×

நவமணிகள் நமக்கு நன்மை தருமா?

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

நவமணிகள் என சொல்லக்கூடிய ரத்தினக்கற்களை மனிதன் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தி இருக்கிறான். நவமணிகளே நவகிரகங்களுடன் உள்ளதால் நவகிரகங்களின் காரகங்களாக கொண்டு அவற்றை அணிந்தால் மாற்றங்கள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. நவமணிகளுக்கு விலைமதிப்பற்ற கல் (Precious Stone) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் இவ்வுலகில் நம் கண்முன் ஏராளமான கற்கள் உள்ளன.

ஆனால், விலைமதிக்க முடியாத இந்த கற்கள் சாதாரண கற்களுக்கிடையே மறைந்து கிடக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் இயற்கையின் சக்திகளை தன்னுள் உள்வாங்கி சேமித்து இயற்கையின் சீற்றங்களினால் மாற்றம் ஏற்பட்டு இந்த சாதாரண கற்கள் ஒரு குறிப்பிட்ட ரத்தினமாக நவமணியாக உருமாற்றம் அடைகிறது. இந்த நவமணிகள் கற்களாலும் உயிர்களாலும் நீர் நிலை மற்றும் தாவரங்களால் இயற்கையாக உருவாக்கப்படுகின்றன. அதனை ஆராய்ந்து மனிதன் தனக்குச் சாதகமான பலன்களை பெற நவமணிகளை பயன்படுத்திக் கொள்கிறான் என்பதே உண்மை.

இந்தக் கற்களை நாம் சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்தும் போது அவை நம்மை உயர்த்தும் தன்மை கொண்டது. உழைத்தால்தான் நாம் உயர முடியும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நவமணிகளை சேர்க்கும் பட்சத்தில் நமது உழைப்பு வீணாகாமல் நமக்கு பயன் பெறக்கூடியதாக உள்ளது என்பதே உண்மையாகும்.

நவமணிகளும் தன்மைகளும்…

சூரியன்: சூரியன் கிரகத்திற்கு மாணிக்கம் (Ruby) என்ற நவமணியை அணியலாம். ரோஸ் வண்ணமுள்ளதாகவும் முற்றிலும் சிவப்பு நிறமுடையதாகவும் வண்ணங்கள் உள்ளது.. மாணிக்கம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு (Al2O3) என்ற வேதிப்பொருளால் ஆனது.

சந்திரன்: சந்திரன் கிரகத்திற்கு (Pearl) முத்துக்கற்களை அணியலாம். வெண்மை மற்றும் கிரே வண்ணங்களில் கிடைக்கின்றன. ஒரிஜினல் முத்துக்களை அணிவதால் குபேரனின் அனுக்கிரகம் நமக்கு உண்டாகும். முத்து என்ற நவமணி கால்சியம் கார்பனேட் (Caco3) என்ற வேதிப் பொருளால் ஆனது.

செவ்வாய்: செவ்வாய் கிரகத்திற்கு (Coral) பவழம் என்ற மணியை அணியலாம். இந்த பவழம் கால்சியம் கார்பனேட் (Caco3) என்ற வேதிப்பொருளால் ஆனது.

புதன்: புதன் கிரகத்திற்கு (Emerald) மரகதம் என்ற கற்களை அணியலாம். இந்த மரகதக்கல் பெரிலியம் அலுமினியம் சிலிகேட் என்ற வேதிப்பொருளால் ஆனது (Be3Al2(SiO3)6). இந்த கற்கள் மிகவும் கடினத்தன்மை இல்லாதக்கல் ஆகையால், இந்த கற்களை அணியும் போது அதிர்வுகள் உள்ள இடத்தில் நொறுங்கி போகும் தன்மையுடன் உள்ளது.

வியாழன்: வியாழன் கிரகத்திற்கு (Topaz) புஷ்பராகம் என்ற நவமணிகளில் ஒன்றை அணியலாம். புஷ்பராகத்தில் பல வகைகள் உண்டு. அதில் கனக புஷ்பராகம் சிறப்புடையதாக இருக்கிறது. கனகம் என்றால் தங்கம் எனப் பொருள். தங்கம் போன்று மஞ்சள் நிறத்தினை உடையக் கல் இந்த கனக புஷ்பராகம் ஆகும். இந்த புஷ்பராகம் அலுமினியம் சிலிகேட் ப்ளோரைட் (Al2sio4(f oh)2) என்ற வேதிப்பொருளால் ஆனது.

வெள்ளி: வெள்ளி கிரகத்திற்கு (Diamond) வைரம் என்ற கற்களை அணியலாம். நவமணிகளிலே இதுவே விலை உயர்ந்ததாகும். வைரங்களில் பல வகைகள் உண்டு. வைரம், கார்பன் (C) என்ற வேதிப்பொருளால் ஆனது. வைரத்தில் மட்டும் அதிக கவனம் தேவை. வாழ்வின் பல உயர்வுகளை தரவல்லது. சில நேரங்களில் அதள பாதாளத்தில் நம்மை தள்ளிவிடும்.

சனி: சனி கிரகத்திற்கு (Sapphire) நீலம் சிறந்ததாக உள்ளது. இந்தக் கல் அலுமினியம் டிரை ஆக்சைடு (Alo3) என்ற வேதிப் பொருளால் ஆனது. ராகு: ராகு என்ற சாயா கிரகத்திற்கு (Garnet) கோமேதகம் சிறந்ததாக உள்ளது. இது பசுவின் சிறுநீர் வண்ணத்தில் உள்ளதால் இந்த பெயர் வந்தது. கோமேதகம் கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Ca3Al2(SiO4)3) என்ற வேதிப்பொருளால் ஆனது. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், கட்டிகள் போன்றவை குணமாகும். வண்டி வாகன விபத்துகளில் நம்மை பாதுகாக்கும்.

கேது: கேது என்ற சாயா கிரகத்திற்கு (Catseye) வைடூரியம் சிறந்ததாக உள்ளது. பச்சையும் மஞ்சள் நிறமும் கலந்த கல்லாகும். இதனை தெய்வீகக் கல் என்றும் சொல்வர். பூனையின் கண்களை போன்று ஒளிர்வதால் catseye என்ற பெயர் உண்டு. இந்தக் கல் பெரிலியம் அலுமினேட் (BeAl2O4) என்ற வேதிப்பொருளால் ஆனது. எதையும் ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் உண்டாகும்.

நவமணிகளை எப்படி தேர்வு செய்து அணியலாம்?

ஜோதிடர்களின் ஆலோசனைகளை பெற்று அவர்கள் உங்களுக்கு இந்த ராசிக்கற்களை அணியலாம் என்று சொன்ன பிறகு, அதனை நீங்கள் வாங்கி அப்படியே அணிந்து கொள்ளக்கூடாது. அதனை நீங்கள் பரிசோதித்து கொள்ள வேண்டும்.

நல்ல நாட்களில் வாங்க வேண்டும். அதனை உங்கள் பாக்கெட்டுகளில் வைத்து உங்களுக்கு நடக்கும் நிகழ்வுகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். சுபமான நிகழ்வுகள் இருந்தால் மட்டுமே இந்த குறிப்பிட்ட நவமணிகளில் ஒன்றை அணிகலன்களில் பதித்து அணிந்து கொள்ளலாம்.

The post நவமணிகள் நமக்கு நன்மை தருமா? appeared first on Dinakaran.

Tags : Sivakanesan Navamanis ,Navamanidalis ,Nawagirakas ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்