×

குடிநீர் வழங்க கோரி கடலாடி யூனியன் அலுவலகம் முற்றுகை

 

சாயல்குடி: ஏ.புனவாசல் பஞ்சாயத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலாடி ஒன்றியம் ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் புனவாசல், வடக்கு குடியிருப்பு, ஒத்தவீடு, சிறுகுடி, ஏ.வேப்பங்குளம், ஏ.பாடுவனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. புனவாசல் ஏகநாதர் கோயில் குளம் அருகே உள்ள ஒரு குழாயில் புனவாசல், ஒத்துவீடு, வடக்கு குடியிருப்பு கிராமமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து, அதனை தள்ளுவண்டியில் குடங்களை வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் அந்த குழாயிலும் முறையாக தண்ணீர் வருவது கிடையாது. ஒரு குடம் பிடிக்க அரை மணி நேரம் ஆகிறது. 3 கிராமமக்களுக்கு ஒரு குழாய் போதுமானதாக இல்லை. எனவே அனைத்து கிராமத்திற்கும் காவிரி கூட்டு குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கிராமமக்கள் கூறும்போது, புனவாசல் ஒத்தவீடு, வடக்கு குடியிருப்பு பகுதிக்கு 30 வருடங்களாக தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கியது கிடையாது. புனவாசலில் இருந்து போக வர 2 கிலோ மீட்டர் தள்ளுவண்டியில் தண்ணீர் எடுத்து வருகிறோம். டேங்கரில் விற்கப்படும் குடிநீரை குடம் ஒன்றிற்கு ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம்.
தண்ணீரின்றி ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்று வருகிறோம்.

எனவே புனவாசலில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி, அதன் மூலம் அனைத்து கிராமங்களுக்கு குழாய் இணைப்பு வழங்கி சீரான காவிரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
போராட்டகாரர்களில் போலீசார், துணை பி.டி.ஓ ரவி, குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் பேச்சுவார்த்தை நடத்தினர். 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

The post குடிநீர் வழங்க கோரி கடலாடி யூனியன் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kadladadi union ,Chayalgudi ,Kadaladi Union ,Cauvery ,A. Punavasal Panchayat.… ,Dinakaran ,
× RELATED பலாப்பழ சின்னத்திற்கு வாக்களித்து...