×

மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தல்; ஆட்டநாயகன் விருதுக்கு அர்ஷ்தீப்சிங்தான் தகுதியானவர்: பஞ்சாப் கேப்டன் சாம்கரன் பெருந்தன்மை

மும்பை: மும்பையுடனான வெற்றிக்கு கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்தான் முக்கிய காரணம். எனவே ஆட்டநாயகன் விருதை எனக்கு பதிலாக அவருக்கு வழங்கி இருக்கலாம் என்று பஞ்சாப் அணி கேப்டன் சாம்கரன் பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் நேற்றிரவு மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில்ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன் 55 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முக்கிய காரணமாக விளங்கினார்.

குறிப்பாக கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட, 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 3வது பந்தில் திலக் வர்மாவின் போல்ட்டை அர்ஷ்தீப் சிங் சிதறடித்தார். இதனால் கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் இம்பேக்ட் பிளேயராக நேஹல் வதேரா களமிறக்கப்பட்டார். ஆனால் 4வது பந்திலும் அர்ஷ்தீப் சிங் மிடில் ஸ்டம்பை உடைத்து அசர வைத்தார். கடைசி 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இறுதியாக பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

இந்த வெற்றிக்கு பின், ஆட்டநாயகன் விருது பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரனுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து சாம் கரனங கூறுகையில், வான்கடே மைதானத்தின் சூழல் அற்புதமாக உள்ளது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது. இந்த ஆட்டநாயகன் விருதினை எனக்கு பதிலாக, கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும். ஷிகர் தவான் காயமடைந்ததால், நாங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு அணியாக சிறப்பாக உருவாகி இருக்கிறோம். ஷிகர் தவான் விரைந்து குணமடைவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளோம். நிச்சயம் மோசமான ஆட்டத்தை விளையாடவில்லை என்று நம்புகிறேன். நிர்வாகம் மற்றும் உள்ளூர் வீரர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மகிழ்ச்சியாக விளையாடுகிறோம். ஐபிஎல் ஒரு நீண்ட தொடர். அதில் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை ஆடுவது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். எங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த விரும்ப
வில்லை’’ என்றார்.

The post மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தல்; ஆட்டநாயகன் விருதுக்கு அர்ஷ்தீப்சிங்தான் தகுதியானவர்: பஞ்சாப் கேப்டன் சாம்கரன் பெருந்தன்மை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Arshdeep Singh ,Samkaran ,Punjab ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்