×

முதல்வர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தேனா? ஆம்ஆத்மி கட்சி 3, 4 பேருக்கு சொந்தமானது அல்ல: எம்பி ஸ்வாதி மாலிவால் ஆவேசம்

புதுடெல்லி: ஆம்ஆத்மி கட்சி ஒன்றும் 3, 4 பேருக்கு சொந்தமானது அல்ல அக்கட்சியின் பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் ஆவேசமாக கூறினார். ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலின் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்ற அக்கட்சியின் பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டார். இவ்விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஸ்வாதி மாலிவால் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘என்னை பாஜகவின் ஏஜென்ட் என்று ஆம்ஆத்மி கட்சியின் சில நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர்.

அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். கடந்த 2006ல் எனது இன்ஜினியர் பணியை விட்டு வெளியேறினேன். கெஜ்ரிவாலுடன் முழுநேர தன்னார்வலராக பணியாற்றினேன், அன்னா ஹசாரே அமைப்பின் மையக் கமிட்டி உறுப்பினராக இருந்தேன். என்னுடைய ரத்தமும் வியர்வையும் ஆம்ஆத்மி கட்சியை வளர்க்க உதவியது. எனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தற்போது எம்பி ஆக்கப்பட்டேன். எனக்கு கட்சிக்குள் சிலருடன் தனிப்பட்ட விரோதம் உண்டு.

நான் ஏன் தாக்கப்பட்டேன்? யாருடைய உத்தரவின் பேரில் தாக்கப்பட்டேன் என்பதை டெல்லி போலீசார் விசாரிப்பார்கள். ஆம் ஆத்மி கட்சி ஒன்றும் மூன்று, நான்கு பேருக்கு சொந்தமானது அல்ல. ஆம்ஆத்மி கட்சியிலேயே தொடர்ந்து இருப்பேன். முதல்வரின் இல்லத்திற்கு அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் சென்றதாகவும், அத்துமீறி நுழைந்ததாகவும், வலுக்கட்டாயமாக முதல்வரை சந்திக்க முயன்றதாகவும் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. முதல்வரின் பாதுகாவலர்கள் அனுமதிக்காவிட்டால், யாரும் முதல்வர் அலுவலகத்திற்குள் நுழைய முடியாது. எனவே பாதுகாவலர்களிடம் சண்டையிட்டுக் கொண்டு நான் முதல்வர் அலுவலகத்துக்குள் நுழையவில்லை. அத்துமீறி நுழைந்து இருந்தால், எப்படி நான் முதல்வர் இல்லத்தின் அறைக்கு சென்றிருக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

The post முதல்வர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தேனா? ஆம்ஆத்மி கட்சி 3, 4 பேருக்கு சொந்தமானது அல்ல: எம்பி ஸ்வாதி மாலிவால் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Aam Aadmi Party ,Swati Maliwal ,New Delhi ,Delhi ,Kejriwal ,Swati Maliwal Awesam ,
× RELATED டெல்லி ஆம் ஆத்மி அலுவலகத்தில் தீ