×

தேனிக்காரரிடம் இன்னும் மறைமுக விசுவாசம் காட்டும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கவர்மெண்ட் காரை கட்சி வேலைக்கு பயன்படுத்துறாங்களாமே… என்னா விஷயம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்துல அனைத்து ஆவின் தலைவர்களுக்கும் கவர்மெண்ட் கார் கொடுத்திருக்காங்க. இது அந்த டிபார்ட்மெண்ட்ல இருக்குற பணிகளை ஆய்வுசெய்றதுக்காக கொடுத்திருக்காங்க. அதேபோல கிரிவலம் மாவட்டத்துலயும் ஆவின் தலைவருக்கு கவர்மெண்ட்ல கார் கொடுத்திருக்காங்க. ஆறு அணியைச் சேர்ந்த இலை நிர்வாகி, மதர் பேரவையைச் சேர்ந்த 2 எழுத்து பெயர் கொண்டவர் தான் தலைவராக இருக்காரு. இவர் தான் காரை பயன்படுத்தி வர்றாரு. நிர்வாக பணிக்காக இந்த காரை பயன்படுத்துறத விட, கட்சி பணிக்குத்தான் அதிகம் பயன்படுத்துறாராம். கடந்த சில மாசத்துக்கு முன்னாடி, இலை கட்சி நிகழ்ச்சிகளுக்கும், இலை ஒன்றிய நிர்வாகிகள் கட்சி நிகழ்ச்சிகளுக்காகவும் தான் பயன்படுத்தியிருக்காங்க. நிர்வாக பணியை தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிக்கும் கவர்மெண்ட் கார் பயன்படுத்தி வர்றாங்களாம். அதுக்கான டீசல் செலவும் கவர்மெண்ட் கணக்குத்தானாம். இப்படி கவர்மெண்ட் காரை, கட்சி நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதை தடுத்து, கவர்மெண்ட் பணிக்கு மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கணும்னு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வெச்சிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேர்மன் பதவியில் நீடிக்க தினமும் புல்லட்சாமியை தரிசனம் பண்றாராமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் கதர் கட்சியின் ஆட்சி கவிழும் தருவாயில், அப்போதைய முதல்வர் சாமி, தனது விசுவாசியான சின்னசாமியை குழந்தைகள் நலக்குழுவின் சேர்மனாக நியமித்துவிட்டு சென்றார். அதன்பிறகு, சின்னசாமி கமிட்டிக்கு வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்காமல், புகாரில் தொடர்புடையவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கும் வேலையில் முழு நேரமும் ஈடுபட்டு வருகிறாராம். இதனால் அவரது காட்டில் ஒரே பணமழை தானாம். சேர்மன் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்பதால், 2024ம் ஆண்டு பிப்ரவரிக்கு மேல் அவரால் பதவியில் நீடிக்க முடியாது. பிறகு சம்பாதிக்கவும் வழியில்லாமல் போய்விடும். இதை உணர்ந்த சின்னசாமி எப்படியாவது புல்லட்சாமியின் விசுவாசியாக மாறிவிட வேண்டுமென திட்டமிட்டு இருக்கிறாராம். தற்போதுள்ள பதவியில் மூன்றாண்டுக்கு மேல் நீடிக்க முடியாது என்றாலும், புல்லட்சாமியின் விசுவாசியாக மாறிவிட்டால், வேறொரு கமிட்டியிலாவது சேர்மன் பதவியை கொடுத்து விடுவார். அதன்பிறகு, நம்முடைய ராஜதந்திரங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்ற பகல் கனவோடு வாரத்துக்கு 2 நாட்கள் புல்லட்சாமியை வந்து தரிசித்துவிட்டு செல்கிறாராம். மேலும் சேர்மனாக தொடர தில்லாலங்கடி வேலையை மறைமுகமாக செய்து வருகிறார். சின்னசாமியின் சேட்டை குறித்து அதிகாரி கந்தசாமி விசாரணை நடத்தி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரருடன் மறைமுக விசுவாசத்துடன் இருக்கும் மாஜி அமைச்சரை பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் மாஜி அமைச்சர் மணியானவர் வெளிப்படையாக சேலத்துக்காரருக்கு ஆதரவாக இருந்து வந்தாலும், மறைமுகமாக தேனிக்காரருக்கு விசுவாசுத்துடன் இருந்து வருகிறாராம். இந்த விவகாரம் தெரிய வந்த அணியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் கூட மணியானவரை நம்பி இருந்தால் நடுத்தெருவுக்கு தான் வர வேண்டியதிருக்கும். இதனால் அவருடன் நெருக்கத்துடன் இருக்காமல் கொஞ்சம் இடைவெளி விட்டே இருந்து வருவதோடு அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்களாம். சேலத்துக்காரரின் கை தற்போது ஓங்கி இருப்பதால் மணியானவர் தான் பயனடைவார். நமக்கு எந்த லாபமும் இல்லை. தேனிக்காரர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் மணியானவர் மறைமுகமாக விசுவாசத்துடன் இருந்து வருவது தெரிந்து கூட அவருக்கு தான் சேலத்துக்காரர் முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்பது அவரது அணியில் உள்ள நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கரன்சிகளை குவிக்குறாராமே அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது, கோவையில் சாலை துறையில் பணியாற்றிய பொறியாளர் ஒருவர், மாஜி அமைச்சர் ஒருவருக்கு உதவியாக செயல்பட்டார். இவரது மேற்பார்வையில் கோவை காந்திபுரத்தில் குழப்பமான இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. சிகரத்தில் ஏறுவது போன்ற டிசைனில் இப்பாலம் உருவாகியுள்ளது. இது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சை முடியும் முன், உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்ட குழப்பமான டிசைன் போட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளார், இந்த பொறியாளர். பாதி மேம்பாலம் மட்டுமே இவர் டிசைன் போட்டு, கடந்த இலைக்கட்சி ஆட்சி முடியும் முன் கமிஷனை அள்ளிவிட்டாராம். இடமாறுதலாகி வெளியூர் சென்ற இவர், ஒருசில மாதங்களிலேயே மீண்டும் கோவைக்கு வந்துவிட்டார். கோவை மேற்கு வெளிவட்ட சாலைப்பணி துவங்காமல் கிடப்பில் போட இவர்தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இவரது தில்லாலங்கடி வேலை வௌிச்சத்திற்கு வந்துவிட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போது, மேற்கு வெளிவட்ட சாலை முதல்கட்ட பணிகள் துவக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பொறியாளர் கறாராக கமிஷன் கேட்டு காண்ட்ராக்டர்களை மிரட்டி வருகிறாராம். இன்னும் சில தினங்களில் இவர் பணி ஓய்வு பெறப்போகிறாராம். ஓய்வு பெறும் முன் டெண்டரை ‘பைனல்’ செய்து செட்டில்மெண்ட் பெற வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறாராம். விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து, கீழ்மட்ட அதிகாரிகளை அழைத்து, கமிஷனுக்காக நெருக்கடி தருகிறாராம். கரன்சி குவிப்பதில் அதிவேகமாக பயணிக்கும் இவர், ரிடையர்டு ஆகும் முன் விஜிலன்ஸ் பிடியில் சிக்கி விடுவார் போல… என சக பொறியாளர்கள் கமாண்ட் அடிக்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்காரரிடம் இன்னும் மறைமுக விசுவாசம் காட்டும் மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji minister ,theniker ,wiki Yananda ,Peter ,AWN ,Tamil Nagadala ,
× RELATED மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அளித்த...