×

லக்னோ மீண்டும் வீழ்ந்தது; பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. டெல்லியில் நேற்று நடந்த 64வது லீக் போட்டியில் லக்னோ-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் இளம் அதிரடி வீரர் ஜாக் பிரேசர், தொடக்கத்திலேயே அவுட் ஆக சற்று தடுமாறியது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் போரெல் 33 பந்துகளில் 58 ரன் விளாசினார். சாய் ஹோப் 38 ரன்களும், கேப்டன் ரிஷன் பண்ட் 33 ரன்களும் எடுக்க இறுதியில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 5 ரன்களிலும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 5 ரன்களிலும், தீபக் ஹூடா டக் அவுட் ஆகியும் குயின்டன் டீ காக் 12 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இருப்பினும் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார்.

ஹர்ஷத் கான் பவுலராக இருந்தும் ஆட்டத்தில் அதிரடி காட்டினார். அவர், 5 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதியில் லக்னோ அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்து தோல்வியை தழுவியது. வெற்றிக்கு பின் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், ‘நிச்சயமாக எங்களுக்கு நிக்கோலஸ் பூரான் ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்கினார். எங்களிடம் சில திட்டங்கள் இருந்தது. நாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாகவும் இருந்தது. அற்புதமாக பந்து வீசினோம். ஆரம்பத்தில் எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. காயம் ஏற்பட்டபோதும்கூட கடைசி வரை போட்டி போட்டு தொடரில் இருந்தோம். எனக்கு கடைசி போட்டிக்கு தடை விதிக்காமல் இருந்திருந்தால், ப்ளே ஆப் சுற்றில் இடம்பெற ஒரு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். தனிப்பட்ட முறையில் திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் ஆதரவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் களத்தில் இருக்க விரும்புகிறேன். எதையும் தவறவிட விரும்பவில்லை’ என்றார். டெல்லி வெற்றி பெற்றாலும் ஏறக்குறைய போட்டியில் இருந்து வெளியேறுவது உறுதியாகி விட்டது. ரன் ரேட்டில் மிக கீழே இருக்கும் லக்னோவும் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டது. தற்போது ஐதராபாத், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் ப்ளே ஆப் வாய்ப்பில் மோதி கொண்டிருக்கின்றன.

லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில், இந்த தொடர் முழுவதும் நாங்கள் பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நாங்கள் ஒருபோதும் நல்ல ஒரு தொடக்கத்தை பெறவில்லை. அதனால்தான் நாங்கள் இந்த நிலைக்கு வந்து விட்டோம்’ என்றார். இதுவரை நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்று 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 6, 7வது இடங்களில் உள்ளன. குஜராத், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.

The post லக்னோ மீண்டும் வீழ்ந்தது; பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Delhi ,Mumbai ,IPL ,Delhi Capitals ,64th league ,Dinakaran ,
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ