந்நதி, அர்த்தமண்டபம், கருவறை அமைப்பில் அமைந்துள்ளது. முன்னே தலகணபதி வீற்றருள்கின்றார். கருவறையுள் கருணாமூர்த்தியாக அருட்காட்சி அளிக்கின்றார் ஸ்வாமி ஸ்ரீதான்தோன்றீஸ்வரர். சுயம்பு மூர்த்தமான இப்பெருமான் மீது செம்புக் குவளை நிரந்தரமாக சாற்றப்பட்டுள்ளது. இவருக்கு முன்னே நீர் நிரம்பிய கோமடி சங்கு வைக்கப்பட்டுள்ளது. சுற்றி வருகையில் தனிச் சந்நதியில் ஸ்ரீரணபத்ரகாளியும் அருகே ஜேஷ்டாதேவியும் தரிசனமளிக்கின்றனர்.

ஆலயத்திற்கு வெளியே வெட்டவெளியில் தனியாக எட்டுகரங்கள் கொண்டு திருவருள் புரிகின்றாள் ஸ்ரீகனகதுர்கா தேவி. அனேக சிவாலய விசேடங்களும் இங்கு சிறப்புடன் நடைபெறுகின்றன. ஆலயத்தின் வடமேற்கு திசையில் உள்ள மேடை ‘அகத்தியர் மேடை’ என்றழைக்கப்படுகிறது. இம்மேடையில் பழமையான ஆத்தி மரமும், அதை சுற்றி நான்கு புறமும் நான்கு நந்திகளும் உள்ளன. சனகர், சனாதனர், சனந்தனர், மற்றும் சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் நந்தி வடிவத்தில் இருப்பதாகவும், நடுநாயகமாக அகத்தியர் வீற்றிருப்பதாகவும் ஐதீகம்.

பலன்கள்

1. சித்ரா பௌர்ணமியன்று இங்கு ஆலயத்திற்கு வந்து, அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, அன்னதானம் செய்து, சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்திட, திருமண பாக்கியம் கிடைக்கும்.

2. ஸ்ரீகனக துர்கைக்கு இராகு காலத்தில் தீபமேற்றி வழிபடுவோர்க்கு திருமணப்பிரார்த்தி விரைவில் ஏற்படும். திருமணம் கைகூடியதும் இங்கு வந்து, துர்கைக்கு அபிஷேகம் செய்து திருமாங்கல்யம் செலுத்தி, அன்னதானம் செய்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.

3. சிவன் – பார்வதியை இங்கு 48 தினங்கள் அதிகாலையில் தீபமேற்றி, ஆலய வலம்வந்து வழிபடுவதும், பௌர்ணமியன்று விரதம் அனுஷ்டித்து, அன்னாபிஷேகம் மற்றும் கோதானம் செய்வதும் சத்புத்திர பேறினைத் தந்திடும்.

4. கோமடி சங்கினால் ஸ்வாமி – அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்வதால் பலகோடி பாபங்கள் தீரும்.

5. ஸ்ரீரணபத்திரகாளிக்கு சப்தமி திதியில் அபிஷேகம் செய்து, சுத்தமான நல்லெண்ணெயில் பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் மற்றும் 48 அகலினால் தீபமேற்றி, அன்னதானமும், வஸ்திரதானமும் செய்திட….பில்லி – சூனியம் மற்றும் சத்ருக்கள் பயம் நீங்கும். வியாபாரம் பெருகும். வீடு மற்றும் நிலங்களில் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கும்.

6. கல்வியில் தேர்ச்சி பெறவும், மன அமைதி கிடைக்கவும், அகத்தியர் தவம் செய்த தல விருட்சமான ஆத்திமரத்தின் கீழே அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு.

7. பௌர்ணமியில் இங்கு இரவு தங்கி வழிபட…சகல விதமான தோஷங்களும் கைவிட்டுபோகும். எல்லாம் வல்ல ஸ்ரீதடுத்தாட்கொண்ட நாயகி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரரை வணங்கி, வழிபட்டு வாழ்வில் வளம் பெறுவோம்.

வழி

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தொழுப்பேடு. அங்கிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பெரும்பேர் கண்டிகை. தொழுப்பேட்டிலிருந்து இங்கு வர ஆட்டோ வசதியுள்ளது.

தொகுப்பு: மோ.கணேஷ்

The post கோடி பாவங்கள் தீர்க்கும் கோமடி சங்கு appeared first on Dinakaran.

Tags : Lord Shiva ,earth ,Komati ,
× RELATED திருத்தெற்றியம்பலம் பள்ளிகொண்ட பெருமாள்