![]()
*மாடுகளுக்கு 140, ஆடுகளுக்கு 100 லிட்டர் ‘தண்ணீர்’
*எப்போது மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல வேண்டும்
*கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ‘டிப்ஸ்’
வருசநாடு : தேனி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்நடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் மட்டுமே மேய்ச்சலுக்காக வயல்வெளிகளுக்கு ஓட்டி செல்ல வேண்டும். அதிகளவில் தண்ணீர் பருக வைக்க வேண்டும் என கோடையில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை-மயிலை ஒன்றியம் என இரண்டு ஒன்றியத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் 200க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளனர். இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மலை சார்ந்த பகுதிகளாகவே உள்ளது. இதில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களுக்கு எந்த ஆற்றுப் பாசனமும் கிடையாது. மழையை எதிர்பார்த்து தான் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டிபட்டி பகுதிகளிலும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாததால் நீர்வரத்து ஓடைகள், கண்மாய்கள், குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. செடி, கொடிகளும் காய்ந்து காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது.
தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாமல் கால்நடை வளர்ப்போர் தவித்து வருகின்றனர். பொதுவாக கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றை அந்தந்த பகுதியில் உள்ள மலையடிவார பகுதிகளிலும், விவசாயம் இல்லாத தரை பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்காக அழைத்து செல்வார்கள். பருவமழை காலம் முடிந்து கால்நடைகளுக்கு இயற்கையான பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும். ஆனால் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் அனைத்து பகுதிகளும் வறண்டு காணப்படுகிறது.
கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்த போதும், இந்த ஆண்டு தொடக்கம் முதலே மழைகள் எதுவும் பெய்யவில்லை. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தரிசு நிலங்களில் வளர்ந்திருந்த செடிகள் அனைத்தும் காய்ந்து விட்டது. இதனால் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள் தற்போது கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை அழைத்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் வரை மேய்ச்சலுக்கு சென்று வந்தும் பசுந்தீவனங்கள் கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர். மலைப்பகுதி மற்றும் விவசாயம் அல்லாத தரிசு இடங்களில் தீவனங்கள் கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் பெறும் அவதியடைந்து வருகின்றனர். நகர் பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் சாக்கடை ஓரத்தில் இருக்கும் புல்களை மேய்ப்பதற்காக விடுகின்றனர். மாடுகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காமல் கடைகளில் வாங்கி தீவனங்களை வழங்குகின்றனர். கோடை முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளதால் கால்நடை வளர்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
அரிசி கழனிநீர் அதிகளவில் வேண்டாமேஇதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: ‘‘கால்நடை வளர்ப்போர் கோடை காலங்களில் அவற்றை மிகவும் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும். கலப்பின மாடுகளான ஜெர்சி உள்ளிட்ட பசுமாடுகள், காளைகள், ஆடுகள் உள்ளிட்டவைகளை நாம் பகல் முழுவதும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். ஆனால் கோடை காலங்களில் மேய்ச்சலுக்கு இதேபோல் அழைத்து செல்லகூடாது. காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் மட்டுமே கால்நடைகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிகளுக்கு ஓட்டி செல்ல வேண்டும். காலை 9 மணிக்கு மேல் அவற்றை வெயில் பாதிக்காத கொட்டகைகளில் அடைத்து வைக்க வேண்டும். அதிகளவில் தண்ணீர் பருக வைக்க வேண்டும்.
அரிசி கழனிநீர் அதிகளவில் மாடுகளுக்கு தரக்கூடாது. எள்புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு கடலை புண்ணாக்குகளை அதிகளவில் உணவாக வழங்க வேண்டும். வைக்கோல்களை நம்மில் பலர் மாடுகளுக்கு தீவணமாக வழங்குகின்றனர். வைக்கோல் அடர்த்தி மிகுந்ததால் கோடை காலங்களில் அது மாடுகளின் ஜீரண சக்தியை குறைக்கும். தினசரி 140 லிட்டர் அளவு தண்ணீர் மாடுகளுக்கும், 100 லிட்டர் தண்ணீர் ஆடுகளுக்கும் வழங்க வேண்டும். வெயிலில் அவற்றை கட்டிபோட கூடாது. நாய், கோழி போன்றவற்றையும் கோடைகாலத்தில் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும்.’’ என்றனர்.
குடற்புழு நீக்கம் செய்திடுவது நல்லது
கோடையில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:கோடையில் ஈக்களின் தொல்லையால் கறவை மாடுகள் அமைதியின்றி காணப்படும். ஈக்கள் அவற்றின் மீது அமர்வதாலும், கறவை மாடுகளை சுற்றி வட்டமிடுவதாலும் தொந்தரவுகள் ஏற்படும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும். தொழுவங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
சாணம், சிறுநீர் போன்ற கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். முடிந்த வரை கடுமையான வெப்பக்காலங்களில் கறவை மாடுகள் மீது 2 அல்லது 3 முறை தண்ணீர் தெளிக்கலாம். வெயில் அதிகமாக இருக்கும் போது மேய்ச்சலுக்கு அனுப்ப கூடாது. வெப்பத்தின் அளவு குறைவாக உள்ள காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்புவது நல்லது. கோடைகாலங்களில் இறைச்சி கோழிகளின் இறப்பு விகிதம் அதிகளவு இருக்கும். வெயில் காலங்களில் முட்டை கோழிக்கு 2.5 சதுர அடியும், இறைச்சி கோழிக்கு 1.5 சதுர அடியும் இடவசதி வேண்டும். பக்கவாட்டில் சாக்குகளை தண்ணீரில் நனைத்து தொங்க விட வேண்டும்.
வெப்பம் அதிகம் காரணமாக தளர்ச்சி அடையும் போது வைட்டமின் சி 500 மில்லி கொடுக்கலாம். எருமையின் தோல் பசு இனத்தின் தோலைவிட 5 மடங்கு கெட்டியானது. கறவை எருமைகள் சினைப்பருவத்திற்கு வரும் அறிகுறிகள் கோடையில் வெளிப்படையாக தெரியாது. இதனை ஊமை பருவம் என்று அழைப்பர். கோடை காலத்தில் எருமைகளின் இனவிருத்தித்திறனை அதிகரிக்க, நிழலான இடத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். அருகில் குளங்கள் இருந்தால் நீக்க விடலாம். அவ்வசதி இல்லாவிட்டால் நீரை தெளிக்கலாம்.
எருமைகளை எப்போதும் கட்டி வைக்காமல் விசாலமான அடைப்புகளில் சுதந்திரமாக திரியவிட வேண்டும். கோடையில் ஏற்படும் வறட்சியினால் ஆடுகளுக்கு மேய்ச்சல் கிடைப்பது அரிது. கோடையில் குடற்புழு தொல்லை இருப்பதால் குடற்புழு நீக்கம் செய்திடுவது நல்லது. இவ்வாறு கூறினர்.
The post தேனி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு கால்நடைகளுக்கு கோடை கொடுமையை குறைப்பது எப்படி? appeared first on Dinakaran.
