திருச்சி, ஏப்.25: ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நேற்று பார்வையிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், இது எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது’ என்றனர். திருச்சி மாவட்ட திமுக சார்பில், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் கடந்த 23ம் தேதி \”எங்கள் முதல்வர் எங்கள் பெருமை\” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆண்டுகால வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை நேற்றுமுன்தினம் நடிகர் பிரபு திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி அரங்கம் வருகிற 30ம் தேதிவரை நடைபெறுகிறது. தினமும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
முதல்வரின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்துள்ளார். கண்காட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் டாக்டர் கலைஞர் பங்கேற்ற மாநாட்டு புகைப்படங்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என திமுகவின் வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக இந்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
நேற்று கண்காட்சியை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் கூறுகையில், ‘இங்கு இடம் பெற்றுள்ள அனைத்து புகைப்படங்களும் தமிழக முதல்வரின் கடின உழைப்பையும் அவர் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு முன்னேறி இந்த இடத்திற்கு வந்தார் என்பதையும் மிக தெளிவாக விளக்கும் புகைப்படங்களாக அமைந்துள்ளது. இது எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது’ என்றனர். பொதுமக்கள் கூறுகையில், ‘இக்கண்காட்சியே தமிழக முதல்வரின் கஷ்டத்தை எங்கள் கண்முன் கொண்டு வருவது போல் அமைந்துள்ளது. அவர் எப்படி மக்களை சந்தித்தார்.
அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வுகள், அவர் கழகத்தை வளர்த்தெடுக்க செய்த தியாகங்கள் என அனைத்தும் எங்கள் கண்முன் வந்து செல்லக்கூடியதாக அமைந்துள்ளது’ என்றனர்.
நாள்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் புகைப்பட கண்காட்சியையும் தொடர்ந்து நடக்கும் பிரபல திரைப்பட சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளையும் காண்பதற்கு கூட்டம் கூட்டமாக வர தொடங்கியுள்ளனர். வடக்கு மாவட்ட திமுகவுக்குட்பட்ட முசிறி, மணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் கழக நிர்வாகிகளும் கூட்டமாக வந்து கண்காட்சியை கண்டு களித்தனர். இன்று மாலை பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் கண்காட்சியை பார்வையிடுகிறார்.
The post முதல்வரின் வாழ்க்கை வரலாறு புகைப்படக்கண்காட்சி எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி, உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது appeared first on Dinakaran.
