×

வேலாயுதம்பாளையம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

வேலாயுதம்பாளையம்: குரு பெயர்ச்சி முன்னிட்டு கரூர் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் இடம்பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு இரவு 10 மணியளவில் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வர் கோயிலில் உள்ள குரு பகவான் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், பன்னீர்,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி ,தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன் தினம் இரவு 11.27 மணியளவில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக நேற்று முன் தினம் இரவு கோயில் வளாகத்தில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டு, புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவான், தட்சிணாமூர்த்தி மற்றும் பரிவாரதெய்வங்களை தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையும் அர்ச்சனையும் நடைபெற்றது. இதேபோல புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோயிலில் உள்ள குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து 7 ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜை நடைபெற்றது.

The post வேலாயுதம்பாளையம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Bhagavalli ,Ambikai ,Sametha Meghapaleeswarar temple ,Nansei Pukulur ,Karur Thautupalayam ,
× RELATED கரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழை!